தங்கள் முகத்தை விதம்விதமாகப் படம் எடுத்து, வெவ்வேறு ஃபில்டர்களில் போட்டு அழகு பார்க்கும் ஆர்வம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
ஓ வாவ், செம, பியூட்டிஃபுல் போன்ற கமெண்ட்டுகளுக்கு ஆசைப்பட்டுத் தொடர்ச்சியாக இது போன்ற ஃபில்டர் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர் மக்கள். ஆனால், இந்த விஷயம் இதோடு முடிவதில்லை என்று உளவியலார்கள் எச்சரித்திருக்கின்றனர்.
இப்படி சொந்த முகத்தினை வெவ்வேறு ஃபில்டர்களைப் பயன்படுத்தி மாற்றுவது, சுய திருப்தியின்மைக்கு மனதைத் தள்ளக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள் .

ஏற்கனவே பல இளம் வயதினர் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில், பல பேர் இந்த ஃபில்டர் முகங்களின் படங்களை எடுத்துக் கொண்டு , அது போல முகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்ற வேண்டும் என்று தங்களிடம் வருவதாக பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் சொல்வதைச் சுட்டிக் காட்டும் உளவியலாளர்கள், இந்த அல்ப சந்தோஷம், Snapchat Dysmorphia எனப்படும் சோஷியல் மீடியா டிஸார்டருக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்திருக்கின்றனர்.
அமெரிக்க முக மாற்று மற்றும் மறுகட்டமைப்பு அறுவை சிகிச்சை நிலையம் (American Academy For Facial Plastic And Reconstructive Surgery) நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவுகள், 55 சதவீத பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகள், “செல்பியில் நான் மேலும் அழகாகத் தெரிவேனா?” என்ற கேள்வியுடன் தான் வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றம் செய்ய வாய்ப்பில்லாதவர்களின் தொடர் சிந்தனைகள் எவ்வித மனச்சிக்கல்களை உருவாக்கும் என்றும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

சமீபகாலமாகத் தொடர்ந்து வரும் சமூகக் குற்றங்களுக்குப் பெரும்பான்மையான மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதே காரணமாக இருக்கிறது. செல்ஃபி புகைப்பட மோகத்தினாலும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் ஃபில்டர் செய்யப்பட புகைப்படங்களால் ஏற்படும் உளவியல் ரீதியான தாக்கங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.
ஒப்பனை என்பதே ஒரு ஆடம்பரம் தான். இயல்பே அழகு. அதுவே நம் அடையாளம். இயல்பை மாற்ற முனைவது அடையாளத்தை அழிக்கத் துணிவதற்கு சமமானதாகும். இயல்பை நேசியுங்கள். அதைக் கொண்டாடுங்கள். முகம் மட்டுமல்ல வாழ்வே பிரகாசிக்கும். நீடூழி வாழ்க,