சங்கில் இருந்து வரும் கடல் அலை ஓசைக்கு உண்மையான காரணம் இது தான்!

Date:

கடற்கரையில் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கும் சங்கைப் பார்த்தவுடன், அதைக் காதருகில் வைத்து அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்க எல்லாருக்கும் பிடிக்கும். அப்படியே கடல் அலை ஓசை போல இருக்கும் அந்த சத்தம். ஆனால் கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் நாம் இருந்தாலும் கூட, சங்கைக் காதுக்கு அருகில் வைக்கும் போது அதே கடல் அலை சத்தம் தான் கேட்கும். காலங்காலமாகக் கடலிலிருந்து வந்ததால் தான் சங்கிலிருந்து அலை ஓசை சத்தம் வருகிறது என்று கூட சில சமயம் நினைத்திருப்போம். உண்மையில் அந்த சத்தத்திற்குக் காரணம் என்ன தெரியுமா?

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சங்கில் கடல் அலை ஓசை கேட்பதற்குக் காரணம், சங்கு கடலிலிருந்து வந்தது என்பது கிடையாது. தான் இருந்த இடத்தின் ஒலியைக் காலம் முழுக்க வெளிப்படுத்தும் வினோத சக்தி எதுவும் சங்கிடம் இல்லை. சரி அப்போது உண்மையான காரணம் என்ன?

Seashell
Credit: Get wallpapers

இரத்த ஓட்டம்

சங்கிலிருந்து வரும் இந்த சத்தத்திற்குக் காரணம் என்று ஆரம்பத்தில் இரண்டு விளக்கங்கள் நம்பப்பட்டது. அதில் ஒன்று, சங்கைக் காதுக்கு அருகில் வைக்கும் போது, நம் காதில் உள்ள இரத்த நாளங்களில் பாயும் இரத்த ஓட்டத்தின் சத்தம் என்ற விளக்கம். சரி அது உண்மை தானா என்பதை அறிய வழக்கம் போல் விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது அது உண்மை இல்லை என்பது விளங்கியது. இரத்த ஓட்டத்தின் சத்தம் என்பது உண்மையாக இருந்தால் ஒரு மனிதன் உடற்பயிற்சி செய்தவுடன் சங்கை தன் காதருகில் வைக்கும் போது அந்த சத்தம் அதிகமாகக் கேட்க வேண்டும்.காரணம் உடற்பயிற்சி செய்தவுடன் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்.ஆனால் உண்மையில் அப்படி எல்லாம் எந்த மாற்றமும் இருக்காது. உடற்பயிற்சிக்கு முன் எப்படி சத்தம் இருந்ததோ அப்படி தான் உடற்பயிற்சிக்குப் பின்னும் இருக்கும்.

சங்கின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து இந்த சத்தத்தில் சில வேறுபாடுகள் இருக்கும் !!

காற்று

சங்கின் உள்ளே செல்லும் காற்று தான் இப்படி ஒரு சத்தத்தை எழுப்ப வேண்டும் என்ற அனுமானமும் பலரால் நம்பப்பட்டது. ஆனால் அதுவும் உண்மை அல்ல. ஏனெனில் ஒரு ஒலி ஊடுருவா அறையில் (Sound Proof Room) நாம் நின்று கொண்டு சங்கை காதருகில் வைத்தால், சங்கிலிருந்து எந்த சத்தமும் கேட்காது. சங்கில் கேட்கும் சத்தத்திற்குக் காற்றோ அல்லது காதருகில் பாயும் இரத்த ஓட்டமோ தான் காரணம் என்றால் ஒலி ஊடுருவா அறையிலும் சத்தம் கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் அங்கு அறைக்கு வெளியில் இருக்கும் ஒலியால் தான் உள்ளே ஊடுருவ முடியாது. மற்றபடி கூட எல்லா இடங்களைப் போலவே காற்றும், நம் உடம்பில் பாயும் இரத்த ஓட்டமும் இருக்கும். ஆனால் ஒலி ஊடுருவா அறையில் சங்கில் எந்த சத்தமும் கேட்பதில்லை. எனவே சங்கில் செல்லும் காற்றோ இரத்த ஓட்டமோ சத்தத்திற்குக் காரணம் அல்ல என்பது தெளிவாகிறது.

