பேய் இருக்கா இல்லையா? நம்பலாமா நம்பக்கூடாதா? என்று கேட்டால் பேய் என்று ஒன்று கண்டிப்பாக இல்லை என்று தான் பெரும்பாலும் சொல்லுவார்கள். பேய் இல்லை என்று பலரும் நம்பினாலும் பேய் படங்கள் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளிவருவது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்று கொண்டும் தான் இருக்கின்றன. பேயை துளி கூட நம்பாத மக்களும் அந்த படங்களை பார்த்து பயந்து விடுகிறார்கள். இன்னும் சிலருக்கு பேய் படம் என்றால் மட்டும் அவ்வளவு பிடிக்கும். காரணம் பேய் மற்றும் திகில் படங்கள் தரும் அந்த பய உணர்வும் திகிலும் தான். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரஸ்யமும், ஒருவித சாகச உணர்வும் தான் பயந்தாலும் கூட தொடர்ந்து பேய் படம் பார்க்க சிலரை தூண்டுகிறது. சரி, பேய் மற்றும் திகில் படங்கள் பார்க்கும் போது நமக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படும் தெரியுமா?

கண்டிப்பாக இல்லை என்று நமக்கு தெரிந்த ஒரு விஷயத்தை, உண்மை என்பது போலவே காட்சி படுத்தி நம்மை பயமுறுத்தும் படி தான் படங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் அவை எல்லாம் படம் பார்க்கும் வரை தான். படம் முடிந்த பிறகு பெரும்பான்மையான மக்கள் அதில் இருந்து வெளியே வந்து விடுவார்கள். சிலர் மட்டும் அதன் பிறகும் சில நாட்கள் பயந்து கொண்டே இருப்பார்கள்.
அமைக்டலா
மூளையில் இருக்கும் அமைக்டலா (Amygdala) என்ற பகுதி தான் இவை அனைத்திற்கும் காரணம். கீழே உள்ள படத்தில் உள்ள சிவப்பு நிற பகுதி தான் அமைக்டலா. இந்த அமைக்டலா பகுதியில் பல நியூரான்கள் சேர்ந்து கொத்தாக இருக்கும். இதனால் மூளையின் பகுதிகளான ஹைப்போதலாமஸ் மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதிகளுடன் தொடர்பு கொள்ள முடியும்.
பேய் மற்றும் திகில் படங்கள் பார்ப்பதால் வாழ்வில் ஏற்படும் பயங்கரமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறமை வளர வாய்ப்புள்ளது!!
அமைக்டலா பகுதி மூளையில் உள்ள பரிவு நரம்பு மண்டலம் (sympathetic nervous system) பகுதியை ஹைப்போதலாமஸ் மூலம் முடுக்கி விடும். பயத்தை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்கான பொறுப்பு இந்த ஹைப்போதலாமஸிடம் தான் உள்ளது. அதாவது பயம் வந்தவுடன் கத்தி வேகமாக தப்பித்து ஓட வலியுறுத்தும். விளைவு இது நமது சிறுநீரகத்தின் மேல்பரப்பில் இருக்கும் அட்ரீனல் சுரப்பியை அட்ரினலின் ஹார்மோனை சுரக்க தூண்டும். இப்படி அட்ரினலின் ரத்தத்தில் கலந்தவுடன் ரத்தக் குழாய்களைச் சுருக்கி, தசைகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கச் செய்யும். இதனால் நம்முடைய இதயம் துடிக்கும் வேகம் வழக்கத்தை விட அதி வேகமாகும், வியர்வையும் அதிகமாகும், உள்ளங்கைகள் ஜில் என்று இருக்கும், வாய் உலர்ந்து சுவாசம் ஆழமாகும். இவ்வளவு மாற்றங்கள் நிகழ்வதால் தான் இந்த நேரத்தில், உடலில் ஏற்படும் வலி கூட நமக்குப் பெரியதாகத் தோன்றாது. இதனால் தான் ஒரு திகில் படமோ பேய் பார்க்கும் பார்ப்பவர்கள் கத்துவார்கள், குதிப்பார்கள் அல்லது அதிக சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

மூளையின் இன்னொரு பகுதியான ஹிப்போகேம்பஸ் நினைவுகளை பதிவு செய்யும் பகுதி. அதனால் இப்பகுதி மூளைக்கு நாம் இருக்கு இடம் மற்றும் சூழ்நிலை குறித்து அதாவது நீங்கள் படம் தான் பார்க்கிறீர்கள் எந்த ஆபத்தும் இல்லை என்று விளக்கும். அதனால் தான் எங்கும் ஓடாமல் தொடர்ந்து படம் பார்க்க முடிகிறது.
