நம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?

Date:

ஒரு நாள் என்று எடுத்துக் கொண்டால் நாம் எத்தனையோ விஷயங்களை செய்கிறோம். அப்படி தினம் தினம் நாம் செய்யும் விஷயங்கள் நம்முடைய பழக்கங்களாக நம்மால் எளிதில் கை விட முடியாதவைகளாக மாறி விடுகின்றன. நல்ல பழக்கங்கள் என்றால் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் தீயது என தெரியும் போது அதை விட்டு விட நினைக்கிறோம். ஆனால் முழுமையாக விட்டு விடுகிறோமா என்று கேட்டால், விட முடியாமல் பெரும்பாலும் தோற்கிறோம் என்பதே உண்மை. காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதில் இருந்து இரவு அதிக நேரம் செல்போன் பயன்படுத்தாமல் சீக்கிரம் தூங்க வேண்டும் என நினைக்கும் வரை எதையும் அவ்வளவு சுலபமாக மாற்ற முடிவதில்லை. சரி ஒரு பழக்கத்தை கை விட அல்லது ஒரு புது பழக்கத்தை ஏற்றுக் கொள்ள அறிவியல் ரீதியாக நமக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

Night mobile usageCredit: coventry updates

21 நாள்

பொதுவாக ஒரு செயலை 21 நாள் செய்யும் போதோ அல்லது 21 நாள் ஒரு செயலை செய்யாமல் தவிர்க்கும் போதோ அது பழக்கமாக மாறி விடும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. இந்த 21 என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது என்று தெரியுமா?  1960 ஆம் ஆண்டு Maxwell Maltz என்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் எழுதிய Psycho Cybernetics என்ற புத்தகத்தில் இருந்து தான் வந்தது.

தீவிர பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் ஒரே நாளில் கூட எந்த பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்!!

Maxwell Maltz, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த அவரது நோயாளிகளை தொடர்ந்து கவனித்த போது அவர்களில் பெருபாலானோருக்கு அவர்களுடைய புது முகத்தை மனதளவில் ஏற்றுக்கொள்ள 21 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. இதையே அவர் அந்த புத்தகத்தில் குறிப்பாக கொடுத்துள்ளார். அதுவே கால போக்கில் 21 நாளில் ஒருவரின் பழக்க வழக்கங்களை மாற்றி விட முடியும் என நம்ப காரணமானது.

morningCredit: Dreams

ஆய்வுகள்

ஆனால் அதன் பிறகு நடந்த எத்தனையோ ஆய்வுகளில் பழக்கங்களை மாற்ற இது போல ஒரு குறிப்பிட்ட நாள் எண்ணிக்கை போதும் என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிய வந்தது. இதற்காக 96 பேரை கொண்டு லண்டனில் நடத்திய ஒரு ஆய்வில் பங்கேற்பாளர்கள் ஒரு புது பழக்கத்தை ஏற்றுக் கொள்ள சராசரியாக 66 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. சராசரி தான் 66.  தனி நபர் என கணக்கில் கொள்ளும் போது 18 முதல் 254 நாட்கள் வரை வேறுபட்டிருக்கிறது. அதனால் இந்த எண்ணிக்கை ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதால் புதிதாக ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முதலில் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் ஆகலாம் என முடிவு செய்து கொள்ளுங்கள்.

புதுப் பழக்கம்

சரி ஒரு பழக்கத்தை கை விட வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? இது கொஞ்சம் கஷ்டமானது. ஏனெனில் ஒரு பழக்கம் நமக்கு தினசரி பழக்கமான பின்னர் மூளை அந்த செயலை பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. ஒரு அனிச்சை செயலாக அது நடக்கிறது. அது தான் பிரச்சனை. ஒரு பழக்கத்தை கை விட வேண்டும் என்றால் முதலில் அதற்கேற்ப இன்னொரு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்றால் இரவு சீக்கிரம் தூங்க செல்ல வேண்டும். அல்லது கண்டிப்பாக அன்று காலை முடித்தே ஆக வேண்டும் என இருக்கும் வேலையை இரவே முடிக்காமல் காலை எழுந்து முடிக்க வேண்டும். வேலை இருக்கும் பட்சத்தில் நாம் எழுந்து தானே ஆக வேண்டும். இப்படி அவரவர்க்கு ஏற்றபடி புது பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் பிறர் வற்புறுத்தலால் ஒரு பழக்கத்தை கை விடுவதை விட தானாக தனிப்பட்ட காரணங்களுக்காக முயற்சிக்கும் போது சீக்கிரமாக நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆனால் இதற்கான கால அளவு ஒவ்வொருவருக்கும் இடையே வேறுபடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பழக்கத்தின் முக்கியத்துவத்தை பொருத்தும் நாள் கணக்கு மாறுபடும் என்பதால் உங்களுக்கு தீவிர பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் ஒரே நாளில் கூட எந்த பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்.

spend time with family Credit: great easternlife

  • ஒரு பழக்கத்தை கை விட வேண்டும் என்றால் மற்றவர்கள் சொல்கிறார்கள் என எண்ணாமல் முதலில் அதன் குறைபாடுகளை அலசி ஆராய்ந்து தெளிவாக புரிந்து கொண்டு மனதளவில் தயாராக வேண்டும். ஏனெனில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பது தான் இங்கு மிக முக்கியமான விஷயம்.
  • அடுத்து உங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள தேவைப்படும் மிக முக்கியமான ஒன்று பொறுமை. எவ்வளவு பொறுமையாக இருந்து ஒரு பழக்கத்தை விடுகிறீர்களோ அதற்கேற்ப அந்த பழக்கம் மீண்டும் உங்களிடம் வரும் வாய்ப்பு குறைவு. அதனால் பழக்கங்களை சீக்கிரமாக மாற்றிக் கொள்ள முடியவில்லை என புதிதாக கவலை கொள்ள ஆரம்பித்து முயற்சியை விட்டு விடாதீர்கள்.
  • புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமை ஆனவர்கள்,  அதனால் நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களும் எவ்வளவு பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தனிமையை தவிர்த்து உங்கள் நேரத்தை குடும்பத்தோடு அல்லது நல்ல நண்பர்களோடு செலவிடுங்கள்.
  • நெடு நாள் பழக்கங்கள் நம் மூளையில் நன்கு பதிந்திருக்கும் என்றாலும் அதன் நிறை குறைகளை முழுமையாக புரிந்து கொள்ளும் போது அதனை மாற்றிக் கொள்ளும் திறனும் நம்மிடம் உள்ளது என்பதே உண்மை. அதனால் உங்களை நம்புங்கள்.
  • முடிந்தால் எதை கடை பிடிக்க போகிறீர்கள் என நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லி வையுங்கள். அவர்கள் அடிக்கடி கேட்பார்கள் என்று பயந்தாவது மாறுவீர்கள்!!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!