சிரிப்பு என்பது மனித இனத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஏனெனில் சிரிப்பே மனிதனின் பல நோய்களைப் போக்குகிறது . எல்லாம் சரி, செயற்கையாகக் கூட சிரிப்பை வரவழைக்க முடியுமா?
விநோதப் பண்புகள்
நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) தான் சிரிப்பு வாயு (Laughing gas) என்று அழைக்கப்படுகிறது. 1772 – ஆம் ஆண்டிலேயே ஜோசப் பிரிஸ்ட்லே என்னும் வேதியியலாளர் நைட்ரஸ் ஆக்ஸைடைப் பிரித்தெடுத்துவிட்டார். ஆனால், இதன் வித்தியாசமான விளைவுகளால் யாரும் இதைப் பயன்படுத்தவில்லை .
பின்பு, 1844 – இல் ஹொரேஸ் வெல்லர் என்ற பல் மருத்துவர் நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்க மருந்தாகப் பயன்படுத்தினார். அதன் பிறகு நைட்ரஸ் ஆக்ஸைடு மருத்துவ உலகில் பயன்பாட்டிற்கு வந்தது.

நைட்ரஸ் ஆக்ஸைடை மனிதன் சுவாசிக்கும் போது, அந்த வாயு நமது இரத்தத்தில் உடனே கலந்து மூளையைத் தாக்குகிறது. அதுவும் சுவாசித்த ஒரு சில நொடிகளிலேயே. இதனால் பொதுவான விளைவுகளாக, ஒருவிதத் தற்காலிக மயக்கம், பரவச நிலை,கிளர்ச்சி ஏற்படுகிறது. மேலும், சிலர் அடிக்கடி சிரிப்பார்கள். ஆனாலும், நிச்சயம் சுவாசித்த அனைவருமே சிரிப்பதில்லை. இந்த வாயு ஏற்படுத்தும் விளைவுகள் நபருக்கு நபர் வேறுபடுகிறது என்பதே உண்மை.
சிலருக்கு மாயத்தோற்றம் (hallucination), தலைவலி, அரிப்பு கூட ஏற்படலாம். எனவே கீழே விழுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த விளைவுகள் அனைத்தும் சுவாசித்த உடனே ஏற்பட்டு சில நிமிடங்களில் நீங்கி விடும். பலமுறை சுவாசித்தால் விளைவுகள் அதிக நேரம் இருக்கும்.
நைட்ரஸ் ஆக்ஸைடின் தன்மை மற்றும் விளைவுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்தினால் இது பாதுகாப்பானது தான். ஆனால், அதிகமாக உபயோகிக்கும் போது சிலரை மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தூண்டுகிறது.
பக்க விளைவுகள்
இதனை ஒருவர் தொடர்ந்து உட்கொள்ளும் போது, நைட்ரஸ் ஆக்ஸைடு அந்த நபரின் நுரையீரலில் உள்ள காற்றை அப்புறப்படுத்துவதோடு மட்டுமின்றி இரத்தம் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதையும் தடுக்கிறது. மேலும், அவரது உடலின் எதிர்வினையாற்றல் திறனையும் தாமதப்படுத்துகிறது . ஆனால், அவரது நுரையீரல் எப்போதும் போல் கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடுகிறது . இதனால் அவருக்கு சாதாரணமாக சுவாசிப்பது போல தான் இருக்கும்.
மேலும், இந்த வாயு முதலில் அவரின் பதட்டத்தைக் குறைப்பதால் அவரால் எதிர்வினை ஆற்ற இயலாது. விளைவு, முதலில் உணர்வு இல்லா நிலை அதன் பின்னர் மூளைச் சேதம் இறுதியில் இறப்பும் ஏற்படலாம்.

தினமும் தொடர்ந்து இதை உட்கொள்வதால், உடல் மீண்டும் சாதாரண நிலையை அடைவது என்பது சவாலான ஒன்றாகிறது. ஏனெனில், தொடர்ந்து உபயோகிப்பவரின் உடலில் வைட்டமின் B12 செயலிழக்கிறது. வைட்டமின் B12 தான் டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் நரம்பு மண்டல பராமரிப்பிற்கு அவசியம். மேலும் இந்த வாயு ரத்த சோகையையும் ஏற்படுத்துகிறது.
சொல்லப் போனால், காற்றில் கூட சிலசமயம் நைட்ரஸ் ஆக்ஸைடு இருக்கிறது. எப்படி தெரியுமா? நாம் உபயோகிக்கும் சில வாகனங்கள் வெளிவிடும் புகையினால் தான் .. வாகனங்களில் உள்ள எரி பொருள் மற்றும் காற்றில் உள்ள ஆக்சிஜன் ஆகியவை எரிந்து தான் என்ஜின்கள் இயங்குகின்றன. காற்றில் ஆக்ஸிஜனோடு நைட்ரஜனும் அதிக அளவில் உள்ளது. எனவே எரிபெருள் எரியும் போது நைட்ரஜன் வினை புரிந்து NO, NO2, N2O (நைட்ரஸ் ஆக்சைடு) NO3 போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இவை ஓசோன் பாதிப்பிற்கும் காரணமாக அமைகின்றன.
பயன்பாடுகள்
- பல் மருத்துவம், பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் தரப்படுகிறது. ஆனால் தூய நைட்ரஸ் ஆக்ஸைடு அபாயகரமானது. எனவே, ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு கலவையாகத் தரப்படுகிறது.
- ராக்கெட் தொழில்நுட்பத்திலும், இயந்திரங்களின் வெளியிடு திறனை அதிகரிக்கவும் கூட நைட்ரஸ் ஆக்ஸைடைப் பயன்படுத்துகிறார்கள்.
மொத்தத்தில் நைட்ரஸ் ஆக்ஸைடின் விளைவுகள் மிகவும் விநோதமானவை. ஒருவேளை நீங்கள் நைட்ரஸ் ஆக்ஸைடைக் கையாள நேர்ந்தால் கொஞ்சம் இல்லை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .