இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து (ISRO) 2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு 3 மனிதர்களை விண்வெளிக்கு ககன்யான் திட்டத்தின் மூலம் அனுப்ப இருக்கிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமானது 2004- ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கி இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இத்திட்டம் 2022 – இல் நிறைவேறும் என்று கூறியுள்ளனர்.

இத்திட்டம் எவ்வாறு செயல்படும்?
இத்திட்டமானது 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதாவது ககன்யான் செயற்கைக்கோளுக்கு முன்பு இதைப் போன்று இரண்டு கட்டங்களாக ஆளில்லா செயற்கைகோள்களை அனுப்பி வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு, அதன் பின்பு இறுதியாக மூன்று வீரர்களோடு ஜிஎஸ்எல்வி மார்க் 3 (GSLV Mk III) என்ற ஏவுகணை மூலமாக ககன்யான் செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும்.


இது பூமியிலிருந்து 16 நிமிடத்தில் விண்வெளியை அடைந்து, அங்கு 7 நாள்களுக்கு ஆய்வாளர்கள் ஆராய்சிகளை மேற்கொள்வார்கள். ஆராய்ச்சிகள் முடிவடைந்த பிறகு 36 நிமிடத்தில் பாதுகாப்பாக பூமியை வந்தடைவார்கள் என்று கூறியுள்ளனர். அந்த விண்கலமானது குஜராத் அருகே அரபிக்கடலில் இறக்கப்பட்டு பிறகு அது 20 நாள்களுக்குள் மீட்கப்படும் என்று கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.இதன் மூலமாக விண்வெளி வீரர்கள் 7 நாள்களுக்கு புதுவகையான மருந்து, விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிகளை விண்வெளியில் மேற்கொள்வார்கள். அந்த ஆராய்ச்சி முடிவுகளை பூமிக்கு எடுத்து வருவார்கள். இவர்கள் செல்லும் விண்கலமானது 300-400 கி.மீ தொலைவில் புவியின் தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு விண்வெளியின் கீழ் இவர்கள் இறங்காமல் செயற்கைக்கோள் உள்ளேயே இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். ஏனென்றால், விண்வெளியில் அண்டத்தின் கதிர்வீச்சு தாக்கம் பூமியை விட மிக அதிகமாக இருக்கும் என்பதால் இவர்கள் விண்வெளியின் கீழ் இறங்க மாட்டார்கள்.
விண்வெளியில் ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சிக்குத் தகுதியான 3 இந்திய வீரர்களைத் (பெண்கள் மற்றும் ஆண்கள்) தேர்வு செய்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் இந்திய விமானப்படை மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார் செய்வார்கள். இதற்கான உடைகளும் தயாராகிவிட்டன. இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அவர்கள் வெளி உலகிற்கு வராமல் அவர்களுக்கு விண்வெளி போன்று தனி வளிமண்டலம் அமைத்து இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவார்கள். இது மட்டுமில்லாமல் வெளிநாடுகளின் உதவியாலும் பயிற்சிகள் வழங்கப்படும்.2022-ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சாதனையில் ககன்யான் திட்டம் வெற்றி அடைந்தால் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் நான்காம் இடத்தைப் பெறும். இதனால் நாட்டின் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.