அமெரிக்காவின் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் நீர்த்தேக்கத்தில், 2015 ஆம் ஆண்டு சூரிய ஒளியால் நீர் ஆவியாவதை தடுக்க கருப்பு நிற பந்துகள் (Shade Balls) கொட்டப்பட்டன என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம் தான். 12.5 பில்லியன் லிட்டர் நீர் உள்ள 175 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த நீர்த்தேக்கத்தில் 96 மில்லியன் கருப்பு பந்துகள் லாரிகள் மூலம் கொட்டப்பட்டன. ஆனால் இந்த பந்துகள் கொட்டப்பட்டதன் உண்மையான காரணம் வெறும் நீர் ஆவியாவதை தடுப்பது மட்டும் இல்லையாம்!! ஆம்! வேறு ஒரு முக்கிய காரணமும் உள்ளது!
புரோமேட் ஒரு புற்றுநோய் காரணியாக இருப்பதால் இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்க்கான அபாயம் அதிகம்!!
விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைகளை நோக்கி பறவைகள் வந்தால் விமானத்தில் மோதி விபத்துகள் நடக்கும் என்பதால், பறவைகளை பயமுறுத்த அங்கு இது போன்ற கருப்பு நிற பந்துகள் போடப்பட்டிருக்கும். அதிலிருந்து பெறப்பட்டது தான் இந்த ஐடியா!
Credit: Glogster
கருப்பு பந்துகள்
இந்த கருப்பு நிற பந்துகள் உயர்தர பாலி எத்திலீனுடன் கார்பன் அடங்கிய கருப்பு நிறம் சேர்த்து உருவாக்கப்பட்டவை. இந்த பிரத்யேக பாலி எத்திலீன் நீரை விட அடர்த்தி குறைவானது என்பதால் தான் நீரில் மிதக்கிறது. அதே சமயம் 10 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட இந்த பந்துகள் காற்றில் பறந்து விடாமல் இருக்க இந்த பந்துகளில் 210 ml தண்ணீரும் நிரப்பப்பட்டிருக்கும்.
கார்பன் அடங்கிய கருப்பு நிறம் கொண்டு பந்துகள் உருவாக்கபடுவதால் ஒவ்வொரு பந்தும் எந்த ஒரு நச்சு கழிவையும் வெளியேற்றாமல் சுமார் 10 வருடம் வரை மட்காமல் வேலை செய்யும். மேலும் இவற்றை மறுசுழற்சியும் செய்ய முடியும்.
நீர் ஆவியாவது
சரி இவற்றின் பயன்பாடு என்ன என்றால் நீர் ஆவியாவதை தடுப்பதும் தான். இந்த பந்துகள் அனைத்தும் அணையில் உள்ள நீரின் மேற்பரப்பில் பரவி, சூரியனில் இருந்து வரும் வெப்பமான புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஆவியாவதை தடுக்கும். இவை 80-90 சதவீதம் வரை நீர் ஆவியாவதை தடுக்கும்.
அதோடு மற்றொரு மிக முக்கிய காரணம் நீர் தரத்தை பாதுகாப்பது. ஆம்! நீர்த்தேக்கத்தில் உள்ள குடிநீரில் சூரிய ஒளி பட்டு சில வேதியியல் வினைகள் நடக்காமல் தடுக்கத் தான் இவை கொட்டப்பட்டுள்ளன. இயற்கையாகவே, உப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரில் இருக்கும் புரோமைட் (Bromide) என்னும் தனிமம் தான் இந்த பந்துகளின் பின்னால் இருக்கும் காரணம்!
Credit: National Geographic
புரோமேட்
சாதாரணமாக புரோமைட் அதன் இயல்பு நிலையிலேயே இருக்கும் போது மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஒருவேளை புரோமைட் இருக்கும் உப்பு நீர் நீர்த்தேக்கத்தில் உள்ள நீரில் கலந்து விட்டால் அது சிக்கலாகிவிடும். ஏனெனில் நீர்த்தேக்கத்தில் உள்ள நீரில் உள்ள புரோமைட்டும், பாக்டீரியாக்களை அழிக்க குடிநீரில் போடப்படும் குளோரினும், சூரிய ஒளியில் படும் போது புரோமேட் (bromate) என்னும் சேர்மம் உருவாகும். இந்த புரோமேட் ஒரு புற்றுநோய் காரணியாக இருப்பதால் இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்க்கான அபாயம் அதிகம். இதை தடுக்கவே இந்த பந்துகள் போடப்பட்டுள்ளன.
இந்த பந்துகள் போடப்பட்ட நீரை சுத்திகரிக்கும் போது பாசிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க நேரில் சேர்க்கப்படும் குளோரினை குறைவான அளவில் உபயோகப்படுத்தினாலே போதும்
உண்மையில் புரோமைட் உள்ள நீரை ஓசோன் உதவியால் சுத்திகரிப்பு செய்யும் போதும் இந்த புரோமேட் உருவாகும். ஆனால் அது சூரிய ஒளியில் புரோமைட் படும் போது உருவாகும் புரோமேட் அளவை விட மிகவும் குறைவு தான். அதே சமயம் சுத்திகரிப்பின் போது உருவாகும் புரோமேட்டின் அளவையும் கட்டுக்குள் பராமரிப்பதாக தெரிவித்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் குடிநீர் வாரியம்!
Credit: Lgsonic
வேறு பயன்கள்
இவற்றின் மற்றொரு பயன் பாசிகள், பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் வளருவதை தடுப்பது. பொதுவாக நுண்ணுயிரிகள் நீர் மற்றும் சூரிய ஒளி கூட்டணியில் செழித்து வளரும். இந்த பந்துகளால் நீரில் சூரிய ஒளி படாது என்பதால் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும். எனவே சுத்திகரிப்பும் எளிதாகிறது. இதனால் இந்த பந்துகள் போடப்பட்ட நீரை சுத்திகரிக்கும் போது பாசிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க நேரில் சேர்க்கப்படும் குளோரினை குறைவான அளவில் உபயோகப்படுத்தினாலே போதும்.
நீரில் தூசி விழுவது, கொசுக்கள், பறவைகள் வந்து அமர்வது போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த கருப்பு பந்துகள் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.
இந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கத் தான் லாஸ் ஏஞ்சல்ஸ் நீர்த்தேக்கத்தில் கருப்பு நிற பந்துகள் கொட்டப்பட்டுள்ளன! இதை புரிந்து கொண்டு நமது நீர்த்தேக்கங்களையும் பாதுகாக்க அரசு ஏதாவது வழி செய்ய வேண்டும்!!!