2017 ஆம் ஆண்டின் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) முதல் 10 வளரும் தொழில்நுட்பங்களில் செயற்கை இலையும் ஒன்று.
எல்லாம் போச்சு, மரங்களையும் அழிக்க வந்து விட்டதா செயற்கை இலை என்று நீங்கள் பதற வேண்டாம். இத்தொழில்நுட்பத்தால் நன்மையே தவிர, தீமை இல்லை. இது சுற்றுச் சூழலை மேம்படுத்தவே போகிறது.
பத்து வருடங்களுக்கு மேல் நடந்து வரும் ஆராய்ச்சிகளால், இதன் அருமையை உணர்ந்த பில் கேட்ஸ், இதன் வலிமையை மாயாஜாலம் போன்றது என்கிறார். மேலும், இது இந்த நூற்றாண்டில் வேதியியலில் கிடைத்தற்கரிய மிக முக்கியமான ஒரு தொழில்நுட்பமாக இது கூறப்படுகிறது. இது என்ன தொழில்நுட்பம் , இது எப்படி வேலை செய்கிறது, பயன் என்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.
செயற்கை இலை மற்றும் செயற்கை ஒளிச்சேர்க்கை – ஓர் அறிமுகம்
சூரியனில் இருந்து வெளிவரும் சூரிய ஆற்றலை நம்மால் மின்னாற்றலாக மாற்ற முடியும். இது நமக்கு தெரிந்தது தான். மின்னாற்றலாக மாற்றுவதற்கு சூரிய ஒளி தகடுகளை (Solar Panel) பயன்படுத்தி வந்தோம்.இனி வருங்காலத்தில், அதற்கு நாம் செயற்கை ஒளிச்சேர்க்கை (Artificial Photosynthesis) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறோம். செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்திற்கு உதவுவது தான் செயற்கை இலை.
இயற்கை தன்னகத்தே பல்வேறு வியத்தகு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. தாவரங்கள், சூரிய ஒளியில் இருந்து வரும் ஆற்றலை, நீர் மற்றும் கரியமில வாயுவைப் (CO2) பயன்படுத்தி கார்போஹைடிரேட்-களாக மாற்றுகின்றன.
இதே முறையை செயற்கை முறையில் செய்து கார்போஹைடிரேட்-க்கு பதில், எரிபொருளையும், பிற வேதிப்பொருளையும் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமே செயற்கை ஒளிச்சேர்க்கை.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
செயற்கை ஒளிச்சேர்க்கை முறையானது, நீர் மற்றும் கரியமில வாயுவை சூரிய ஒளியைக் கொண்டு ஹைட்ரஜன் (H), ஆக்ஸிஜன்(O) மற்றும் கார்பன்(C) என்று பிரிக்கிறது. இம்முறையிலிருந்து பெறப்படும் ஹைட்ரஜனை நேரடியாக எரிபொருளாக பயன்படுத்தலாம் அல்லது பிற வேதிப்பொருள்களை கலந்து இப்போது நாம் பயன்படுத்தும் திரவ எரிபொருளான மெத்தனால் போன்றவற்றையும் தயாரிக்கலாம்.
மின்கலன்கள் திரவ எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், ஒப்பீட்டளவில் கனமாக மற்றும் பருமனாக இருப்பதால் இவ்வகை திரவ எரிபொருள் மிகவும் தேவையாக இருக்கிறது.
ஆனால், செயற்கை ஒளிச்சேர்க்கை முழுமை பெறுவதில் சில சவால்கள் உள்ளன. தாவரங்கள் வெறும் 1% சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி கார்போஹைட்ரெட் – ஆக மாற்றுகின்றன. இது வணிக ரீதியாக வெற்றி பெற உதவாது என்பதால், ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழக (Monash University) அறிவியலாளர்கள், கடந்த ஆண்டு வரை 22% சூரிய ஒளியை பயன்படுத்தும் வகையில் மாற்றி, அதில் எரிபொருள் பெற்று அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். ஆனால் இதுவும் போதாது என்பதால், மேலும் முயற்சிகள் தொடர்கின்றன.
இது பற்றி மேலும் அறிய இந்த காணொளியைக் காணுங்கள்.
இதன் எதிர்காலம்
விரைவில் இது மேலும் சில சதவீதங்கள் மேம்பட்டு நமது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைட்ரஜன் ஒரு விலை மலிவான, தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரமான எரிபொருளாக, இம்முறையில் பெறமுடியும் என்கிறார் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியர் லியோன் ஸ்பிசியா.
இயற்கையின் தொழில்நுட்பத்தை நுணுக்கமாக அறிந்து, அதையே பயன்படுத்தி விரைவில் நாம் சுற்றுச்சூழல் மாசற்ற எரிபொருளை பெற்றால் எதிர்கால தலைமுறைக்கு நல்லது. இத்தொழில்நுட்பம் அதை சாத்தியமாக்கும் என நம்புவோமாக.