- வாசனை மூலம் உணர்ச்சிகளை உணரும் திறன் பெரும்பாலான விலங்குகளிடம் உள்ளது!
- மனிதர்கள் பயம், வெறுப்பு அல்லது அருவருப்பு போன்ற உணர்ச்சிகளை வெறும் வாசனை மூலம் கூட உணர முடியும்!
நாம் சொல்ல வரும் விஷயத்தை மொழி, காட்சி அல்லது சைகை என எதாவது ஒன்றைப் பயன்படுத்தித் தான் தெரியப்படுத்துவோம். அருகில் இல்லாமல் உலகில் வேறு எங்கு இருந்தாலும் கூட தொலைபேசி, கணினி என தகவல் பரிமாற்றம் செய்ய பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. ஆனால் மனிதர்களால் பயம், வெறுப்பு அல்லது அருவருப்பு போன்ற உணர்ச்சிகளை வெறும் வாசனை மூலம் கூட உணர முடியும் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த உணர்ச்சிகள் வாசனை மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றவும் முடியுமாம்!

வாசனை மூலம் உணர்ச்சிகளை உணரும் திறன் பெரும்பாலான விலங்குகளிடம் இருப்பது ஏற்கனவே செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. அதாவது அவை ரசாயன சிக்னல்கள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இது Pheromones என அழைக்கப்படுகிறது.
ஆனால் மனிதர்களுக்கு ஒரே வாசனையை உணரும் உறுப்புகளின் செயல்திறன் விலங்குகள் அளவுக்கு அதிகமில்லை. அதனால் மனிதர்களால் வாசனை மூலம் உணர்ச்சிகளை உணர முடியாது என்று கருதப்பட்டது. அதே சமயம் மனிதர்களிடம் இந்த திறன் ஏற்கனவே இருந்த ஒன்று தான் என்றும் காலப்போக்கில் அந்த திறன் மறைந்துவிட்டது என்றும் கருதுகிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.
பெண்கள் ஆண்களின் வாசனைக்கும், ஆண்கள் பெண்களின் வாசனைக்கும் அதிக உணர்திறன் உடையவர்கள்!
மனிதர்களைப் பொறுத்தவரை இந்த Pheromones என்னவாக இருக்கும், அவற்றை நாம் எப்படி உணர்கிறோம் என்பது இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. இந்த Pheromones ஏற்படுத்தும் விளைவுகள் ஆழ்மனதில் இருப்பதாகத் தான் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது அவற்றைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்வது எவ்வளவு சரியாக இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. ஒருவேளை Pheromones இருக்கும் பட்சத்தில் அவை வியர்வையில் கண்டிப்பாக இருக்கலாம் என பொதுவாக நம்பப்பட்டது. அதனால் தான் வியர்வை மூலம் தகவல் பரிமாற்றம் குறித்த பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
இதற்காக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் புகைபிடித்தல், ஆல்கஹால், உடற்பயிற்சி, அதிக மணம் கொண்ட உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்த்து ஆய்வுக்காக தங்களை ஏற்கனவே தயார்படுத்திக்கொண்ட 10 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தியது ஆய்வுக்குழு. அவர்களை திகில் மற்றும் பயமுறுத்தும் காட்சிகளைப் பார்க்க வைத்து அப்போது அவர்கள் கை அக்குளில் வெளிப்பட்ட வியர்வையைச் சேகரித்தனர்.

அடுத்து, சாதாரணமாக எந்த குறையும் இல்லாமல் வாசனைகளை உணரும் 36 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆய்வில் சேகரித்த ஆண்களின் வியர்வையின் நறுமணத்தை தங்களுக்கே தெரியாமல் அந்த பெண்கள் சுவாசிக்கும் போது அவர்களைக் காட்சி பரிசோதனை (Visual Test) செய்யச் சொன்னார்கள்.
பயத்தின் போது ஏற்பட்ட வியர்வை நறுமணத்தைச் சுவாசித்த போது அந்த பெண்களின் கண்களும் பயத்தால் அகலமாக விரிந்தன. ஆபத்தான சூழலில் ஏற்படுவதைப் போல அவர்கள் கண்களும் இரண்டு பக்கமும் வேகவேகமாக நகர்ந்தன. அதே போல வெறுப்பு அல்லது அருவருப்பின் போது ஏற்பட்ட வியர்வை நறுமணத்தை சுவாசித்த போது அந்த பெண்களும் முகத்தைச் சுளித்தனர்.

பொதுவாக பெண்கள் ஆண்களின் வாசனைக்கும், ஆண்கள் பெண்களின் வாசனைக்கும் அதிக உணர்திறன் உடையவர்கள் என்பது பல ஆராய்ச்சிகளில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த ஆய்வில் ஆண்கள் வியர்வையை ஆண்களே சுவாசிக்காமல் பெண்கள் சுவாசிக்கும் படி செய்தனர்.
அதேபோல பெண்களால் ஆண்களின் வியர்வை வாசனை மூலம் அந்த ஆண்களின் எண்ணத்தைக் கூட ஓரளவு கண்டறிய முடியுமாம்! சாதாரணமாக இல்லாமல் பாலியல் ரீதியான எண்ணங்கள் அதிகமாக இருக்கும் சமயத்தில் வெளிவரும் வியர்வை வாசனையை முகரும் போது பெண்களின் மூளையில் உள்ள வாசனை மற்றும் உணர்ச்சிகளை உணரும் பகுதிகளான வலது Orbitofrontal cortex மற்றும் வலது Fusiform cortex ஆகிய பகுதிகள் செயல்பட ஆரம்பித்துவிடும். இந்த இரண்டு பகுதிகளும் மூளையில் வலது அரைக்கோளத்தில் உள்ள பகுதிகள்.
Also Read: மனித மூளை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் விஷயங்கள்!
இதன் மூலம் மனிதர்கள் சில உணர்ச்சிகளை வாசனை மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது தெரியவந்துள்ளது. இது நெரிசலான இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்!