கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகளையும், செய்யக்கூடாத தவறுகளையும் சில பதிவுகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் கொரோனா வைரஸ் பரவும் முறையை பற்றி முழுவதும் பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பரவும் முறையை நான்கு கட்டங்களாக பிரிக்க முடியும். The 4 Stages of Corona Virus outbreak!
முதற்கட்டம் (Stage – 1): வெளிநாட்டு பயணத்தின் மூலம் வரும் தொற்று
முதல் கட்டமான இது இம்போர்ட்டட் ஸ்டேஜ் என அழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகம் இருந்த அல்லது இருக்கும் நாடுகளுக்கு பயணம் செய்தவர்கள் கொரோனா வைரஸ் தொற்று (Corona Virus infection) இருப்பது தெரியாமல் தாயகம் திரும்பி வரும் போது விமான நிலைய சோதனைகளின் மூலம் தொற்று இருப்பது கண்டறியப்படும் நிலை இது. சில வெளிநாட்டினரும் சுற்றுலாவுக்கு இந்தியா வரும் போது கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்படுவது தான் முதற்கட்டம்.
கட்டம் 2 (Stage – 2): உள்ளூர் பரவல்
இது உள்ளூர் பரவல் எனப்படுகிறது. வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செய்தோர் இந்தியா வந்த பின் அவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கு பரவுவது. இதனால் உடனடியாக பாதிக்கப்படும் நபர்கள் அவர்களது குடும்பத்தினராகவோ, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்கக்கூடும்.
எந்த நபருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதோ அவர்களுடன் தொடர்பில் இருந்த பலரையும் கண்காணித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது எளிது.
கட்டம் 3: குழுக்களிடம் பரவுதல்
வைரஸ் குழுக்களிடம் பரவுதல் மூன்றாவது கட்டம். எடுத்துக்காட்டாக கொரோனா வைரசால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் அது தெரியாமல் பிற இடங்களுக்குச் செல்வதால் பரவுவது. பாதிக்கப்பட்ட நபர் கடைகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், விழாக்கள், கேளிக்கை கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு செல்லும் போது பலருக்கும் தொற்றி விடும் அபாயம் உள்ள இந்த நிலை தான் மூன்றாவது கட்டம். இந்த நிலையானது மெதுவாக நடந்தால் வைரஸ் விரைவாக பரவுவதை அரசு கட்டுக்குள் கொண்டு வரமுடியும். ஆனால் இந்த நிலையில் உள்ள சிக்கலே யாரிடமிருந்து பரவியது… எப்படி பரவியது என கண்டுபிடிக்க முடியாது. வணிக வளாகங்களுக்கு சென்றவர்களும், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றவர்களும் திடீரென்று ஒரு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளை நாடுவார்கள். இவர்கள் எந்த விதத்திலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்திருக்க மாட்டார்கள் என்பது தான் இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலை ஏற்பட்டதும் நூற்றுக்கணக்கான பேர் மருத்துவமனைகளை அணுகக்கூடும். அனைவரையும் கவனிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லை எனில் இத்தாலியில் ஏற்பட்டது போல அடுத்த கட்டத்துக்கு வைரஸ் பரவலானது சென்றுவிடும்.
இந்தியாவில் சில மாநிலங்கள் இப்போது இந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் கனிகா கபூர் என்ற பாலிவுட் பாடகி ஒரு பார்ட்டியில் பங்கேற்றார். கனிகா கபூருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட இந்தியாவில் உள்ள பல்வேறு பிரபலங்கள் மற்றும் பா ஜ க எம்.பிக்கள் உட்பட சில அரசியல் தலைவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தென் கொரியாவில் 31வது நோயாளி நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரசை பரப்பி விட்டது மற்றொரு உதாரணம்.
கட்டம் 4: தொற்றுநோயாக பரவல்
கொரோனா வைரஸ் பரவுதலை பொறுத்தவரை இதுதான் இறுதி நிலை. தொற்றுநோயாக மாறும் இந்த நிலை தான் மிகவும் மோசமானது.
