மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் காலங்காலமாகவே நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதன் மூலம் தான் பல மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடிகிறது. இந்த சிகிச்சைகள் எல்லாமே உயிர் இருக்கும் வரை தான் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் விஞ்ஞானிகள் சிலர் இறந்த மூளையை மீண்டும் செயல்பட வைத்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்! ஆம். முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே இறந்த மூளையில் சில செல் மற்றும் மூலக்கூறு செயல்பாடுகளை மீண்டும் செயல்பட வைத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள Yale பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி குழுவினர் தான் இந்த சாதனையை செய்துள்ளனர்.
Credit: The New york Times
மூளை ஆராய்ச்சிகள்
பொதுவாக ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் தடை படும் போது மூளையின் மின் செயல்பாடு மற்றும் விழிப்புணர்வு அறிகுறிகள் சில நொடிகளிலேயே நின்றுவிடும். அதுவே ஆற்றல் என்று பார்க்கும் போது அது சில நிமிடங்கள் கழித்து தான் குறையத் தொடங்கும். ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனை செய்ததில் இறந்த உடலில் இருந்து பல மணி நேரம் கழித்து எடுத்த சில திசு மாதிரிகளின் செல்கள் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளன.
இது உயிருள்ள மூளை அல்ல. மாறாக செல் ரீதியாக செயல்பாட்டில் உள்ள மூளை!!
இது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய பன்றி இறைச்சி ஆலைகளில் இருந்து 32 இறந்த பன்றிகளை வாங்கி அவற்றின் மூளையை எடுத்து பரிசோதித்துள்ளனர். பன்றிகளின் மூளையும் கிட்டத்தட்ட மனிதர்களின் மூளையை போலவே அளவில் பெரியது என்பதால் அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த சோதனையில் கடந்த ஆறு வருடங்களாக இந்த குழு உருவாக்கிய BrainEx எனப்படும் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.
BrainEx
பன்றி இறந்த 4 மணி நேரத்திற்கு பிறகு அதன் மூளையை BrainEx அமைப்பில் வைத்து 6 மணி நேரத்திற்கு அந்த மூளையின் தமனிகளுக்கு ஒரு வித பிரத்யேக ரசாயன திரவத்தை செலுத்தியுள்ளனர். இது உண்மையான ரத்தம் கிடையாது. ரத்தத்திற்கு மாற்றாக இந்த விஞ்ஞானிகள் தயாரித்தது ரசாயன திரவம். இது உடல் வெப்பநிலையான 37 டிகிரி செல்சியஸில் மூளைக்கு செலுத்தப்பட்டது. இந்த ஆறு மணி நேரத்தில் விஞ்ஞானிகள் மூளையை கவனித்த போது BrainEx செய்யப்பட்ட மூளைக்கும் எதுவும் செய்யப்படாத மூளைக்கும் இடையே தெளிவான வித்தியாசத்தை காண முடிந்துள்ளது.
விளைவுகள்
இந்த BrainEx அமைப்பு மூளையின் செல்லுலார் மற்றும் திசு அமைப்பை பாதுகாத்ததோடு செல் இறப்பை குறைத்து சில செல் செயல்பாடுகளை மீட்டெடுத்தது தெரிய வந்தது. அதாவது சில செல்கள் குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி வளர்ச்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ளன. சில செல்கள், மூலக்கூறுகள் மூலம் தூண்டும் போது அதற்கான பதில் விளைவுகளைத் தந்தன. அறிவியல் ரீதியாக பார்த்தால் இது உயிருள்ள மூளை அல்ல. மாறாக செல் ரீதியாக செயல்பாட்டில் உள்ள மூளை.அதே நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாத மூளையின் செல்கள் கடுமையாக சீரழிந்துவிட்டன. இதன் மூலம் செல்லுலர் செயல்பாடுகளை மீட்டெடுக்கும் மூளையின் திறன் ஆராய்ச்சியாளர்கள் நினைத்ததை விட மிக அதிகம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
இடது பக்கம் BrainEx செய்யப்படாத மூளை, வலது பக்கம் BrainEx செய்யப்பட்ட மூளை, பச்சை நிறம்-நியூரான்கள், சிவப்பு நிறம்-ஆஸ்ட்ரோசைட்டுகள், நீல நிறம்-செல் அணுக்கள்| Credit: NPR
அதே சமயம் ஆராய்ச்சியாளர்களுக்கு மூளை உணர்வுகளோடு இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அது அவர்களின் நோக்கமும் அல்ல. குறிப்பிட்ட செயல்பாடுகளை மரணத்திற்குப் பிறகு மீண்டும் மீட்டெடுக்க முடியுமா என்பதை ஆய்வு செய்வதே இந்த குழுவின் நோக்கம். மூளை செயலில் இல்லாத போது தான் மூளை செல்கள் இன்னும் நன்றாக பாதுகாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கருதியதால் இதற்காக உபயோகப்படுத்தும் திரவத்தை மூளையின் நரம்பு செயல்பாடுகளை நிறுத்தும் பண்புடைய சில ரசாயனங்களைக் கொண்டு தயாரித்துள்ளனர். அதனால் உணர்வுகளை மீண்டும் கொண்டு வரவே முடியாது. அதாவது மூளை எதுவும் சிந்திக்கவோ அல்லது உணரவோ முடியாது.
Credit: Science Alert
மூளையில் ரத்த ஓட்டம் நின்று விட்டால் அது உடைந்து நொறுங்க தயாராக இருக்கும் கட்டடத்திற்கு சமம். வேண்டுமானால் BrainEx அமைப்பு மூலம் சில பகுதிகளை மட்டும் காப்பாற்றலாம் என்றும், ஒரு வேளை உணர்வுகள் ஏற்படுவது போல ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டாலும் இந்த சோதனையை உடனடியாக நிறுத்தி விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர் இந்த குழுவினர். இதற்கான வழிமுறைகள் ஏற்கனவே தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏனெனில் உணர்வுகள் உள்ள மூளையில் இது போல சோதனைகள் செய்யும் போது பல நெறிமுறைகளை (Ethics) கவனிக்க வேண்டும்.
முக்கியத்துவம்
6 மணி நேரம் மட்டுமே சோதனையை செய்துள்ளதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியது மிக அவசியம். இதற்கு பயன்படுத்தும் ரசாயனத்தில் மனித ரத்தத்தில் உள்ள பல பொருட்கள் இல்லை என்பதால் இது முற்றிலும் வேறுபட்டது.
ஆனால் இதுவரை மூளை பற்றிய ஆய்வுகள் இரு பரிமாணத்தில் மட்டுமே சாத்தியப்பட்ட நிலையில் முதல் முறையாக இதன் மூலம் முப்பரிமாணத்தில் மூளை பற்றி ஆராய முடிவதால் சிக்கலான செல்லுலார் தொடர்பு மற்றும் இணைப்பு பற்றி இன்னும் அதிகமாக அறிய முடியும். அதே சமயம் மூளை குறைபாடுகள், மூளை நோய்கள், மூளையில் மருந்துகள் செய்யப்படும் விதம் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.
இதனால் இப்போது உடனடியாக எந்த பலனும் இல்லை என்றாலும், சோதனை பல கட்டத்தை எட்டி மனித மூளைகளில் செயல்படுத்த முடிந்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் ரத்த ஓட்டம் பாதித்து மூளை செயலிழக்கும் போது அதை மீட்க வழி கண்டுபிடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இந்த குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள்.