Blood Flow
Credit: Drug target review

இந்த சத்தத்திற்கான உண்மையான காரணம் சுற்றுப்புறத்தில் உள்ள சத்தம் தான். சங்கு நம்மைச் சுற்றி இருக்கும் ஒலி அலைகளை அப்படியே கிரகித்துக் கொள்கிறது. வெளியிலிருந்து சங்குக்குள் வரும் ஒலி அலைகள் சங்கின் கடினமான பரப்பைத் தாக்கும் போது பல பிரதிபலிப்புகள் ஏற்பட்டு மோதி உட்குழிவான பகுதியில் ஒத்ததிருந்து எதிரொலிக்கின்றன.

ஒத்ததிர்வு

ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுடன் அதிர்வுறும் ஒன்று மற்றொன்றை அதே அதிர்வெண்ணுடன் அதிர்வுறத் தூண்டுவது ஒத்ததிர்வு (Resonance) எனப்படும்.பொதுவாக ஒரு பொருள் அதிரும் போது அது ஒலியை ஏற்படுத்தும். அது ஒரு பென்சிலை தரையில் போடும் போது வரும் அதிர்வோ அல்லது ஒரு வயலின் கம்பியை இழுத்து உருவாகும் அதிர்வோ, எதுவாக இருந்தாலும் அது ஒரு ஒலியை ஏற்படுத்தும். அதே சமயம் அவை ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் அல்லது அதிர்வெண்களின் தொகுப்பில் அதிர்வுறும். அதே போலச் சங்கிற்கும் அது அதிரும் ஒரு இயற்கையான அதிர்வெண் தொகுப்பு இருக்கும்.

சங்கின் வடிவம் அதை ஒரு ஒத்ததிர்வு அறையாக செயல்பட வைப்பதால், சங்கு சுற்றுப்புற சத்தத்தின் ஒலிபெருக்கியாகச் செயல்படுகிறது !!

அறையில் இருக்கும் ஒலியில் ஏதாவது ஒரு அதிர்வெண் தன் இசைவுறு அதிர்வெண்ணில் ( Harmonic Frequency) சங்கில் இருக்கும் காற்றை அதிர்வுறச் செய்தால் ஒத்ததிர்வு ஏற்படும். ஒலி ஒத்ததிர்வினால் உருவாகும் உரத்த ஒலியாக இருக்கும்.இந்த ஒத்ததிர்வு காரணமாகச் சுற்றுப்புற சத்தத்தில் உள்ள சில அதிர்வெண்கள் பெருக்கப்பட்டு, சில அதிர்வெண்கள் வலுவிழக்கப்படுகின்றன. இப்படி எழும் சத்தம் கடலின் அலைகளைப் போன்று கேட்கிறது.

அதாவது சங்கின் வடிவம் அதை ஒரு ஒத்ததிர்வு அறையாக செயல்பட வைப்பதால், சங்கு சுற்றுப்புற சத்தத்தின் ஒலிபெருக்கியாகச் செயல்படுகிறது. சங்கின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்து இந்த சத்தத்தில் சில வேறுபாடுகள் இருக்கும். அதே போல அதிக ஒலி அல்லது இரைச்சல் உள்ள இடத்தில் நின்று கொண்டு சங்கைக் காதருகே கொண்டு சென்றால் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்கும்.

