கணவன்-மனைவிக்கு இடையே சண்டை நடக்கும் போது குழந்தைகளுக்கு என்ன ஆகிறது?
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான குணங்களை கொண்டிருக்கும். அதில், சிலக் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மை, அதிக கோபம், போன்ற நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத குணங்களை அடிக்கடி வெளிப்படுத்துகின்றனர்.
ஒரு குழந்தை வளர்ந்ததும் அதன் குணம் சரியில்லை என்றால் “வளர்ப்பு சரியில்லை” என்று பலரும் கூறுவதை கேட்டிருப்போம். அது அந்த நபரின் பெற்றோரை குற்றம் சாட்டுவதாகவே அமைகிறது.
அதற்கு முழு காரணம் பெற்றோராகவும் இருக்கலாம். அல்லது குழந்தைகள் பழகிய நபர்களாகவும் இருக்கலாம். பொதுவாக குழந்தைகள், ‘கெட்டவார்த்தைகளை’ பேசுவதை விட ‘கேட்ட வார்த்தைகளை’ பேசுவதுதான் அதிகம்.
எனவே குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர்ப்பது மட்டுமல்ல, குழந்தைகளின் குணத்தை முறையாக செதுக்குவதிலும் பெற்றோரின் பங்கு மிகப்பெரியதாகும். அப்படிபட்ட பெற்றோரே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், குழந்தைகள் என்ன ஆவார்கள்?.
இதை நாம் எப்போதும் சிந்தித்திருக்கிறோமா என்று தெரியவில்லை. ஆனால், இது நிச்சயம் சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
சரி பெற்றோரின் சண்டை குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்று நீங்கள் சிந்திக்க துவங்குகிறீர்கள் என்றால், இந்த அறிகுறிகளும் இந்த மாற்றங்களும் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

பாதுகாப்பற்ற உணர்வு: பொதுவாக குழந்தைகள் தங்களின் பெற்றோரின் சண்டையை பார்க்க நேர்ந்தால், அவர்களின் முதல் சிந்தனை நமக்கு என்ன ஆகும் என்பதாகத்தான் இருக்கும். ஒரு குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு சண்டைகளை பார்க்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பாதுகாப்பற்ற உணர்வை மனதில் வளர்த்துக் கொள்ளும்.
பெற்றோருடன் நெருக்கம் குறைதல்: குழந்தைகள், எப்போதும் அப்பா அம்மாவின் சண்டைக்கு பின் யாரிடம் பேசுவது என்ற குழப்பத்திலேயே இருப்பர். அந்த குழப்பம் இருவரிடமும் சற்று ஒதுங்கி இருக்கலாம் என்று எண்ண தோன்றும். அது நாளடைவில் குழந்தைகள் தங்களுக்கான தனிப்பட்ட விஷயங்களையும் மறைக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர்.
Also Read:பெற்றோர்கள் குழந்தைகளை கட்டி அணைப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்
மன அழுத்த சூழல்: பெற்றோரின் சண்டைகளால் பெரியவர்களை போன்று சிறுவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும். இதையும் பெற்றோர் உணர்ந்து கவனம் செலுத்தவில்லை என்றால், நாளடைவில் குழந்தைகளுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
நீண்ட கால மனநலம் பாதிப்பு
2012ஆம் ஆண்டில், Child Development என்ற அமெரிக்க பத்திரிகை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், பெற்றோர்களின் பிரச்சனையில், குழந்தைகள் மனநலம் எவ்வளவு பாதிக்கிறது என்பது பற்றி ஆராயப்பட்டது.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், சிறுவர்களை தெரிவு செய்து ஆய்வாளர்கள் கண்காணித்தனர். அதில், பல குழந்தைகள் தொடர்ந்து சோர்வு, மனநலம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது.
பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மேலும் சில பிரச்சனைகள்!
அறிவாற்றல் மற்றும் செயல் திறன் குறைபாடு
குழந்தைகள் படிப்பதிலும், ஒரு செயல் செய்வதிலும் மிகவும் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றனர். பெற்றோர்களின் சண்டையில் குழந்தைகளில் உணர்ச்சிகள் மற்றும் கவனச்சிதறலை கட்டுப்படுத்த அவர்களால் இயலவில்லை.
Also Read: குழந்தைகளிடம் கோபப்பட்டுக் கத்துகிறீர்களா? – கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
உறவில் பிரச்சனை
பெற்றோர் சண்டையிடுவதை பார்க்கும் குழந்தைகள் தங்கள் சகோதரர்களுடன் சண்டையிடும் பண்பை கொண்டுள்ளனர். பெற்றோர்களிடையே ஏற்படும் வாக்குவாதத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை குழந்தைகள் தனது சகோதரன் அல்லது சகோதரியிடம், கூறிவிட்டு கடக்கின்றனர்.
நடத்தையில் சிக்கல்
பெற்றோர்களின் சண்டையை பார்க்கும் குழந்தைகள் மிகவும் ஆக்கிரோஷமாக நடந்து கொள்கின்றன. குற்றச் செயல்கள் செய்வது உள்ளிட்ட பல ஒழுங்கீன பிரச்சனைகளில் ஈடுபடுகின்றனர். அத்துடன் பள்ளிகளில் ஆசிரியர்கள் கூறுவதையும் முறையாக கடைபிடிக்க தவறிவிடுகின்றனர்.
அதிகம் சண்டைகளை பார்க்கும் குழந்தைகள் முறையான உணவு பழக்கத்தை கொண்டிருப்பதில்லை. அவர்கள், உடல் நலனிலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதாவது, அவர்களுக்கு வயிற்று வலி, தலைவலி, உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுகிறது.

தவறான பழக்கங்கள்
அதிகம் பிரச்சனைகளை பார்க்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் குடி பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இது அவர்களின் ஆழ்மனத்தில் இருக்கும் வடுவின் வெளிப்பாடு.
Also Read:இந்த 3 வழிகள் போதும், குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க!
வாழ்க்கை குறித்த எதிர்மறை எண்ணம்
அதிகம் சண்டைகளை பார்த்து வளரும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை பற்றிய எதிர்மறை பார்வையை கொண்டிருக்கின்றனர். அதாவது தனக்கும் எதிர்கால வாழ்க்கையில் இது போன்ற சண்டைகள் ஏற்படும். நான் மோசமானவன் என்பது போன்ற எண்ணங்கள் உருவாகலாம்.
இவ்வாறு குழந்தைகள் தங்களின் இயல்பான குணங்களை மறந்து வாழும் சூழல் உருவாகிறது. “எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே…” என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டிருக்கலாம். அது அன்னையின் வளர்ப்பினில் மட்டுமல்ல அன்னை, தந்தையின் ஒற்றுமையிலும் உள்ளது என்பதுதான் நிதர்சனம்.
Quick Summary: How does fighting between husband and wife in a Family affects Children?
Source: Developmental Science and VeryWellFamily