‘இவர் தான் எனக்கு ராசியான மருத்துவர்’, ‘ வேறு எந்த மருத்துவமனையில் சிகிச்சையெடுத்தாலும் சரி ஆகாது. அரசு மருத்துவமனையில் ஒரு ஊசிக்கு சரி ஆகி விடும் எனக்கு’, இது போன்ற பல கதைகளை நாம் கேட்டுக் கடந்திருப்போம். நமக்கும் ஒரு ராசியான மருத்துவர் இருப்பார் அல்லது எப்போதும் நம்முடன் ஒரு வலிநிவாரணியை வைத்திருப்போம்.
பேய்க்கு பயந்தவருக்கு 10 ரூபாய் கயிறு அல்லது தாயத்து கட்டினால், பயம் தெளிந்து புது வீரம் பிறக்கும். ஒரு சிலர் ஊசி மருந்து உள்ளே இறங்கிய உடனேயே, மருந்து செயல்படும் முன்பே புது தெம்பு பிறந்து, நோய் குணமாயிற்று என்பர். இதற்கு பெயர் தான் ‘மருந்துப்போலி விளைவு (Placebo Effect)’. போலி மருந்துகள் அல்ல; இது மருந்துப்போலி.
எந்த இயக்கத் திறனும் இல்லாத வெற்று மருந்துகளால் கணிசமானோர் குணம் பெறுகிறார்கள்.
பெரும்பாலான நோய்களை குணப்படுத்துவதில் மருத்துவர்களையும், மருந்துகளையும் விட நம் மனம் தான் பெரும்பங்காற்றுகிறது. மனிதனின் நம்பிக்கைக்கு அசாத்திய வலிமை உள்ளது தான் காரணம். இந்த உளவியல் ரீதியான காரணங்கள் தான் மருந்துப்போலிகளை வெற்றிகரமாக செயல்பட வைக்கிறது.

எந்த இயக்கத் திறனும் இல்லாத வெற்று மருந்துகளால் கணிசமானோர் குணம் பெறுகிறார்கள் என்ற உண்மை, மருத்துவத்தில் வெகு காலமாக நன்கு அறியப்பட்டுவந்துள்ளது. இம்மாதிரியான ‘மருந்துகளை’ மருந்துக்குப் போலி (Placebo) என்றும், இதனால் கிடைக்கப்பெறும் பலனை ‘மருந்துப்போலி விளைவு’ (Placebo Effect) என்றும் அழைக்கிறார்கள்.
இந்த மருந்துகள் பொய் மருந்துகள் இல்லை. உங்களை, ஏமாற்றுவதற்காகக் கொடுக்கப்படுபவை அல்ல. அது, மோசடியோ தந்திரமோ அல்ல. ஏமாற்றுவதும், மாய மந்திரம் செய்வதும் அல்ல.
மாறாக, மருத்துவ குணமே இல்லாத மருந்து போன்ற ஒன்றை உண்டதும், இந்த மருந்தே எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்ற நம்பிக்கையால் ஏற்படும் தாக்கங்கள் மூளையில் பல வேதியல் மாற்றங்களை உருவாக்குகின்றன. இதனை ஸ்கேன் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் வந்த பிறகு ஆதாரப் பூர்வமாக அறிய முடிகிறது.
மருந்துப்போலி விளைவு உண்டாவதற்கு ஒருவர் நோய் உள்ளவராக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. மது, தூக்க மாத்திரை போன்றவை ஒருவர் எதிர்பார்க்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். கலப்படம் செய்யப்பட்ட மதுபானங்களால் குடித்தவர் போதை அடைவதும் இந்த மருந்துப்போலி விளைவினால்தான்!

மருந்துப்போலி விளைவின் மறுபக்கமாக எந்த மருந்தை உட்கொண்டாலும் சிலருக்குத் தலைச்சுற்று, தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்டு. இது நொசீபோ தாக்கம் (Nocebo Effect) என்று அறியப்படுகிறது.
பச்சைத்தண்ணி குடிச்சுட்டு பாயசம் குடிச்ச மாதிரி நடிப்பார்கள் போல!