விமானங்கள் விபத்துக்குள்ளானது என்ற செய்திகள் வரும்போதெல்லாம் கருப்புப் பெட்டி தேடப்பட்டு வருகிறது என்று தொலைக்காட்சிகளில் சொல்லி கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். சமீபத்தில் இந்தோனேஷிய விமானம் விபத்துக்குள்ளானது நாம் அறிந்ததே. அவ்வளவு பெரிய விமானம் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறும்போது இந்தப் பெட்டி மட்டும் எப்படி செயல்படும்? கடலில் விழுந்த விமானத்திலிருக்கும் கருப்புப் பெட்டி எத்தனை நாள் தகவல்களை அனுப்பும்? அது கருப்பாய் இருக்குமா? என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப்பதிவு.

கருப்பா சிவப்பா ?
நம்மில் பலரும் நினைப்பதுபோல் அது பெட்டியும் அல்ல. அதன் நிறம் கருப்பும் அல்ல. பார்ப்பதற்கு கம்ப்ரஸர் போலத்தான் இருக்கும். அதனுள்ளே உருளை வடிவிலான இரண்டு பகுதிகள் வைக்கப்பட்டிருக்கும். எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கருப்புப் பெட்டியில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று விமானிகளின் அறையோடு இணைக்கப்பட்டிருக்கும். விமானிகளின் பேச்சுக்களை இந்தப்பகுதி பதிவு செய்யும் (FDR – Flight Data Recorder). மற்றொரு பகுதி விமானத்தின் செய்லபாடுகளைக் கவனிக்கும் (CVR – Cockpit Voice Recorder). உதாரணமாக வெப்பநிலை, விமானத்தின் வேகம், உயரம், உள்பகுதியில் இருக்கும் காற்று அழுத்தம், என்ஜின் செயல்பாடுகள் போன்ற 400 தகவல்கள் சேமிக்கப்படும். இது கடைசி 2 மணி நேர விமானத்தின் அதிகாரிகளுக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பதிவு செய்து வைக்கும்.
முதல் கருப்புப் பெட்டி
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (David Warren) என்பவர் தான் முதன் முதலில் விமான கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தார். அதற்குப் பின்னால் வாரனின் தந்தையுடைய மரணம் இருந்திருக்கிறது. வாரனின் தந்தை ஒரு விமான விபத்தில் இறந்துபோகவே, விபத்திற்கான காரணங்கள் தெரியாமல் விஞ்ஞானிகள் குழம்புவதைப் பார்த்த வாரன் விமானங்களின் விபத்துக்களைக் குறித்து அறிந்துகொள்ள ஒரு கருவி செய்ய முனைந்திருக்கிறார். சில ஆண்டுகளில் அவரது கண்டுபிடிப்பை ஆஸ்திரேலியா அரசு ஏற்றுக்கொண்டது. Boeing 747 என்ற விமானத்தில் முதன் முதலில் கருப்புப் பெட்டி பயன்படுத்தப்பட்டது.

உறுதி
கருப்புப் பெட்டி முழுவதும் டைட்டானியம் என்ற உலோகத்தால் ஆனது. இது மிகவும் வலிமையானது. 200 கிலோ எடை கொண்ட கூர்மையான ஆயுதத்தை 10 அடி தூரத்தில் இருந்து பெட்டியின் மீது எறிந்தாலும் எந்தவித சேதமும் ஏற்படாது. 20,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் இதற்கு உள்ளே இருக்கும் தகவல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. விமானம் கடலுக்குள் மூழ்கினாலும் 30 நாட்களுக்கு கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்கைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும்.
ஆழ்கடலுக்குள்
கருப்புப் பெட்டியின் உள்ளே சென்சார் கொடுக்கப்பட்டிருக்கும். விமானம் கடலில் கடலில் விழுந்தால் சென்சாரின் மீது தண்ணீர் பட்டவுடன் தனது இருப்பிடத்தை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துவிடும். கடலுக்கடியில் 4 கிலோமீட்டர் ஆழம் வரையிலும் இந்தக் கருவி எவ்வித பிரச்சனையும் இன்றி வேலைசெய்யும். அதற்குள்ளே இருக்கும் பேட்டரி 30 நாட்கள் வரை தாங்கும். எனவே ஒவ்வொரு வினாடிக்கும் ஒருமுறை சமிக்கைகளை அனுப்பும். பேட்டரி தீர்ந்த நிலையிலும் கருவிக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது. சில நேரங்களில் வெடிப்பு ஏற்பட்டு அல்லது மலை முகடுகளில் மோதிய பின்னர் விமானம் கடலில் விழும். மோதலின் போது கருப்புப் பெட்டி விமானத்திலிருந்து வெளியே விழுந்துவிடும். இதில் கவனிக்க வேண்டிய வேண்டிய விஷயம் கருப்புப் பெட்டி விமானத்தில் இருந்தால் மட்டுமே விமானத்தைக் கண்டுபிடிக்க முடியும். இல்லையேல் கருப்புப் பெட்டி மட்டுமே கிடைக்கும்.
