உலகின் அதிக விலையுள்ள உலோகம் என்றால் நமக்குத் தங்கம் தான் ஞாபகம் வரும். பிளாட்டினம், தங்கத்தினை விட விலை அதிகம்தான் என்றாலும் நாம் தங்கத்தினைப் பற்றியே சிந்தித்துப் பழகிவிட்டோம். சரி, அதைவிட விலை அதிகம் எது? வைரம் என்பீர்கள். அதற்கும் மேல் எதாவது இருக்கிறதா? என்றால் இருக்கிறது. அதன் பெயர் கலிபோர்னியம். விலையைக் கேட்டால் தலை சுற்றிக் கீழே விழுந்து விடுவீர்கள். ஒரு கிராம் 270 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பில் 1960 கோடி!!

கண்டுபிடிப்பு
1950 – ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலில் கலிபோர்னியத்தைக் கண்டுபிடித்தார்கள். அதனால் தான் அப்படிப் பெயர் வந்தது. கியூரியத்தை ஆல்பா துகள் மூலம் தாக்கும்போது கலிபோர்னியம் எட்டிப்பார்த்திருக்கிறது. தனிம வரிசை அட்டவணையில் 98 – வது இடத்தில் இருக்கிறது கலிபோர்னியம்.
அடிப்படையில் கதிரியக்கத் தனிமமான இது இயற்கையாகக் கிடைப்பதில்லை. வேதிவினையின்போது மட்டுமே இவை வெளிப்படும். இதன் நிலையில்லாத்தன்மை அதிகமாக இருப்பதால் வெகுநேரம் ஆராய்ச்சிக்கு இதனை உட்படுத்த முடியாத நிலை உள்ளது. இன்று வரை கலிபோர்னியத்தின் அடர்த்தியைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களால் இயலவில்லை.
அணு உலைகளில்…
ரஷ்யாவின் அணுஉலைகளில் கலிபோர்னியம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. சக்திவாய்ந்த நியூட்ரான் மூலமாக இது கருதப்படுகிறது. ஆக்டினைடுகளின் குடும்பத்தைச் சேர்ந்த இது 20 வகையான ஐசோடோப்புகளைக் கொண்டிருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளித்தாதுக்களைக் கண்டுபிடிக்க கலிபோர்னியத்தின் ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
