ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பாறை ஓவியங்களிலேயே மிகவும் பழமையான, கங்காரு ஓவியம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 7 அடி (2 மீட்டர்) வரை வரையப்பட்டுள்ள இந்த கங்காரு ஓவியம், மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான ‘ராக் ஆர்ட்’ ஆகும். இந்த கங்காரு ஓவியமானது, மல்பெரி வண்ண சிவப்பு தாது பயன்படுத்தி சித்தரிக்கப்பட்டிருந்தது.
இங்கு வரையப்பட்டிருந்த பெரும்பாலான ஓவியங்கள் 13,000 முதல் 17,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை என்று தொல்லியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கங்காரு ஓவியத்தைப் பொறுத்தவரை, அருகிலுள்ள ஆறு கூடுகளின் ஓவியம் 17,500 முதல் 17,100 ஆண்டுகள் பழமையானது என்று ரேடியோ கார்பன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த கங்காரு ஓவியமானது 17,300 ஆண்டுகள் பழமையானது என்று தொல்லியல் விஞ்ஞானிகள் அதன் வயதை மதிப்பிடுகின்றனர். ‘கார்பன் டேட்டிங்’ என்பது படிமங்கள், மற்றும் தொல்பொருட்களின் வயதை கண்டறியும் தொழில்நுட்ப கருவி ஆகும்.

ட்ரைஸ்டேல் நதி தேசிய பூங்காவில் தொல்லியல் ஆராய்ச்சிக்குழுவானது, ஐந்து வருட காலப்பகுதியில் ரேடியோகார்பன் டேட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 16 வெவ்வேறு பாறை ஓவியங்களுடன் தொடர்புடைய 27 கூடுகளின் வயதை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் ஆரம்பகால மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய தங்கள் முன்னோக்கை வெளிப்படுத்த அல்லது பிரதிநிதித்துவ ஓவியங்களை உருவாக்குவதில் ஓவியக் கலையைப் பயன்படுத்தினர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ரேடியோ கார்பன் டேட்டிங் தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆய்வாளர் டேமியன் ஃபின்ச் கூறும்போது, பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய குளவி கூடுகளின் புஷ்ஃபயர்ஸில் இருந்து கரி மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே ஓவியத்தின் மேலேயும், அதற்கு அடியிலும் பழங்கால குளவிக் கூடுகளை கண்டறிவது மிகவும் அரிதானது என்றார்.
மேலும் அவர் கூறும்போது, இந்த கங்காருவின் படம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் கண்டறியப்பட்டுள்ள 40,000 ஆண்டுகளுக்கும் முந்தைய ஓவியங்களை ஒத்து உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவில் அமைந்துள்ள குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி பன்றிகளின் ஓவியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதேபோன்று, தென்னாப்பிரிக்காவில் 73,000 ஆண்டு கால உலகிலேயே மிகவும் பழமையான ஹேஷ்டேக் வடிவிலான பாறை ஓவியம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இவை பண்டைய மனிதர்களின் படைப்புகள், அவர்கள் வாழ்ந்த பண்டைய காலத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் காலநிலை மற்றும் கடல் மட்டங்கள் பற்றிய விஞ்ஞான ஆதாரங்களை பூர்த்தி செய்கின்றன என்றார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட பாறை ஓவியங்கள் ஆஸ்திரேலியாவின் கடந்த கால பழக்க வழக்கங்கள் மற்றும் நாகரீகங்கள் போன்றவற்றை நம் கண் முன் கொண்டு வருகின்றன என்று ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் கழகத்தின் தலைவர் சிஸ்ஸி கோர்-பிர்ச் கூறினார். மேலும், அவர் “சுதேசிய அறிவும் கதைகளும் இழக்கப்படாமல் இருப்பது முக்கியம், அவை தலைமுறைகளாக தொடர்ந்து பகிரப்படுகின்றன” என்று ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் பழங்குடியின மக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நீண்ட காலமாக அறியப்பட்டிருந்தாலும் டேட்டிங் ராக் ஆர்ட்டின் வரம்புகள் காரணமாக அவற்றின் வயது தெரியாமல் இருந்தது. மேலும், இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும், தற்போது ‘நேச்சர் ஹ்யூமன் பிஹேவியர்’ இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.