சில வாரங்களுக்கு முன்பு ‘கண்ணீர் எவ்வாறு வருகிறது?‘ என்பது பற்றி விரிவாக பார்த்தோம். படித்தோர் பலரும் முகநூலில் பாராட்டை தெரிவித்திருந்தார்கள். இக்கட்டுரையில் விக்கல் வருவதைப் பற்றி பார்க்கலாம்.
நாம் அவசரமாக சாப்பிடும் போது திடீரென்று விக்கல் வரும். தண்ணீர் குடித்தவுடன் நின்றும் விடும். ஆனால் பல நேரங்களில் சாப்பிடாத போது கூட விக்கல் வந்து விடும். இந்த விக்கல் ஏன் வருகிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? விக்கல் வரும்போது நம் உடம்பில் என்ன நடக்கும் தெரியுமா?
விக்கல் எப்படி வருகிறது?
நம் உடம்பில் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதிதான் உதரவிதானம் (Diaphragm). இது ஒரு சவ்வு ஆகும். இதன் பணி, நுரையீரலை சுருங்கி விரிய வைத்து, மூச்சை இழுத்துவிட உதவுவதே. இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றமே விக்கலுக்கு அடிப்படை.
அதாவது சுவாசத்தின் போது உதரவிதானம் கீழ்நோக்கி விரிந்து தட்டையாகிறது. கூடவே குரல் வளை நாண்களும் திறக்கின்றன. இப்போது நுரையீரலில் காற்றை நிரப்ப அதிக இடம் கிடைக்கும். இதனால் நாம் உள் இழுக்கும் காற்று குரல் வளை நாண்கள் வழியாக நுரையீரலுக்குள் எளிதாக செல்ல முடிகிறது. அதேபோல் நாம் மூச்சை வெளி விடும் போது உதரவிதானம் மீண்டும் பழைய நிலைக்கு சுருங்கும். இதனால் காற்று வெளியேறுகிறது. மூளையானது பெரினிக்ஸ் என்ற நரம்பின் வழியாக உதரவிதானத்தை இயக்குகிறது.

சில சமயங்களில் பெரினிக்ஸ் நரம்பில் ஏற்படும் எரிச்சலால் உதரவிதானம் முறையின்றி வேகமாக சுருங்கும். அதாவது மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கும். எனவே குரல் வளை நாண்கள் திறப்பதும் மூடுவதும் சரிவர நடக்காது. இதனால் தொண்டை வழியாக அதிக காற்றை உள் இழுக்கும் போது அது மூடிய அல்லது குரல் வளை நாண்களின் குறுகிய இடைவெளி வழியே செல்லும். காற்று குரல்வளை நாண்கள் மீது மோதுவதால் ஹிக் என்ற சத்தத்துடன் விக்கல் வருகிறது.
விக்கல் வரக் காரணங்கள்
விக்கல் ஏன் வருகிறது என்றால் உத்தரவிதானத்தின் ஒழுங்கற்ற செயல்பாடு தான் காரணம். விக்கல் வர அடிப்படை காரணமாக இருக்கும் உதரவிதானத்தின் ஒழுங்கற்ற செயல்பாட்டிற்கு பல காரணங்கள் உள்ளன.
- சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடும் போது வயிறு விரிவடைவதால் கூட உதரவிதானத்தின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.
- மேலும் அதிக சூடான, காரமான உணவு சாப்பிடுதல், ஆல்கஹால், புகைபிடித்தல், தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது என்று இதன் காரணங்கள் நீள்கின்றன.
தொடர்ந்து இடைவிடாத விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஏதோ கொஞ்ச நேரம் விக்கல் வந்து நின்று விட்டால் பாதிப்பு இல்லை. ஆனால் சிலருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் கூட விக்கல் நீடிக்கும். இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் விக்கல் ஒரு மாதம் வரையில் இருக்கக்கூடும். அப்படி தொடர்ந்து விக்கல் நீடித்தால் அது கவனிக்க வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தொடர் விக்கல் வர காரணம் என்ன?
நாட்கணக்கில் விக்கல் இருந்தால் அதற்கு காரணமே பொதுவாக உடல் உறுப்பு பிரச்சினை தான். மூளை பாதிப்பு, சிறுநீரக கோளாறு, நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் கோளாறு, பெரினிக்ஸ் நரம்பு பாதிப்பு, காச நோய் போன்ற பெரிய காரணங்களாகக் கூட இருக்கலாம். அதனால் தொடர் விக்கல் பிரச்சினை தீர மருத்துவரை அணுகுவது தான் சரியான வழி.
விக்கல் உடனே நிற்க என்ன செய்ய வேண்டும்?
விக்கல் உடனே (சில நிமிடங்களில்) நிற்க சில எளிய வழிகள் உள்ளன. விக்கல் நிற்பதற்கு பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம் போல் சில அருமையான வழிகள் உள்ளன!
- விக்கல் வரும்போது தண்ணீர் குடித்தவுடன் பெரும்பாலானோருக்கு விக்கல் நின்று விடும். அப்படியும் விக்கல் வந்தால் அதை நிறுத்த பல வழிகள் உள்ளன.
- இருபது எண்ணும் வரை மூச்சை வெளிவிடாமல் பின்பு வெளிவிடும் போது விக்கல் நிற்கும்.
- கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு தானாக கரையும் வரை வைத்திருந்தாலும் விக்கல் நிற்பதற்கு வழிவகுக்கும். இருப்பினும், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற வழியல்ல.
- ஏதாவது ஒரு வழியில் தும்மலை வரவைத்தால் கூட விக்கல் போக வாய்ப்பு இருக்கிறதாம்.
- நேராக நின்று ஒரு நிமிடத்திற்கு இரண்டு கைகளையும் மேல்நோக்கி நீட்டி வைத்தால் கூட விக்கல் நின்று விடும்.
மற்றபடி விக்கல் வரும் போது பயமுறுத்துவது, அதிர்ச்சி அடைய செய்வது தவறு. ஏனெனில் ஒருவேளை இதய நோயாளியாக இருந்தால் வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
விக்கலுடன் இந்த கட்டுரையை படிக்கத் தொடங்கியிருந்தால், இதை படித்து முடிக்கும் வேளையில் வேறு எந்த வைத்தியமும் செய்யாமலே கூட விக்கல் நின்று போகக்கூடும். ஏன்னா அதோட டிசைன் அப்படி!! 😀
Summary In English: Why hiccups come? The reasons for hiccup in Tamil. Tips to stop hiccups in Tamil!