மனிதர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பேச்சு, மொழி, எழுத்து என ஆரம்பித்து இப்போது எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. மேலும் நாளுக்கு நாள் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகளின் உச்சமாக அண்மையில் மூன்று மனிதர்களின் மூளைகளை இணைத்து அதன் வழியே அவர்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஆம்! இந்த நம்ப முடியாத அதிசயத்தை அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மற்றும் கார்னகி மெலன் பல்கலைக்கழத்தை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகள் தான் இந்த சாதனையை செய்து காட்டியுள்ளனர்.
தொழில்நுட்பங்கள்
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை இந்த சோதனை BrainNet என்று அழைக்கப்படுகிறது. தகவல் பரிமாற்றம் என்பதைத் தாண்டி இந்த முறை மூலம் மனித மூளை எப்படி இயங்குகிறது? எனத் தெளிவாக அறிய முடிகிறது. இதற்காக Electro encephalograms (EEGs) மற்றும் Transcranial magnetic stimulation (TMS) என்ற இரு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். Electroencephalograms என்பது மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளை அளவிடும் சோதனையாகும். Transcranial magnetic stimulation என்பது காந்தப் புலங்களை பயன்படுத்தி மூளையில் உள்ள நரம்பு செல்களை தூண்டும் முறையாகும்.
உலகிலேயே முதன் முதலில் கண்டறியப்பட்ட மூளைகளுக்கு இடையேயான, துளையிடப்படாத தகவல் பரிமாற்ற முறை BrainNet தான்!
முதலில் இந்த குழுவினர் இந்த சாதனங்களைக் கொண்டு இரண்டு நபர்களின் மூளையை எலக்ட்ரோடுகள் மூலம் இணைத்து அதன் மூலம் இருவரும் 20 கேள்விகள் கொண்ட வினா விடை விளையாட்டு ஒன்றை நடத்தி வெற்றி கண்டனர்.
Credit: sickchirpse
சோதனை
இந்த ஆய்வில் தகவல் அனுப்பும் இருவர் EEG எலக்ட்ரோடுகள் மூலம் இணைத்து அவர்களை டெட்ரிஸ் (Tetris) விளையாட்டை விளையாட செய்துள்ளனர். டெட்ரிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை அது ஒரு வீடியோ கேம். பல வடிவங்களில் பிளாக்குகள் கீழே வரும் போது அதைச் சரியாக திருப்பி கீழே சேர்த்து அதை நீக்கிக் கொண்டே வர வேண்டும். எனவே இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் ஒவ்வொரு பிளாக்கையும் சுழற்ற வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
BrainNet மூலம் விளையாடியதில் சராசரியாக 81.25 சதவீதம் சரியாக விளையாடியுள்ளனர்!
அதாவது இருவர் தகவல் அனுப்புபவராகவும் (Senders) மூன்றாவது நபர் தகவல் பெறுபவராகவும் (Receiver) இருப்பார். தகவல் அனுப்பும் இருவருக்கும் விளையாட்டின் முழுத் திரையும் தெரியும். அதாவது மேலிருந்து வரும் பிளாக்குகள் மற்றும் கீழே சேர்ந்து இருக்கும் பிளாக்குகள் என எல்லாமே தெரியும். ஆனால் விளையாட முடியாது. அதே சமயம் தகவல் பெறுபவரக இருக்கும் மூன்றாவது நபருக்கு மேலிருந்து வரும் பிளாக்குகள் மட்டுமே தெரியும். இவர் தகவல் அனுப்பும் இருவரிடமும் இருந்து தகவலைப் பெற்று அதற்கேற்றபடி பிளாக்கை சுழற்ற வேண்டும் அல்லது சுழற்றாமல் இருக்க வேண்டும்.
Credit:Bigthink
செயல்பாடு
ஒரு பிளாக் மேலிருந்து வரும் போது தகவல் அனுப்பும் இருவரும் திரையின் இரு பக்கங்களிலும் ஒளிரும் இரு LED க்களில் ஒன்றை உற்று பார்க்க வேண்டும். YES என்னும் தேர்வுக்கு 17 Hz LED யையும், NO என்னும் தேர்வுக்கு 15 Hz LED யையும் பார்க்கவேண்டும். இந்த இரு LED க்களும் வேறுபட்ட தகவல்களை அளிக்கும். இந்த இருவரின் தகவல் இணைந்து EEGs மூலம் பெறப்பட்டு பின்பு ஒரு டீகோடர் (decoder) வழியாக அனுப்பப்படும். டீகோடரில் பெறப்படும் அந்த சமிக்கை மூன்றாவது நபரான தகவல் பெறுபவருடன் இணைக்கப்பட்டிருக்கும் TMS மூலமாக அவரது மூளையில் இருக்கும் Occipital cortex என்னும் பகுதியை அடையும்.
Credit: Awaycande
அனுப்புநர்கள் 17 hz LED யை (YES) பார்க்கும் போது இந்த சமிக்கை வலுவானதாக இருக்கும். அப்போது ஒரு ஒளி போன்ற மறைமுக ஃப்ளாஷ், தகவல் பெறுபவரின் மூளையில் தோன்றும். இதன் மூலம் அவர் பிளாக்கை சுழற்ற வேண்டும் என புரிந்து கொண்டு சுழற்றுவார். அதுவே 15 hz LED யை (NO) பார்க்கும் போது இந்த சமிக்கை வலு குறைவாக இருப்பதால் சுழற்ற வேண்டாம் என புரிந்து கொள்வார். டெட்ரிஸ் விளையாட்டின் அண்மை வெர்சன் வேகமானது என்பதால் BrainNet ல் பழைய வெர்சனை கொண்டு சோதனை செய்துள்ளனர். இதனால் தகவலை அனுப்ப, அனுப்புபவர்கள் இருவருக்கும் 15 நொடிகள் கிடைக்கும்.
Credit: Techxplore
15 பேரை 5 குழுக்களாக பிரித்து இது போல டெட்ரிஸ் விளையாட்டை விளையாட செய்துள்ளனர். அப்படி விளையாடியதில் சராசரியாக 81.25 சதவீதம் சரியாக விளையாடியுள்ளனர்.
நம்பிக்கை
இந்த சோதனை தொடக்கக் கட்டத்தில் உள்ளது என்பதால் தற்போதைக்கு ஒளியைப் பார்ப்பதன் மூலம் ஒரே ஒரு தகவலைத் தான் இதன் மூலம் அனுப்பமுடிகிறது. அதாவது கணினி மொழிப்படி ஒரு பிட் (bit) தான் அனுப்புகிறது. உலகிலேயே முதன் முதலில் கண்டறியப்பட்ட மூளைகளுக்கு இடையேயான, துளையிடப்படாத தகவல் பரிமாற்ற முறை இது தான். இதே முறையைக் கொண்டு மூளைகளை இணைக்கும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக்கூட உருவாக்க முடியும் என்கின்றனர் இந்தக் குழுவினர். இந்த ஆராய்ச்சிகள் இன்னும் பல முன்னேற்றங்களைக் காணும் போது மூளையைப் பற்றி நாம் அறியாத நமக்கு புரியாமல் இருக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.