கடந்த பிப்ரவரி மாதம் சீனா இந்த நிலையில்தான் இருந்தது. தற்போது இத்தாலி இந்த நிலையில் இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடி தொடர்பின்றி பாதிக்கப்பட்டு ஒரே நாளில் மருத்துவமனைகளை அணுகுவார்கள் என்பதால் போதிய அளவில் மருத்துவர்களும், சோதனைக் கருவிகளும், மருந்துகளும், படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகளும் கட்டாயம் தேவை. இத்தாலியில் போதிய அளவு மருத்துவர்களும், முகக்கவசங்களும்(Masks) இல்லாததால்… நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத பல வயதானவர்களை கவனிக்காமல் கைவிட்டு விட்டு யாரையெல்லாம் நிச்சயம் காப்பாற்ற முடியுமோ அவர்களை மட்டுமே காப்பாற்றி வருகிறது அந்த நாடு. முகக்கவசங்கள் மற்றும் தற்காப்பு உடைகள் இல்லாத நிலையில் பணி செய்த சில மருத்துவர்கள் சீனாவிலும், இத்தாலியிலும் இறந்துவிட்டனர். போதுமான அளவில் மருத்துவர்கள் இல்லையெனில் இடைவிடாது மருத்துவர்களும் பணி செய்ய வேண்டிய நிலை இருக்கும். இப்படிப்பட்ட நிலை தான் சீனாவிலும் இருந்தது, இப்போது இத்தாலியிலும் இருக்கிறது.
இந்த நிலையில் வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்க தொடங்கினால் ஆயிரக்கணக்கில் மக்கள் மருத்துவமனைகளை நோக்கி ஓடுவார்கள். இதனால் பல நூற்றுக்கணக்கான பேரை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இத்தாலியில் இன்று வரை சுமார் 60000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5400 பேர் உயிரிழந்துள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களில் 9 சதவீதமாகும். உலகிலேயே இறப்பு சதவீதம் இங்கு தான் அதிகம்!
வேகமாக மூன்றாவது கட்டத்தை அடைந்து நான்காவது கட்டத்துக்குள் செல்லாத நாடு தென் கொரியா தான்.
4 ம் கட்டத்தில் பரவுதல் வேகம் அதிகரித்ததால், இத்தாலியில் நேற்று மட்டும் 6500 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இன்று ஒரு நாள் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவது நிலையை நோக்கி அமெரிக்கா மெதுவாக செல்வதாக தெரிகிறது. பிரான்ஸ், UK, ஸ்பெயின் போன்ற நாடுகளும் வைரஸ் பரவும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவது நன்றாகவே தெரிகிறது. வேகமாக மூன்றாவது கட்டத்தை அடைந்து நான்காவது கட்டத்துக்குள் செல்லாத நாடு தென் கொரியா தான்.
சரி.. இந்த வைரஸ் பரவல் கட்டங்களில் இந்தியா இருக்கும் நிலை என்ன? இந்தியா இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாவது நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா மூன்றாவது நிலையை 10 முதல் 15 நாட்கள் வரை தள்ளிப்போட முடிந்தால் அதுவே இந்தியாவுக்கு பெரிய வெற்றி. அதற்குத் தான் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்க வேண்டும். இன்னும் 10 நாட்களுக்குள் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1500 ஐ தாண்டாமல் கட்டுப்படுத்த வேண்டும்.
மூன்றாவது நிலையை அடைந்து விட்டால் அதற்குப் பிறகு நிலைமை கைமீறிப் போய்விடும். ஏனெனில் யார் மூலம் பரவுகிறது… எப்படி பரவுகிறது… எங்கிருந்து பரவுகிறது… என எதுவுமே தெரியாது.
ஆயிரக்கணக்கான மக்களும் மருத்துவமனைகளை நாட வேண்டியிருக்கும். அதனால் இப்போதைக்கு இந்தியர்கள் அனைவரும் செய்ய வேண்டியது வீட்டிற்குள் முடங்கி இருப்பதுதான். சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் வீட்டில் வேறு யாருடனும் சேர்ந்து இருக்காமல் தனியாக ஒரு அறையில் 5-6 நாட்கள் இருப்பதுதான் நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.