நாம் காலம்காலமாக சில கதைகளைக் கேட்டு வருகிறோம். அவற்றில் முக்கியமானவை இரசவாதம் மற்றும் மூலிகை எண்ணெய் குறித்த கதைகள். ஏரளாமான ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மூலிகை எரிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வெற்றிகரமாக மூலிகை எரிபொருளைச் சோதனை செய்து பார்த்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி, நாட்டின் முதல் மூலிகை எரிபொருள் விமானம், உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் நகரிலிருந்து கிளம்பி நாட்டின் தலைநகரான டெல்லியில் தரையிறங்கியது.
நாட்டின் நான்காவது பெரிய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டிற்குச் (SpiceJet) சொந்தமான, Bombardier Q400 ரக பயணிகள் விமானத்தில் தான் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது.
“இந்த மூலிகை எரிபொருள், விமானத்தின் இயல்பான எரிபொருள் தேவையை 50% வரை குறைக்கும்.” என ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இயக்குநர் அஜய் சிங் தெரிவித்திருக்கிறார்.
மூலிகை எரிபொருட்கள் முற்றிலும் நிலையான மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. சோதனைக்காக பயன்படுத்தப்பட்ட அந்த எரிபொருள், டேராடூனில் இருக்கும் இந்தியப் பெட்ரோலிய நிறுவனத்தால், ஆமணக்கு விதைகள் மூலம் தயாரிக்கப்பட்டது. இது விமானத்துறையில் கார்பன் பயன்பாட்டையும் 15% அளவிற்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் வேறு சில விமான நிறுவனங்கள் இந்த மூலிகை எரிபொருள் சோதனையை இதற்கு முன்னரே நடத்தியிருக்கின்றன.
- 2011-ல் அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) 75 விமானங்களை கடுகு எண்ணெய் கலவை கொண்டு இயக்கியது.
- 2013-ல் டச்சு ஏர்லைன்ஸ் (Dutch Airlines) நியூயார்க்கிலிருந்து ஆம்ஸ்டர்டம் வரை பறக்கும் விமானங்களை, வாரத்திற்கு ஒரு முறை மூலிகை எரிபொருள் மூலம் 6 மாதத்திற்கு இயக்கியது.
- கடந்த ஜனவரி மாதம் குவான்டஸ் ஏர்வேஸ் (Quantas Airways) ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு மூலிகை எரிபொருள் விமானத்தை இயக்கியது.
“மூலிகை எரிபொருட்கள் நாம் இப்போது பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்களைப் போன்றே சக்தி வாய்ந்தவை. ஆனால், அவற்றை விட மிகவும் விலை மலிவானவை.” என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதாரத்தில் விமானத்துறை
2025-ல் இந்திய விமானச்சந்தை உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக இருக்கும் என அவதானிக்கப்படுகிறது. ஆனால், ஒரு நாட்டின் சின்னச்சின்ன பொருளாதார வளர்ச்சியும் மற்ற நாடுகளால் உற்று நோக்கப் படுகிறது. இது விலைப் போருக்கு வழி வகுக்கும். வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு துறை இத்தகைய அழுத்தங்களால் வெகுவாக பாதிக்கப்படும்.
இந்தியாவில் விமானத்துறைக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், அதை விமான நிறுவனங்களால் நிறைவேற்ற முடிவதில்லை. குறிப்பாக 2012-ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (Kngfisher Airlines) நிறுவனத்தின் வீழ்ச்சிக்குப் பின்பு பெரும்பாலான நிறுவனங்கள் பொருளாதாரத்தில் தத்தளித்து வருகின்றன.
உண்மையில் மற்ற மூலிகை எரிபொருட்களை விட ஆமணக்கு விதைகள் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் சற்று விலை உயர்ந்தது.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோலியப் பொருட்கள் விலை ஆகியவற்றின் காரணமாக விமானப் போக்குவரத்துத் துறை சவால்களைச் சந்தித்து வருகிறது. உள்நாட்டுப் போக்குவரத்து தான் இவற்றிற்கு குறிப்பிடத்தக்க லாபத்தைத் தரும். அதிலும் இந்நிறுவனங்கள் எரிபொருள் தேவையால் பாதிப்படைந்துள்ளன.

ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் தலைகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இண்டிகோ (IndiGo) நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற வருடத்திலிருந்து 97% சரிந்திருந்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 38.06 கோடி ரூபாய் நஷ்டத்தையும், ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) 1,323 கோடி ருபாய் நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.
இதனால் பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக, விலை மலிவாக வரும் எரிபொருளை நிறுவனங்கள் ஆர்வமாய் வரவேற்கும்.
உண்மையில் இது உபயோகமானதா?
ஆனால், உண்மையில் மற்ற மூலிகை எரிபொருட்களை விட ஆமணக்கு விதைகள் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் சற்று விலை உயர்ந்தது. இந்த மூலிகை எரிபொருள் லிட்டருக்கு 43 ரூ முதல் 48 ரூ வரை விலை கொண்டதாக இருக்கும். மற்ற மூலிகை எரிபொருட்கள் 35 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை, விமான எரிபொருளுடன் ஒப்பிடும் பொழுது, கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 60 அமெரிக்க டாலர்கள் மதிப்பை விட உயர்ந்தால் மட்டுமே ஆமணக்கு எரிபொருள் விலை மலிவானதாக இருக்கும். 2017-ல், கச்சா எண்ணெய் விலை 55-60 அமெரிக்க டாலராக இருந்த போது, விமான எரிபொருளின் விலை லிட்டருக்கு 45-55 ரூபாயாகத் தான் இருந்தது. இந்த நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக மூலிகை எரிபொருட்களைப் பயன்படுத்துதல் நல்ல யோசனையாக இருக்காது.
இந்தியாவில் மூலிகை எரிபொருட்களுக்கு வரி குறைவாக இருப்பதை மட்டும் வேண்டுமானால் கணக்கில் கொள்ளலாம்.