பூமி மாதிரி உருண்டையை கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வட அரைக்கோளத்தின் மையத்திலிருந்து தென் அரைக்கோளத்தில் மையத்தை, உருண்டையின் மையத்தின் வழியாகவே செல்லும் ஒரு கோடு ஒன்றை வரையுங்கள். அளவுகோல் இல்லாது நேர் கோடு வரைந்ததற்கு ஒரு சபாஷ்!. நீங்கள் வரைந்த கோட்டின் பெயர் புவியியல் அச்சுக் கோடு (geographic meridian). வட அரைக்கோளத்தில் உள்ள முனையின் பெயர் Geographic North எனவும், தென் அரைக்கோளத்தில் உள்ள முனையின் பெயர் Geographic South எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோடுகள் புவியை இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கின்றது. இந்தக் கோட்டிலிருந்து சற்று விலகி இதே கோட்டையே சற்று குறுக்காக வெட்டிச் செல்லும் மற்றொரு கோடொன்றை வரையுங்கள். இதற்குப் பெயர் காந்தவியல் கோடு (magnetic meridian). வட அரைக்கோளத்தில் உள்ள முனையின் பெயர் Magnetic North என்றும் தென் அரைக்கோளத்தில் உள்ள முனையின் பெயர் Magnetic South என்றும் அழைக்கப்படுகிறது.

நாம் பார்க்கவிருப்பது இந்த காந்தவியல் கோட்டைத் தான். நமது திசைகாட்டியில் உள்ள காந்த முள்ளானது இந்த காந்தவியல் கோட்டின் மீதே சிவனை நோக்கும் நந்தி போல எப்போதும் படுத்திருக்கும். புவியச்சுக் கோடானது எப்போதும் நிலையானது. ஆனால் இந்தக் காந்தவியல் கோடோ வருடந்தோறும் இடம் மாறுவதாக அறிவியல் காட்டுகிறது.
புவியின் காந்தப்புலம்
புவியின் மையப் பகுதியானது சுமார் 2900 கிலோமீட்டர் விட்டம் கொண்ட திடநிலையில் உள்ள Iron core ஆல் ஆனது. இதன் வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் ஆகும். இதனைச் சுற்றி திரவ வடிவில் இரும்பும் நிக்கலும் அதிகமுள்ள தீக்குழம்பு மிதந்து கொண்டிருக்கிறது. ஒரு முட்டை போல. இந்தச் சுழலும் நெருப்பு திரவமானது மின்னாற்றலை உருவாக்குகிறது. இந்த மின்னாற்றல் பூமியின் சுழற்சியுடன் இணைந்து காந்தப்புலத்தை உருவாக்குகிறது.
காந்தவியல் கோடு நகருதல்
மேற்கூறிய இந்தக் காந்தவியல் கோட்டின் நகர்வு வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆனால் புவியியலின் படி இந்த நகர்வு இயல்பானதே. வழக்கமாக இக்கோடு வருடத்திற்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் என குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இதன் வேகம் வருடத்திற்கு 40 கிலோமீட்டர்களாகும். இக்கோடு பூமியின் மையத்தின் சுழற்சியினாலேயே இடம் மாறுகிறது. அதாவது 1831 ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியிலிருந்து ரஷ்யா நோக்கி நகர்ந்து வந்த இக்கோடு தற்போது திசைமாறி அதிவேகமெடுத்து சைபீரியா நோக்கிப் பயணிக்கிறது.

காந்தப்புலம் மாறுதல்
மேல்கண்ட இந்த நகர்தல் இயல்பானதாயிருந்தாலும் எதிர்காலத்தில் புவியின் காந்தப்புலங்கள் தலைகீழாகக் மாறக்கூடும். அப்போது திசைகாட்டி யின் காந்தமுள் எதிர்திசையில் செயல்படும். இந்த மலைக்க வைக்கும் மாற்றமானது இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வருடங்களுக்கு ஒருமுறை நிகழக்கூடியதே. கடைசியாக நடந்த இந்த மாற்றம் 7,80,000 ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்திருக்கலாம். கவலை வேண்டாம். நாம் இந்த தலைகீழ் மாற்றத்திற்கு வெகு தொலைவில் உள்ளோம்.
விளைவுகள்
இந்த சுழற்சியானது திடீரென்று ஒர்நாளில் நிகழக்கூடியதல்ல என்றாலும் தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளால் இந்த மாற்றம் துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது. காந்தவியல் கோட்டை பெரிதும் சார்ந்திருப்பவை செயற்கைக்கோளும் ராணுவங்களும்தான். இப்போதைய மாற்றம் பெரிதளவில் நம்மைப் பாதிக்காவிடிலும் செயற்கைக்கோள் செயல்பாடு மற்றும் ஏவுதலில் இது மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

இந்தக் காந்தப்புலமே சூரியக் கதிர்வீச்சை பூமியிலிருந்து விலகிச்செல்ல வைக்கிறது. நமது காந்தப் பல இடமாற்றத்தால் சூரிய கதிர்வீச்சு பூமியின் மேற்பரப்பில் எங்காவது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பூமியின் காந்தப் புலத்தின் முக்கிய பயன்பாடே திசைகாட்டிதான். அப்படி இருக்கையில் ஏற்கனவே செல்போன் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் பறவைகள், கடல்வாழ் விலங்குகள் திசையறிவதில் குழம்பலாம். ஆனால் அவை இயற்கையோடு ஒன்றி வாழ்வதால் அதற்கு நாம் கவலைகொள்ளத் தேவையில்லை.