தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தயக்கம் – தவிர்ப்பது எப்படி ?

0
152
நன்றாகப் படிக்கும் மாணவர் ஒருவர், வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும், “சொல்வதில் ஏதாவது தவறு ஏற்பட்டால், எல்லோரும் நகைப்பார்களே ” என்ற தயக்கத்தில் ‘ பதில் தெரியவில்லை ‘ என்று சொல்லி விட்டு ஒதுங்குகிறார். அரை குறையாக பதில் தெரிந்தவர்கள் கூட சரளமாகப் பேசுவதால், பதிலைச் சொல்லி நற்பெயரைத் தட்டிச் செல்கிறார்கள்.
இது போன்ற தயக்கம் கொண்டவர்கள் பலரை ஆங்காங்கே பார்க்கிறோம். இன்னும் சிலர் பிறரிடம் தம்முடைய சிரமங்களை வெளிப்படுத்தினால் தவறாக நினைப்பார்களோ, மற்றவர் கேட்கும் போது ‘ தெரியவில்லை ‘ என்ற சொன்னால் அவமானமாகுமே, புதியதாக ஒரு செயலைச் செய்தால் பிறர் ஆமோதிக்க மாட்டார்களே, எல்லோருக்கும் புரிந்த ஒரு விஷயத்தை ‘ எனக்குப் புரியவில்லை’ என்று சொன்னால் அறிவு குறைந்தவன் என நினைப்பார்களே என்று எண்ணுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்தத் தயக்க மனப்பான்மை உள்ளது. இவர்கள், அடிப்படையில் அளவற்ற ஆசைகள், குறிக்கோள்களைக் கொண்டவர்கள், தம்முடைய கூச்ச சுபாவத்தினால் அத்தனையையும் கட்டிப் போடுகிறார்கள்.
வெளித்தோற்றத்தில் அமைதியான சாதுவாகக் காட்சியளிக்கும் இவர்கள் மனத்திற்குள் போராடுகிறார்கள். பிறர் முன்னிலையில் பதட்டமடைகிறார்கள். பொதுவிடங்களில் செயல்படும் போது தடுமாறுகிறார்கள். பேச நினைத்ததைப் பேச முடியாமல் நாக்குழறுகிறார்கள். இதனால், பெரும்பாலும் தனித்து வாழ்வதை விரும்புகிறார்கள், சிறு விஷயங்களையும் சாமளிக்க முடியாமல் பதட்டமடைகிறார்கள். திறமைகள் இருந்தும் ‘ தோல்வியாளன் ‘ என பெயரெடுக்கிறார்கள்.
தயக்க உணர்வு எப்படி உண்டாகிறது?
பிறவியில் யாருக்கும் தயக்கம் உண்டாவதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலையைப் பொருத்தே இந்த மனோபாவம் உருவாகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இதை உருவாக்குகிறார்கள். இதை இரண்டு விதமாக செயல்படுத்துகிறார்கள்.
1. ” வாயைத் திறக்காமல் சமர்த்தான பிள்ளையாக இரு ! நீ தான் நாளைக்கு நல்ல பிள்ளையாக வருவாய் ” என்ற ஒரு சான்றிதழைப் பெற்றோர்கள் கொடுக்கும் போது ‘ எதுவும் பேசாமல் இருப்பதே உத்தமம் போலிருக்கிறது ‘ என்ற எண்ணம், மனதில் வலுக்கிறது. பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் உண்டாகி விடுகிறது.
2. ” ஏதாவது சத்தமிட்டால், ஏதாவது தப்பு செய்தால் தொலைச்சுடுவேன் ” என்ற மிரட்டல் பெற்றோர்களிடமிருந்தும் , ஆசிரியர்களிடமிருந்தும் வரும் போது பயத்தால் தயக்கம் வளர்கிறது.
முதல் வகையில் தட்டிக் கொடுத்து தயக்கத்தை வளர்க்கிறார்கள். இரண்டாம் வகையில் மிரட்டலின் மூலம் தயக்கத்தை உருவாக்குகிறார்கள். மேலும், பிறர் குறையச் சுட்டிக் காட்டும் போதும், பலர் முன்னிலையில் கேவலப்படுத்தும் போதும், இந்தத் தயக்க உணர்வு பெருகிக் கொண்டே வந்து செயலற்றவராக்குகிறது. இறுதியில் தாழ்வு மனப்பான்மை பெருகி விடுகிறது.

