உங்களை சுற்றியிருக்கும் நபர்களுள் ஒருவரை பலரும் “அவர் புத்திசாலியாக தெரிகிறாரே!” என கூறக்கேட்டிருப்போம். பெரும்பாலும், “அவருக்கும் நமக்கும் ஒரேவித படிப்புதானே இருக்கிறது. ஆனால் அவரை மட்டும் எவ்வாறு அனைவரும் புத்திசாலியாக பார்க்கின்றனர்” என நீங்களும் சிந்தித்திருக்க கூடும்.
அப்படி எந்த விஷயத்தில் அவரைவிட நீங்கள் பின்தங்கியிருக்கிறீங்கள் பார்த்தால், அவர் மற்றவர்களிடம் அணுகும்பொழுது பயன்படுத்தும் வார்த்தைகளே முக்கியமானதாகப்படுகிறது. அந்தவொரு விஷயம், அர்த்தமற்ற பேச்சுவார்த்தைகளை வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும், ஊக்கமிக்கும் வார்த்தைகளாக மாற்றுகிறது.
வேறொரு உலகத்தில் இருந்து அவர்கள் வார்த்தைகளை கொண்டுவருவதில்லை. இங்கிருக்கும் வார்த்தைகளை சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி அனைவரின் முன்னும் புத்திசாலியாக தெரிகின்றனர். அப்படி அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் மிக முக்கியமான 10 வார்த்தைகளை நாம் இங்கு காணவிருக்கிறோம். படித்து பயன்பெறுங்கள்..
1. “இப்படி இருந்தால்…” – (ஆங்கிலத்தில் ‘If’)

மற்றவர்கள் முன்பாக, தன்னை தவறான ஒருவராக காட்டிக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. உங்கள் முன்பாக கடினமாக கேள்விகள் எழுகையில், பதில் தெரியாதபட்சத்தில், மூளையில் பதற்றம் ஏற்பட்டு “தெரியாது.. தெரியாது..” என ஒலித்துக்கொண்டிருக்கும்.
அதற்கு மாறாக, “ஒருவேளை எனக்கு தெரிந்திருந்தால், நான் எவ்வாறு பதிலளித்திருப்பேன்”; (“What would you say if you did know?”) என்கிற சிந்தனையை மனதில் நிறுத்தினால் ஒருவித தெளிவு பிறக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால், அவர்களின் வெற்றி விகிதம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அன்றாட செயல்களிலும் அணுகுமுறையானது மாறுகிறது.
2. “முடியும்” – (ஆங்கிலத்தில் ‘could’)
செய்யும் வேலையை “என்ன செய்ய வேண்டும்?” என்பதிலிருந்து “என்ன செய்ய முடியும்?” என சிந்தித்தால் அதிக அளவில் பலனிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு “என்ன செய்ய வேண்டும்?” என சிலரிடமும், “என்ன செய்ய முடியும்?” என சிலரிடமும் கூறப்பட்டது. ஆய்வின் முடிவில் முடியும் என நினைத்தவர்களிடன் அதிக வழிகள் தென்பட்டுள்ளது. அதேநேரம், என்ன செய்ய வேண்டும்? என நினைத்தவர்கள் ஒரு சில வழிகளை மட்டுமே சந்தித்துள்ளனர்.
ஆதலால்,”நம்மால் என்ன செய்ய முடியும்?” என எந்தவொரு கடினமான சூழலின்போதும் சிந்தித்து செயல்பட்டால் நீங்களும் புத்திசாலி தான்.\
3. “ஆம்” – (ஆங்கிலத்தில் ‘yes’)

