தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர் என்னும் கிராமம். தொன் தமிழகத்தின் பல சுவடுகள் இந்த கிராமத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கே கைப்பற்றப்பட்ட பொருட்களை மதுரை நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்த உத்தரவிட்டத்தை அடுத்து இப்பொருட்கள் கார்பன் பகுப்பாய்வு மூலம் ஆய்வு செய்யப்பட்டன. அதில் இப்பொருட்கள் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தெரியவந்துள்ளன.

ஆதிச்சநல்லூர்
திருச்செந்தூருக்கும் திருநெல்வேலிக்கும் இடையே தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த ஊர். சுமார் 114 ஏக்கர் பரப்புள்ள இடம் முழுவதும் தமிழர்களின் எச்சங்கள் சிதறிக் கிடக்கின்றன. இங்கு சுமார் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முதுமக்கள் தாழி, மண்பானைகள், இரும்பு முதலிய உலோகப்பொருட்கள் போன்றவை கிடைத்திருக்கின்றன. ஆனால் அதன்பின்பு புதிய ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.
கார்பன் பரிசோதனை
பழங்காலப் பொருட்களின் வயதினைக் கண்டறியும் கார்பன் பகுப்பாய்வு முறையைக் கொண்டு ஆதிச்ச நல்லூரில் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஒன்று கி.மு.905 மற்றொன்று கி.மு.971 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிவரும் தகவல்கள்
ஆதிச்ச நல்லூரில் முதன் முதலில் ஆய்வு நடத்தியவர் டாக்டர். ஜாகர் என்னும் ஜெர்மானியர் தான். ஆண்டு 1876. ஆய்விற்காக இவரால் எடுக்கப்பட்ட பொருட்கள் ஜெர்மனிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஜெர்மனியின் அருங்காட்சியகம் ஒன்றில் அந்தப்பொருட்கள் இன்றும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு மேற்கட்ட ஆய்விற்காக எடுத்துச் சென்றார்.
மேற்கண்ட இரண்டினாலும் குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுத்தும் எட்டப்படவில்லை. ஆனாலும் 1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார். அன்றிலிருந்து தான் தமிழர்கள் பலருக்கும் இதுகுறித்த தேடல் துவங்கியது.
ஆதிச்சநல்லூரில் மத்திய / மாநில தொல்பொருள் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்படும் பட்சத்தில் பழந்தமிழரின் பல பண்பாட்டு அடையாளங்கள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.