சமகாலத்தில் தவிர்க்கமுடியாத மேதைகளாக இருந்த சிலர் அரசியல் மற்றும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் வரலாற்றின் புகழ் பக்கங்களில் இருந்து மறைக்கப்படுவதுண்டு. அப்படி ஒருவரை நீங்கள் கூகுளில் தேடினால் நிச்சயம் உங்கள் முன் டெஸ்லாவின் புகைப்படம் வந்து நிற்கும். தற்போதைய குரேஷியா இருக்கும் அப்போதைய செர்பியாவில் 1856 ஆம் ஆண்டு பிறந்தவர் டெஸ்லா. பின்னாளில் அறிவியல் வட்டாரத்தில் எதிரும் புதிருமாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசனிடம் உதவியாளராகத்தான் முதலில் டெஸ்லா தனது அறிவியல் பயணத்தைத் துவங்கியுள்ளார்.

நவீன தொழில்நுட்ப காலத்தின் துவக்கத்தின் இரு மேதைகளின் சாதனைக் கோபுரங்கள் வானுயர நிற்கின்றன. ஒன்று எடிசனின் டேரக்ட் கரண்ட் மற்றொன்று டெஸ்லாவின் ஆல்டர்நேடிவ் கரண்ட். டெஸ்லாவின் ஆகப்பெரிய வெற்றிகளானது அவரின் ஆல்ட்டர்நேட்டிவ் கரண்ட் சிஸ்டம் சார்ந்த பணிகளாலேயே நிர்ணயம் செய்யப்பட்டது. எடிசனின் டிசி, அதாவது டைரக்ட் கரண்ட் ஆனது விளக்குகளில் நன்கு வேலை செய்தது, ஆனால் அவற்றால் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை பரிமாறிக்கொள்ள முடியவில்லை.
எந்த கரண்ட் சிறந்தது என்பதைக் கண்டறிய கரண்ட் வார் எனும் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதியில் எடிசன் வெற்றிபெறவே டெஸ்லாவின் பெயர் மெல்ல மக்களுக்கு மறையத் துவங்கியது. AC கரண்ட் ஆபத்தானது என மக்களை நம்பவைக்க விலங்குகளின் மேல் அதனைப்பாய்ச்சி கொன்றதாக எடிசன் மேல் குற்றச்சாட்டு உண்டு. ஒன்றல்ல இப்படி டெஸ்லாவின் புகழைக் கட்டுப்படுத்த எடிசன் செய்த வேலைகளைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

Futurist
எதிர்கால மக்களின் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே சிந்திக்கக்கூடியவர்களை Futurist என்று அழைக்கலாம். அதற்கான சரியான உதாரணம் டெஸ்லா தான். வயர்லஸ் தகவல் தொடர்பு பற்றி சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே பேசினார். நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் மின்னழுத்த மின்சாரத்தை உருவாக்கி தொலைதூரத்தில் இருக்கும் இடங்களுக்கு அனுப்பும் முயற்சியிலும் வெற்றிகண்டார். மார்கோனி ரேடியோவை கண்டுபிடிப்பதற்கு முன்னரே குறைந்த அலைநீளம் கொண்ட கதிர்களைப்பயன்படுத்தி தகவலைக் கடத்த முடியும் என ஆராய்ச்சி மூலம் நிரூபித்தவர் டெஸ்லா. எக்ஸ் – ரே உருவாக்கம் இவருடைய பங்களிப்புகளில் மிக முக்கியமானதாகும். இத்தனை விஷயங்களில் இயங்கிய டெஸ்லா மனிதர்களிடம் புகழை அடைய முடியாமல் போனதன் காரணம் அவர் சிந்தனை சார்ந்தவராக மட்டுமே இருந்தார் என்பதுதான்.
அதை இப்படியும் சொல்லலாம். மக்களின் நேரடி பயன்பாட்டு கருவிகளை அவர் உருவாக்க சிரமப்பட்டதில்லை. கோட்பாட்டை துல்லியமாக வகுக்க இவரால் முடிந்ததால் இவரது அறிவியல் கருத்துகள் பின்னாளில் திருடப்பட்டு பலரால் காப்புரிமை வாங்கப்பட்டன. ஆனால் அவர் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் புதிய எதிர்காலத்திற்காக தனது ஆயுளை ஒப்புக்கொடுத்தார்.

கடைசிக்காலம்
டெஸ்லாவின் கடைசிக்காலம் மிகவும் துன்பங்கள் சூழ்ந்ததாகும். ஆராய்ச்சிகளுக்காக வாங்கிய கடன் தொல்லைகள் அதிகரித்தன. கூடவே இதய நோயும் அவரைப்படுத்தியது. கையில் போதுமான பணம் இல்லாமல் திண்டாடிய டெஸ்லா 1943 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் நாள் நியூயார்க்கின் ஒரு ஹோட்டல் அறையில் இறந்தார். “இந்த உலகத்திலேயே மிக சிறந்த மேதையாக நீங்கள் இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?” கொஞ்சமும் யோசனையின்றி ஐன்ஸ்டின், “எனக்கு எப்படி தெரியும்? இது நீங்கள் டெஸ்லாவிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?” என்றார். அதுதான் டெஸ்லாவின் உயரம். அவர் வாழ்ந்தது முழுவதும் அமெரிக்காவில் என்றாலும் அவரை இன்னும் செர்பியா மற்றும் குரேஷியா நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.