நன்றாகத் தூங்கி எழுந்த பின்பும் சோர்வாகவே உணர்கிறீர்களா?

0
102

இரவு நேரத்தில் நன்றாகத் தூங்கி எழுவது உங்களை சுறுசுப்புடனும், புத்துணர்வுடனும் மற்றும் ஆரோக்கியமாக உணரச் செய்யும். அப்படி நீங்கள் சரியாக உறங்கி எழவில்லை என்றால், பகல் முழுவதும் சோர்வு, தூங்கி விழுவது, எரிச்சல் மற்றும் வேலையில் நாட்டமின்மை போன்றவற்றால் மிகவும் அவதிப்பட நேரிடும். இவை எப்போதாவது ஏற்படக் கூடிய ஒன்று. ஆனால், நீங்கள் என்ன தான் நன்றாகத் தூங்கி எழுந்தாலும் உங்களுக்குச் சோர்வு ஏற்பட்டால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

பொதுவாகப் பெரியவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டியது அவசியமாகிறது. அப்படி நன்றாக உறங்கியும் உங்களுக்கு அடுத்த நாள் காலையில் சோர்வு ஏற்படுவது, நாள் முழுவதும் சோம்பலை உணர்வது போன்றவை இருந்தால் அது உங்கள் உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இதற்கான காரணங்களை நாம் இங்கு பார்க்கலாம்.

போதுமான அளவு உடற்பயிற்சி இல்லாதது

பெரும்பாலானவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதே சலிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. ஆனால், அது நல்ல விஷயம் அல்ல. முடிந்தவரை குறிப்பிட்ட நேரத்தை உடற்பயிற்சி நிலையத்திலோ அல்லது உடற்பயிற்சி செய்வதிலோ செலவிட்டால், உங்கள் முழு ஆற்றலும் வீணாகாமல் இருக்கும்.  எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதும் சோர்வு ஏற்பட ஒரு காரணமாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.

 

நீர்சத்து குறைபாடு

உடலில் நீர்சத்து குறைவது உங்களை மிகவும் லேசாக உணரச் செய்வதோடு, மயக்கம் மற்றும் தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது உங்களை மிக மிக அதிகமாகச் சோர்வடையச் செய்யும். இந்த நீர்சத்து இழப்பானது உங்கள் உடலின் இரத்த ஓட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதால், இதயத்தின் செயல்திறனைக் குறைக்கும். இதனால் எப்போதும் நீங்கள் சோர்வை உணர்வீர்கள்.

 

மனஅழுத்தம்

மனஅழுத்தத்தின் மிகப் பொதுவான அறிகுறியாக இருப்பது சோர்வு. மன அழுத்த நோய் எப்போதும் உங்களைச் சோர்வாக உணரச் செய்யும். நீங்கள் எவ்வளவு தான் நன்றாகத் தூங்கினாலும், மனஅழுத்ததில் இருக்கும் போது உங்களால் சோர்வை விரட்ட முடியாது. இதை மன அழுத்தத்தில் இருக்கும் போது யாரும் உணர்வதில்லை. மன அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மிகவும் களைப்பாக உணர்வதோடு, எந்த ஒரு செயலைச் செய்வதிலும் ஆர்வமற்றவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால், அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது.

அடிக்கடி காபி குடிப்பது

நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு குடித்திருக்கும் காபி கூட உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும். இதை நீங்கள் உணரவில்லை என்றாலும் இது தான் உண்மை. காபி நம்மை சுறுசுறுப்புடனும், விழிப்புடனும் வைத்திருக்க உதவும் ஒன்று. ஆனால், அதிக அளவில் எடுத்துக் கொண்டால் இதில் இருக்கும் காஃபைன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். இது உங்கள் அடினோசின் உற்பத்தியில் குழப்பம் விளைவிக்கும். அதனால் நீங்கள் தூக்கத்திற்குச் செல்ல அதிக நேரம் எடுக்கும்.

 

காலை உணவு எடுத்துக் கொள்ளாத போது

இதை நீங்கள் பலமுறை கேட்டிருக்கலாம். நீங்கள் சாப்பிடும் உணவு தான் உங்கள் உடல் இயங்குவதற்கு உதவும் எரிபொருள் ஆகும். நீங்கள் இரவு சாப்பிடும் உணவு உங்கள் உடலுக்கு தேவையான ஆக்சிஜனையும், இரத்த ஓட்டத்தையும் வழங்குகிறது. எனவே, நீங்கள் காலை எழும் போது உங்கள் உடல் மீண்டும் இயங்க உணவு தேவை. எனவே அப்பொழுது காலை உணவைத் தவிர்ப்பது சோர்வை ஏற்படுத்தும்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்

நீங்கள் போதிய இரும்பு சத்து எடுத்துக் கொள்ளாத போது உங்கள் உடல் எப்பொழுதும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கும். உணவை ஆற்றலாக மாற்றும் வைட்டமின் பி குறைவு கூட சோர்வை உண்டாக்கும். இதனால் நீங்கள் எப்பொழுதும் தூக்கம் வருவது போலவே உணர்வீர்கள். உங்கள் உடலில் மெக்னீசியம் குறையும் போது அடிக்கடி மயக்கம் வரும்.

மன அழுத்தம் மட்டும் தான் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரே உளவியல் பிரச்சினை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

பதட்டம்

மன அழுத்தம் மட்டும் தான் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரே உளவியல் பிரச்சினை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில், பதட்டமும் கூட தூக்கத்தைக் கெடுக்கும். மனதில் கவலையும், பதட்டமும் இருக்கும் போது நீங்கள் எவ்வளவு தான் தூங்கினாலும் சோர்வாகவே காணப்படுவீர்கள். இது தூக்கத்தை மேலும் அமைதியற்றதாக்குவதோடு, உங்களை அடிக்கடி விழிக்கவும் வைக்கும். இந்த பிரச்சினைக்கு உளவியல் மருத்துவரை விரைவில் அணுகுவதே நல்லது.

மோசமான ஆரோக்கியப் பிரச்சனைகள்

சில சமயம் நன்றாக தூங்கியும் சோர்வாகவே இருப்பது சர்க்கரை நோய், அனிமியா, தைராய்டு போன்ற மோசமான ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு அறிகுறியாக இருக்கலாம். அனிமியா உங்களை பலவீனமாகவும், சுவாசிக்க முடியாமலும் செய்யக் கூடியது. இதற்குக் காரணம் போதிய இரத்த ஓட்டம் இல்லாதது, சிறுநீரகப் பிரச்சனை சிலசமயம் புற்றுநோயாகக் கூட இருக்கலாம். தைராய்டு மற்றும் சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறி சோர்வு ஆகும். எனவே, ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்து சோர்வாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.