4. எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து
பழங்காலத்திய அரசர்கள் எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். சிறிய கவனக் குறைவு கூட மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நன்றாகவே அறிந்திருந்தார்கள். எப்போதும் யாருடனும் போர் மூளலாம் என்ற பதைபதைப்பு எல்லா அரசர்களுக்கும் இருந்தது. எனவே வலிமையுடன் வாழ்வதற்கான பல்வேறு ஆராய்ச்சிகள் அந்நாளில் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் துருக்கியின் கருங்கடல் பகுதியான போன்டஸ்(Pontus) ஐ ஆண்ட ஆறாம் மித்ரடேட்ஸ் (Mithradates VI) புகழ்பெற்றவர். விஷ முறிவு மருந்துகளை சிறைக் கைதிகளின் மீது பிரயோகித்துப் பார்ப்பதில் தனியா ஆர்வம் கொண்டவர்.

கி.மு 66ல் ராணுவ தலைவர் பொம்பே-வால் மித்ரடேட்ஸ் வீழ்த்தப்பட்டபோது போர்க் களத்திற்கு கொணரப்பட்ட மருந்தான “தேரியாக்” ஐ கண்டுபிடித்தவர், அரசர் நீரோவின் மருத்துவரான அந்த்ரோமர்சூஸ்(Andromachus) ஆவார். 64 வகையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் தேரியாக்கில் பெரும்பாலும் தாவரங்களே சேர்க்கப்பட்டாலும் (ஒபியம் உள்பட) மிக முக்கியமான ஊடு பொருளாக கருதப்படுவது வைபர் வகை பாம்பின் சதைப்பகுதியே. அக்காலத்தில் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாக தெரியாக் அறியப்பட்டது.

ஆரம்ப காலகட்டத்தில் சில தவறுகள் நேர்ந்திடினும் பிற்காலங்களில் தேரியாக் விலைமதிப்பற்ற பொருளாகக் கருதப்பட்டது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதிக அளவு தேரியாக்கை அரேபியா, ஐரோப்பா மற்றும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது வெனிஸ்.
5. கேன்சர் கட்டிகளை அகற்றப் பயன்படுத்தப்பட்ட மயக்க மருந்து!!
தனது அறுபதாவது வயதில் தனது இடது மார்பில் கட்டிகள் தோன்றவே கலக்கமடைந்தார் கான் அயா(Kan Aiya). அவரின் சகோதரி ஒருவர் கேன்சரினால் அவதியுற்றதையும் வலியில் துடித்ததையும் அருகிலிருந்து பார்த்திருக்கிறார் அயா. அவர் சந்தேகித்தது போலவே அவருக்கும் கேன்சர் வந்திருந்தது. வருடம் 1804. இயற்கை அவருக்கு அறுவை சிகிச்சை எனும் இன்னுமொரு வாய்ப்பை அளித்தது.

செய்சு ஹனோகா (Seishu Hanoakaa)(1760-1835) கியோடோ வில் மருத்துவம் படித்தவர். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன அறுவை சிகிச்சை நிபுணரான ஹவா தோ(Houa T’o) வினைப்பற்றயும், அவருடைய நோயாளிகள் வலியினால் துடிக்கும் போது ஹவா அளித்த மயக்க மருந்துகளைப் பற்றியும் தொடர்ந்து படித்து வந்தார் ஹனோகா. ஹவாவின் மூலச் சேர்க்கை விதிகளைப் பின்பற்றி சுசென்சான்( Tsusensan) எனப்படும் வீரியமிக்க சூடான பானத்தை தயாரித்தார் ஹனோகா. அதனோடு ததுரா மெடல்(Datura Metel) , மொன்க்சூட்(Monkshood) மற்றும் அன்ஜெளிக்கா டிகர்சிவா (Anjelica Decursiva) போன்ற மூலிகைகளையும் அதனுடன் கலந்தார். மருந்து தயாரானது.
150 க்கும் அதிகமானோர் இதே முறையில் குணப்படுத்தப்பட்டனர்!!
இம்மருந்தால் நோயாளியை ஆறு முதல் 24 மணி நேரம் வரையில் மயக்கத்தில் வைத்திருக்க முடியும் . சுசென்சான் வீரியம் அதிகம் என்பதால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு கூட ஆபத்து வரலாம் என்ற நிலையில் அயாவிற்கு அம்மருந்து செலுத்தப்பட்டது. 1804-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி கான் அயாவிற்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றியடைந்தது. அதன் பின்பு, 150 க்கும் அதிகமானோர் இதே முறையில் குணப்படுத்தப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக கான் அயா அதற்கடுத்த வருடம் இறந்து போனார். ஆனாலும், இம்முயற்சி மேற்குலகில் கேன்சருக்கு எதிராக மக்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கையை பல்லாயிரக்கணக்கானோருக்குத் தந்தது என்றால் மிகையில்லை.
6. புகழ்பெற்ற அட்டைப்பூச்சி மருத்துவம்.
அட்டையா? என முகம் சுழிக்காதீர்கள். அட்டைகளை வைத்து செய்யும் இவ்வகை மருத்துவ முறைகள் உலகம் முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் முறையாக அதன் பயன்பாட்டை உலகத்திற்கு அறிவித்தவர் பிரெஞ்சு மருத்துவரான பிரான்கோயிஸ் ஜோசெப் விக்டர் ப்ரவுச்சயிஸ்(Francois- Joseph-Victor Broussais) (1772-1838). பல நோய்களுக்குக் காரணமாக இருக்கும் வீக்கம் மற்றும் ரத்தம் கட்டிப்போதல் போன்றவற்றை அட்டையின் மூலம் குணப்படுத்தலாம் என்றார் பிரான்கோயிஸ்.