சங்கின் அளவு பெரியதாக இருந்தால் ஒலி அலைகள் பல அதிர்வுகளுக்கு உள்ளாகி அதன் பிறகே கேட்கும். அதுவே சிறிய சங்கில் சில அதிர்வுகளை மட்டுமே ஒலி அலைகள் உள்ளாகும். அதனால் திரும்பி வரும் ஒலி சற்று அதிக சத்தமாக இருக்கும். அதனால் தான் பெரிய சங்கை விடச் சிறிய சங்கில் ஒலி அதிகமாகக் கேட்கும்.
சங்கைக் காதை ஒட்டி வைக்கும் போது கேட்பதை விடச் சிறு இடைவெளி விட்டு வைத்தால் தான் சத்தம் அதிகமாகக் கேட்கும். சங்கைக் காதை ஒட்டி இறுக்கி வைக்கும் போது உள்ளே அதிக ஒலி அலைகள் நுழைய முடியாது. அதனால் சத்தம் மிக மிகக் குறைவாக இருக்கும்.

பின்னணி ஒலி

சரி கடற்கரை போன்ற இரைச்சல் உள்ள இடம் என்றில்லாமல் பெரிதாகச் சத்தம் இல்லாத அறையில் கூட சங்கிலிருந்து சத்தம் கேட்கும்.இதற்கு காரணம் உண்மையில் அங்கும் குறைந்த அளவுள்ள ஒலி இருக்கும் என்பதே. அதாவது காற்று, மின்சார ஒலி, தொலைதூர போக்குவரத்து இரைச்சல், எனச் சுற்றி இருக்கும் எல்லாம் சேர்ந்த கலவை ஒலி. ஆனால் இந்த ஒலிகளை நம் காதால் கேட்க முடியாது. இது எங்கும் நிறைந்திருக்கும் ஒலி என்பதால் நம் மூளை அதைத் தவிர்த்து விடும். அது எப்படி என்றால் முதலில் நாம் ஒரு விரலில் மோதிரம் அணியும் போது அதை நம்மால் உணர முடியும். சிறு உறுத்தல் இருக்கும். அதுவே நேரம் ஆக ஆக அது தொடரும் போது நாம் அதைப் பெரிதாக உணர மாட்டோம். காரணம் மூளை இது போன்ற தொடர் உணர்வுகளைத் தவிர்த்து விடும். பெரிதாகக் காட்டாது. அது போலத் தான் இந்த ஒலி நமக்கு கேட்காது. காதின் அருகில் சங்கையோ அல்லது ஒத்ததிர்வு ஏற்படுத்தும் பொருளையோ வைக்கும் போது இந்த ஒலியிலிருந்து சில அதிர்வெண்கள் பெருக்கப்பட்டுக் கேட்கும்

Boy hearing Seashell sound
Credit: Huffington post

உண்மையில் நம்மைச் சுற்றி இருக்கும் இந்த சத்தத்தைக் கேட்க சங்கு தான் தேவை என்பதில்லை.நம் வீட்டில் இருக்கும் காலியான ஒரு காபி கப்பைக் காதருகே வைத்துக் கேட்டால் கூட சங்கிலிருந்து கேட்கும் அதே சத்தம் தான் கேட்கும். காதிலிருந்து கப் இருக்கும் கோணம் மற்றும் தூரத்தைப் பொறுத்து இந்த சத்தத்தின் அளவு வேறுபடும். அதே போல காலியான கிண்ணங்கள், காலி பாட்டில்கள் ஏன் நம் உள்ளங்கையை கப் போன்ற வடிவத்தில் கூப்பி வைத்து காதருகில் வைத்தால் கூட இந்த சத்தம் கேட்கும். ஆனால் இவைகளை விட சங்கின் உட்குழிவான விசித்திர வடிவம் இந்த சத்தத்தை இன்னும் அதிகமாகக் கேட்க வைக்கும். மொத்தத்தில் சங்கில் இருந்து நாம் கேட்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கும் பின்னணி ஒலியில் உள்ள சில அதிர்வெண்களின் பெருக்கம் தான்!!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!