இந்தியாவின் முதல் ட்ரோன் ஏர் டாக்சி – தக் ஷா அணி சாதனை

0
154
தக் ஷா அணியினர்

போக்குவரத்து நெரிசல்களில் இருந்து தப்பிக்க, அவசர காலங்களில் உதவப் பயன்படுவது தான் கால் டாக்சி போன்று வானில் பறக்கும் ஏர் டாக்சி (Air Taxi). இந்தியாவிலேயே  முதன்முறையாகத் தமிழகத்தில் தற்போது இந்த ஏர் டாக்சிக்கு வெள்ளோட்டம் பார்க்கப் பட்டுள்ளது.

நடிகர் அஜித்தை தொழில் நுட்ப ஆலோசகராகக் கொண்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் குழு ( தக் க்ஷா ), ஏற்கனெவே ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளது. இந்த ஏர் ஆம்புலன்ஸ் சென்னையில் இருந்து வேலூர் வரை சென்று வரும் வல்லமை படைத்தது.

dhaksha mit

அஜித் தலைமையிலான அணி

‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித், திரைத்துறையில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு இருக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து சென்னை திரும்பிய அஜித், தான் ஆலோசகராக இருக்கும் தக் க்ஷா குழுவை நேற்றுச் சந்தித்தார். அப்போது அவ்வணியினர் தயாரித்த ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை இந்தியாவில் முதல் முறையாக சோதனை ஓட்டமாகப் பறக்க விட்டார் அஜித்.

ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியைக் கடந்த வருடம் துபாய் அறிமுகப்படுத்தி இருந்தது. அப்போது , இந்த வசதியெல்லாம் நம் நாட்டிற்கு வர இன்னும் 15 ஆண்டுகளாவது ஆகும் என்று நாம் எண்ணினோம். ஆனால், தற்போது ஒரே ஆண்டில் அந்தச் சாதனையை, அஜித்தை தலைமையாகக் கொண்டு செயல்படும் தக் ஷா குழுவினர் முறியடிக்க உள்ளனர்.

ஏர் டாக்சியின் சிறப்பு அம்சங்கள்

  • 80 கிலோ எடை கொண்ட மனிதர்களைத் தூக்கிச் செல்லும் திறனுடையது.
  • 20 கிலோ மீட்டர் சுற்றளவில் எளிதாகப் பறந்து செல்லக் கூடியது.
  • இந்தியாவிலே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஏர்டாக்சியின், பாகங்களை ஒருங்கிணைத்து வானில் பறக்க வைத்து பரிசோதித்தனர் தக் ஷா குழுவினர். அந்தக் குட்டி விமானம் வெற்றிகரமாக வானில் இயங்கியது.

drone air taxi
துபாய் அறிமுகப்படுத்திய ஏர் டாக்ஸி

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் செந்தில் கூறுகையில், வடிவமைப்பில் இன்னும் முழுமையடையாத இந்த ஏர் டாக்சியைத் தமிழக அரசின் நிதி உதவி கிடைத்தால், இருக்கை மற்றும் மேற்கூரையுடன் கூடிய சிறிய ரக கார் போல வடிமைத்து வானில் பறக்கும் டாக்சியாகவும், ஆபத்து காலங்களில் உயிருக்குப் போராடும் நபர்களை ஏற்றி மருத்துவமனைகளுக்கு விரைவாகக் கொண்டு செல்லும் ஏர் ஆம்புலன்சாகவும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தக் ஷா மாணவர் குழு திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசிடம் இருந்து நிதி உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.