நன்மைகள்
பேய், திகில் மற்றும் சைக்கோ த்ரில்லர் படங்கள் பார்ப்பதால் வாழ்வில் ஏற்படும் பயங்கரமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறமை வளர வாய்ப்புள்ளது என்று சில ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. ஆனால் கண்டிப்பாக எல்லாருக்கும் இல்லை. எண்ணம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் என்பதால் அதாவது ஒரே படத்தை இருவர் பார்க்கும் போது அது இருவருக்கும் முற்றிலும் ஒரே மாதிரியான விளைவை தான் ஏற்படுத்தும் என்றும் சொல்ல முடியாது அல்லவா!. அதனால் சிலருக்கு எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் வளரலாம்.
பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படவும் நிறைய வாய்ப்புண்டு!!
அதே போல தொடர்ந்து திகில் படங்கள் பார்ப்பது பயத்தை ஒரேயடியாக விரட்டவும் வழி செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். தொடர்ந்து பேய் படங்களை பார்க்க பார்க்க ஒரு கட்டத்தில் அது நமக்கு போர் அடித்து பயம் முற்றிலுமாக தெளிந்து விடும். அதிகமாக பயமுறுத்தும் பேய் படங்கள் அட்ரினலின் ஹார்மோன் அதிகம் சுரப்பதற்கு உதவுவதால் சிலருக்கு சிறந்த உணர்வூக்கியாக செயல்படுகிறது. அதே போல இது போன்ற படங்கள் பதட்டத்தையும், சிலருக்கு கலோரிகளை கூட குறைப்பதாகவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக அதிகமாக பயமுறுத்தும் காட்சிகளை பார்க்கும் பொழுது ரத்த ஓட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் வெள்ளை அணுக்களும் அதிகரித்து அந்த குறிப்பிட்ட சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தீமைகள்
பேய் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படவும் நிறைய வாய்ப்புண்டு. நாளுக்கு நாள் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துக் கொண்டே போய் வெறுப்பு, கோபம், பதட்டம், பயம் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். இப்படி ஏதாவது ஒன்று எண்ணம் தேவையே இல்லாமல் அதிகமானால் கண்டிப்பாக உளவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று ஆரம்ப நிலையிலேயே பிரச்னையை சரி செய்து கொள்ள வேண்டும். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பயத்தை ஒப்புக்கொள்ளாமல் சிகிச்சை பெறுவதையும் தவிர்ப்பார்கள்.
அதே போல பேய் படங்களை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கவே கூடாது. ஏனெனில் பொய் என்று தெரிந்தாலும் கூட தங்களை மீறி பெரியவர்களே பயப்படும் போது குழந்தைகள் உண்மை என்று நம்பி மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
மொத்தத்தில் பேய் மற்றும் திகில் படங்களால் நன்மையும் வரலாம், தீமையும் வரலாம். எது என்பது பார்ப்பவரின் மன நிலையின் தீவிரத்தை பொறுத்தது. அதனால் எந்த மன ரீதியான பாதிப்பிற்கும் இடம் கொடுக்காத அளவிற்கு பார்ப்பது மட்டும் தான் அனைவருக்குமே நல்லது.