காதலர்களுக்குள் முதலில் அன்பும், நெருக்கமும் அதிகமாக இருந்தாலும் பின்னாட்களில் அந்த நெருக்கம் ஒரு பெரிய வலியாக மாறுகிறது. பெரும்பாலானோர் கூறுவதை கேட்டிருப்போம் அவன்/ அவள் என்னை கண்டுக் கொள்வதில்லை என்று. பொதுவாக சிறு சிறு சண்டைகள் தான் பல காதலர்கள் பிரிய முக்கிய காரணமாக அமைகிறது. அப்படி சண்டைகள் ஏற்பட்டாலும் பிரிவு ஏற்படாமல் தவிர்க்கும் வழிமுறைகள்.
1. மதித்தல்
ஒருவர் நம்மை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா இடங்களிலும் இருக்கும். காதலராக இருந்தாலும், நீங்கள் வெவ்வேறு உடல்களையும், வெவ்வேறு சிந்தனையும் கொண்டவர்களாகவே இருப்பீர்கள். எனவே ஒருவர் மற்றவரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். மேலும், உங்களை நேசிப்பவர்கள், கூறுவதை கேட்டு அதற்கான பதிலை கொடுங்கள்.

2. குறைகளை ஏற்றுக்கொள்ளுதல்
மிஸ்டர் பெர்பெக்ட் என்று யாரையும் நாம் குறிப்பிட முடியாது. எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட குறைகள் இருக்கும், அந்த குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை குறிப்பிட்டு அவர்களை வசைபாடாதீர்கள். பலரது காதல் வாழ்க்கையில் குறைகளை ஏற்றுக்கொள்ள தெரியாததால் நல்ல உறவுகளை இழக்க நேரிடுகிறது.
3. ஒருவருக்கொருவர் பாராட்டுங்கள்
சிறிய விஷயங்கள் செய்தாலும், அதை மதித்து பாராட்ட மறந்துவிடாதீர்கள். அந்த பாராட்டு இன்னும் புதியவற்றை செய்யத் தூண்டும். ஒருவேளை உங்களுக்கு அவர்கள், செய்த அந்த செயல் பற்றிய விஷயங்கள் தெரியவில்லை என்றால், அதை பற்றி அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன், அதை பற்றி அவர்களிடம் அடிக்கடி பேசி பாராட்டவும் மறந்துவிடாதீர்கள்.
4. உங்கள் வழியில் அவர்களை இழுக்காதீர்கள்
உங்கள் பாதையில் அவர்களை இழுக்காதீர்கள். நீங்கள் கட்டாயப்படுத்தி அவர்களை உங்கள் போக்கிற்கு இழுக்கையில், கோவம் அதிகமாகும். அத்துடன், ஒருவரை நாம் மாற்ற முற்சிப்பதே பல நேரங்களில் நமக்கு எதிராக திரும்பு. எனவே அதுபோன்ற தவறுகளை உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
5. நேரத்தை செலவிடுங்கள்
உங்களுக்கானவருடன் நேரம் செலவிட மறந்திட வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு தலைக்கு மேல் வேலை இருந்தாலும், உங்களுக்கு என்று இருக்கும் காதலனோ/ காதலியோ தான் மிகவும் அவசியமானவர்களாவார்கள். உங்களுக்கு நேரம் இல்லை என்று தோன்றினால், நீங்கள் நேர நிர்வாகத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
6. வாழ்க்கைத் துணையை மன்னியுங்கள்
காதலர் அல்லது காதலி தவறிழைத்தால், அதை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பழகுங்கள், இதுதான் சாதாரண உறவுக்கு அடித்தளமாக இருக்கும். ஒருவேளை அது பெரிய வாக்குவாதமாக கூட மாறலாம் அப்படி நடந்தாலும், அவர்களை குறை கூறி கொண்டே இருக்காதீர்கள். சண்டைக்கு பின் வரும் அமைதியை பயன்படுத்தி அவர்களுடன் பேசுங்கள். நல்ல மனநிலையில் இருக்கையில், சண்டைக்கான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள்

7. அவர்களை நம்புங்கள்
உங்கள் காதலி அல்லது காதலனை முழுமையாக நம்புங்கள். ஒருவேளை உங்களுக்கு நம்பிக்கை குறைபாடு இருந்தால், அந்த உறவில் நீங்கள் நீடிப்பதில் பலனில்லை. இதை நாம் பல திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். நிஜவாழ்க்கையிலும் இது அவசியமானது தான். உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், உங்கள் காதலன் அல்லது காதலியிடம் பேசி அதை உடனே சரி செய்துக்கொள்ளுங்கள். இதுபோன்றவை மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டால் மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும்.
8. பகிர்ந்துகொள்ளுங்கள்
உங்களுக்கானவரிடம் உங்கள் அனைத்து சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும். மேலும், ஒரு பிரச்சனைக்கான தீர்வும் இதில் ஏற்படலாம். எனவே தவறாமல் உங்களுக்கென்று தனிப்பட்ட எதையும் வைத்துக்கொள்ளாமல் அதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
9. விலகி செல்லாமல் இருங்கள்
கடினமான சூழல் ஏற்பட்டாலும், விட்டு விலகி செல்லாமல் இருங்கள். இது உறவை மேலும், வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் எந்நேரத்திலும், ஆறுதலாகவும் இருங்கள். பிரச்சனைகள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. அப்படி ஒரு சூழலை நீங்கள் இருவரும் தனிப்பட்ட வகையில் சந்திக்க நேரிட்டால், ஒருவருக்கொருவர் ஆறுதல் அளியுங்கள். அது உங்கள் உறவை மேலும், வலுப்படுத்தும்.

10. முக்கிய நாட்களை நினைவில் கொள்ளுங்கள்
உங்களுக்கான அனைத்து முக்கிய தேதிகளையும் மறவாமல் நினைவில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக பிறந்தநாள், சந்தித்த நாள், போன்றவை நினைவில் கொள்ளவும். இது உங்களை தேவையற்ற விவாதங்களை தவிர்க்க செய்யும். அவ்வாறு நினைவில் இல்லை என்றால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
11. வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்
நீங்கள் செய்து கொடுக்கும் சத்தியமாக இருக்கலாம். அல்லது முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். அவர்களை நீங்கள் வெளியில் அழைத்து செல்வதாக கூறியிருந்தால் அதற்கான முக்கியத்துவத்தை நிச்சயம் கொடுங்கள் இல்லை என்றால், உங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்கு நிச்சயம் குறைய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ஒருவர் நம்பிக்கையை சேதப்படுத்தும் விதமாக நடந்து கொண்டால் அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்.
இதன் அடிப்படையில் உங்கள் காதல் வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்தலாம். ஆனால், இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. ஏனெனில், பலரும் ஒருவர் மற்றவர் மீது இருக்கும் ஈர்ப்பை கூட காதல் என்று நினைக்கின்றனர். அந்த ஈர்ப்பு சில காலத்தில் மறைந்து விடும். ஆனால், காதல் அப்படியில்லை வாழ்நாள் முழுவதும் உங்களுடன் பயணிப்பது. அதை சரியாக கொண்டு செல்வது உங்கள் கைகளிலேயே உள்ளது.