அட்டையினை வீக்கம் கொண்ட இடங்களில் கடிக்க விடுவதால் தேங்கி நிற்கும் ரத்தத்தை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி வெளியேற்றிவிடலாம். 19-ஆம் நூற்றாண்டின் பெரும்பாலானோர் இவ்வகையினை முயற்சி செய்து பயனடைந்திருக்கின்றனர்!!! அதே வேளையில் சிலருக்கு ஒவ்வாமைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
7. மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்ட ஒயின் (wine)
1884-ஆம் ஆண்டு எடின்பரோ மருத்துவர்களின் மாநாட்டில் ராபர்ட் பெல்கின் (Robert Felkin) ஐந்து வருடத்திற்கு முன் ஆப்ரிக்காவை சேர்ந்த புன்யோரோ கிடாரா (Bunyoro Kitara)வில் தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சைப் பற்றிய ஒரு சுவாரசிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

உகாண்டாவில் இருக்கிறது புன்யோரோ கிடாரா. மருத்துவ வசதிகள் அதிகம் இல்லாத அந்நாட்டில் வீட்டிலிருந்த பொருட்களை வைத்து அறுவை சிகிச்சையை முடித்திருக்கிறார் பெல்கின். தாய் சேய் இருவருக்கும் பாதிப்பில்லாமல் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சையின் போது தாயாருக்கு பனானா ஒயின்(Banana Wine)மூலம் சரிபாதி மயக்க மருந்தானது கொடுக்கப்பட்டிருக்கிறது!! எவ்வித தொற்றும் ஏற்படாமல் இருக்க அடிவயிற்றில் ஒயின் தடவப்பட்டிருக்கிறது. சிகிச்சையின் போது பெல்கின் ஏழுமுறை பளபளப்பாக்கப்பட்ட இரும்புக் கத்தியினை உபயோகித்திருக்கிறார்.
துணிகளில் இருந்து எடுக்கப்பட்ட நூலினால் தைத்து அதன் மேலே அரைத்த மூலிகையை வைத்து உலர்ந்த வாழை இலையினால் மூடி கட்டுப்போட்டிருக்கிறார்!!
கத்தியினால் அடிவயிற்றில் நேராக கிழித்து, கருப்பை சுவற்றின் மூலம் குழந்தையை வெளியில் எடுத்திருக்கிறார்கள். மேலும் நஞ்சுக்கொடியை நீக்கி, தொடர் அழுத்தம் கொடுத்து கருப்பையின் வாயினை சுருங்கச் செய்திருக்கிறார்கள். குழந்தையை வெளியே எடுத்த பிறகு சதைகளை கனமான துணிகளில் இருந்து எடுக்கப்பட்ட நூலினால் தைத்து அதன் மேலே அரைத்த மூலிகையை வைத்து உலர்ந்த வாழை இலையினால் மூடி கட்டுப்போட்டிருக்கிறார். அன்றிலிருந்து பதினோராவது நாள் பெல்கின் அவ்வூரை விட்டு வரும்வரை தாயும் சேயும் நலமாகவே இருந்திருக்கின்றனர். தற்போது அப்பகுதிகளில் அதிக அளவிலான சிசேரியன்கள் நடைபெறுகின்றன. அந்தப் பிராந்திய மருத்துவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளும் நவீன மருத்துவ வசதிகளும் உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றன.