பறவைகள் வலசை போவதை பார்த்திருக்கிறீர்களா? சொந்த நாட்டிலேயே பல ஊர்களுக்கு நம்மால் வழி கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம்மைவிட அறிவில் குறைந்த பறவைகள் எப்படி கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன? ஆகாயத்தில் யார் அதற்கு வழிகாட்டுவார்கள்? அதற்கான பதில் வானத்தில் இல்லை. பூமிக்கடியில் இருக்கிறது. ஆமாம். பூமியின் காந்தப்புலத்தினை பறவைகள் உணர்வதாலேயே அவற்றால் ஒரு இடத்தைவிட்டு இன்னோரு இடத்திற்கு சரியாக பறந்துசெல்ல முடிகிறது.

செல்போன் டவர்களால் பறவைகளின் இந்த காந்தப்புல உணர்வுத்திறன் பாதிப்புக்கு உள்ளாவதால் பல பறவை இனம் அழிவுக்குத் தயராகிக்கொண்டிருக்கிறது. நாம் பார்க்கப்போவது அதைப்பற்றியல்ல. சிறிய பறவைகளால் உணர முடிந்த காந்தப்புலத்தை மனிதர்களாகிய நம்மால் உணர முடியுமா? இந்தக் கேள்விக்கு நேற்றுவரை முடியாது எனவும் இன்று முடியும் எனவும் பதிலளிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மனித மூளையால் காந்தப்புலத்தை உணர முடியும் என சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. காந்தபுலத்தால் மூளையில் ஏற்படும் அதிர்வுகளைப் பதிவு செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
சோதனை
மூடிய அறையில் நடத்தப்பட ஆய்வில் அறையின் காந்தப்புலமானது தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. காந்தப்புலத்தின் திசையை மாற்றும்போது மூளையில் உருவாகும் அலைகளின் திசைகளும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் ஆய்வில் பங்குபெற்ற மனிதர்களுக்கு காந்தப்புலம் மாற்றப்படுவது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லை. இதனால் தான் காந்தப்புலம் நமது பழக்க வழக்கங்களில் ஆதிக்கம் செலுத்துவது இல்லை. அறையின் காந்தப்புலமானது குறைக்கப்படும் போது மூளை செயல்படும் விதமும் நுட்பமான அளவில் குறைந்துள்ளன.
மூளை செல்கள்
இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களின் மூளையை ஸ்கேன் மூலம் ஆராய்ந்த மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆச்சர்யமான ஆராய்ச்சிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். புவி இயற்பியல் ஆராய்ச்சியாளரான Joseph Kirschvink, ” மூளையின் காந்தப்புலத்தை மாற்றுவதன் மூலம் முன்னோர்களின் சில அதிசய குணங்களை மூளையில் பதிந்திருக்கும் டி.என்.ஏ தகவல்களை மீட்டெடுக்கலாம் என்கிறார். ஆனால் இம்மாதிரியான ஆராய்ச்சிகளில் நாம் இப்போதுதான் தவழக் கற்றுக்கொண்டு இருக்கிறோம். நடந்து விழுந்து பின்னர் எழுந்து ஓடுவதற்கு காலம் பிடிக்கும்.