தயக்கத்தைப் போக்கும் வழிகள்

1. எந்தெந்தச் சூழ்நிலைகளில் தயக்க எண்ணங்கள் உண்டாகிறது என்பதை ஆராய வேண்டும். மீண்டும் அதே சூழ்நிலை வரும் போது எப்படித் தயக்கமின்றி செயல்படுவது என்பதைத் திட்டமிட்டு ஒத்திகை செய்து கொள்ள வேண்டும்.
2. தயக்கமுண்டாக்கும் சூழ்நிலைகளைத் தவிர்க்காமல் அதை அடிக்கடி அணுகினால் தயக்கம் குறையும். உதாரணத்திற்கு, உயர் அதிகாரி ஒருவரைப் பார்க்கப் போவதில் தயக்கம் இருந்தால், அவரைப் பார்க்க வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் சந்தித்து விடவேண்டும். பயத்தினால் பார்ப்பதை தவிர்க்கக் கூடாது.
3. புதிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளில் நாமாகச் சென்று ஒரிரு – நிமிடங்கள் உரையாடுதல் தயக்கத்தைக் குறைக்கும்.
4. பிறருடன் உரையாடும் போது, புன்னகைத்தல், கை குழுக்குதல், கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுதல், தலையசைத்து ஆமோதிப்புக் காட்டுதல் போன்ற பழக்கங்களை வளர்க்க வேண்டும்.
5. பிறர் பேசும் போது ஆவலுடன் கவனிப்பதே தயக்கத்தைப் போக்கும் சிறந்த வழியாகும்.
6. வேலை செய்யுமிடத்தில், கூட்டமைப்புகளில் மற்றும் சமுதாயச் சங்க அமைப்புகளில் சேர்ந்து பங்கேற்றால் தயக்கம் குறையும்.
7. மற்றவர்களிடம் உரையாடுதலுக்குப் பொருளே இல்லாவிட்டாலும் தொழில், குடும்பம் மற்றும் சுற்றுப் பயணங்கள் பற்றிய பொதுவான அம்சங்களில் நம்மைப் பற்றியும், பிறரைப் பற்றியும் பேசுதல் சிறந்த உரையாடலாகும்.
8. சிலருக்குப் பள்ளியில், குடும்ப சூழ்நிலையில், வேலை செய்யுமிடத்தில் அதிகப் படியான தயக்கத்தை உண்டு பண்ணும் மனிதர்கள் இருப்பார்கள். அது போன்றவர்கள், வாய்ப்பு ஏற்படும் போது வேலையை, தொழிலை, இருப்பிடத்தை மாற்றலாம்.
9. தயக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், செயல்பட முடியாத அளவிற்கு மனச்சோர்வடைபவர்கள் , சிகிச்சை மேற்கொள்தல் அவசியம்.
10. இறுதியாக, பயிற்சி செய்தலே சிறந்த வழியாகும். சிறந்த பாடகர் ஆயிரக்கணக்கான முறை பாடிய பிறகே, எவ்வளவு கூட்டமான மேடையிலும் தயங்காமல் பாடுகிறார்கள். பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கான முறை முன் ஒத்திகை பார்த்து விட்டுத் தான் மேடையில் தெளிவாகப் பேசுகிறார்கள். எங்கெல்லாம் தயக்கம் வருகிறதோ, அந்தச் செயலைப் பலமுறை முன் ஒத்திகை பார்த்தால் தயக்கம் ஓடி விடும். திரும்ப திரும்பச் செய்யும் பயிற்சி ஒன்று தான் தயக்கத்தை விரட்டும் சிறந்த வழியாகும்.