இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) , 2008 – இல் நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-1 செயற்கைக் கோளை ஏவி வெற்றியைக் கண்டது.
அடுத்த நிலவு ஆராய்ச்சிப் புரட்சியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திராயன்-2 திட்டமும் வெற்றி காணும் என நம்பப்படுகிறது. இது நிலவு ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் நிலவிற்கு மனிதனை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சந்திராயன்-1
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota) உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 22-10-2008 அன்று சந்திராயன்-1 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. சந்திராயன்-1 திட்டமானது நிலவில் நீர் மூலக்கூறுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ததில் அங்கு தண்ணீர் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிப் படுத்தியது.
சந்திராயன்-1 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பிலிருந்து, 100 கி.மீ உயரத்தில் இரசாயன, கனிம மற்றும் நிலவியல் புகைப்படங்களை எடுப்பதற்காக சந்திரனின் சுற்றுப் பாதையில் சுற்றி வந்தது. பிறகு இதன் சுற்றுப் பாதை 200 கி.மீ ஆக 2009 – ஆம் ஆண்டு மே மாதத்தில் உயர்த்தப்பட்டது, அப்பொழுது இச்செயற்கைக்கோள் நிலவைச் சுற்றி 3400-க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளை உருவாக்கியது.
முடிவாக 2009 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 – ஆம் தேதி பூமியின் தொடர்பை இழந்தது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

சந்திராயன் 2
சந்திராயன்-2 என்பது நிலவிற்கு இந்தியா நிலவிற்கு அனுப்பும் இரண்டாவது செயற்கைக்கோள் ஆகும். இது Orbiter, Lander, Rover போன்ற செயல்முறைகளை உள்ளடக்கியது. இது முழுக்க முழுக்க உள்நாட்டுப் படைப்பாகும். இது சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 1௦௦ கி.மீ தொலைவை நெருங்கிய பிறகு தனது சுற்றுப்பாதையிலிருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்கி (lander), ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவரை (Rover) பயன்படுத்தி நிலவில் சுற்றி வரும். இது சுற்றிவரும் போது எடுக்கப்படும் தரவுகளை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பும் எனவும், இத்தரவானது நிலவில் உள்ள மண்ணின் பகுப்பாய்விற்கு உதவும் எனவும் கூறப்படுகிறது.

இதன் நோக்கமானது சந்திரனில் உள்ள நிலத்தின் அமைப்பு (Topography), கனிப் பொருளியல் (Mineralogy), அடிப்படை வளங்கள் (Elemental abundance), சந்திர கிரகணம் (Lunar eclipse), ஹைட்ராக்சில் (Hydroxyl) மற்றும் நீர்-பனி (Water-ice) போன்றவைற்றின் தரவுகளைச் சேகரிப்பதாகும்.
இச்செயற்கைக்கோள் 2018 இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.