ஒருவருடன் உங்களுக்கு தேவையானதை கூறுங்கள் என்றால், எவரானாலும் சற்று தயங்குவர். ஆனால், அவர்களை ஆம்/இல்லை என்ற பதிலுக்குள் அடக்கிவிட்டால். உங்களுக்கு தேவையானதை அவர்களிடம் எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக, ஒருவரிடம் சென்று உங்களின் வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றது என கேட்டால், எளிதில் பதில் கிடைக்காது. அதே நபரிடம், வீட்டில் டிவி இருக்கிறதா?, குளிர்சாதனப்பெட்டி இருக்கிறதா?, வாஷிங் மெஷின் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினால் எளிதில் உங்களுக்கு பதில் கிடைக்கும்.
ஆதலால், புத்திசாலித்தனமாக கேள்விகளை கேட்டு ‘ஆம்/இல்லை’ என்பதற்குள் அடக்கினால் நீங்களும் புத்திசாலி தான்.
4. “ஒற்றுமை” – (ஆங்கிலத்தில் ‘together’)
எந்தவொரு செயலையும் தனித்து செய்வதைவிட குழுவாக செய்வது என்பது கூடுதல் துல்லியத்துடன், விரைவாகவும் முடிக்க இயலும். எடுத்த வேலையை திறம்பட செயல்படுத்தவும் “ஒற்றுமை” என்பது உதவும்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், கொடுக்கப்பட்ட வேலையை தனித்தனியே செய்தவர்களின் துல்லியத்தை விட ஒற்றுமையாக செய்தவர்களின் துல்லியம் சுமார் 48 சதவீதம் அதிகரித்திருந்தது. அதேபோல, சிந்தனைகளும் அதிக அளவில் வெளிப்படுகின்றன. மேலும், எவரும் சோர்வடைவதில்லை.
ஆதலால், புத்திசாலித்தனமாக, எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்னர் மற்றவரிடமும் கலந்தாலோசித்து அவர்களின் பின்னூட்டம் பெற்றபிறகு செயல்படுவது ஆரோக்கியமானது. உங்களின் குறுகிய எண்ணங்களில் இருந்து விடுபட்டு பலவிதமாக சிந்திக்க உதவுகிறது.
5. நன்றி – அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குங்கள்

அறிமுகமானவர்களிடம் போதுமானவரை நன்றி கூறப்பழகுங்கள். அது உரியவர்களுடன் இன்னும் நெருக்கம் கிடைக்க உதவுகிறது. ஆதலால், மென்மேலும் உதவிகள் பெற வாய்ப்புள்ளது.
உதாரணமாக, 100 இளைய மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், மூத்த மாணவர்கள் இளையவர்களுக்கு அறிவுரை கொடுத்தபிறகு, இளையவர்கள் மூத்தவர்களுக்கு நன்றி செலுத்தியுள்ளனர். அவர்களில் 70 பேர் மீண்டும் இளையவர்களுக்கு உதவியுள்ளனர். நெருக்கமாகவும் பழகியுள்ளனர்.
ஆதலால், எந்தவொரு உதவிக்கும் கைமாறாக “நன்றி” கூறினால், உங்களுக்கு சமூகத்தில் நெருக்கம் கிடைக்கும். அதனால், ஆதாயம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.
6. “தேர்வு செய்” – (ஆங்கிலத்தில் ‘choose to’)
ஒவ்வொரு காரியத்தை செய்யும் முன்பாகவும் உங்களுக்கு நீங்களே கட்டளை இட்டுக்கொள்வதைவிட (I have to do) அதை நான் தேர்வு செய்துள்ளேன் (I choose to do) என சொல்லிக்கொண்டால் நேர்மறையான சிந்தனைகள் அவர்களுக்குள் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கட்டளையிடுகையில், சலிப்பு உணர்வு அதிகரிக்கிறது. அதேநேரம் தேர்வு செய்துள்ளதாக உணர்ந்தால், தன்னை நிரூபித்து காட்டிட வேண்டும் என்ற சிந்தனை வெளிப்படுகிறது. அதனால், முடித்திட வேண்டும் என தெளிவு பிறக்கிறது. இதன் அடிப்படையில், மற்றவர்களிடம் இருந்து நீங்கள் வேறுபட்டவராகவும், புத்திசாலியாகவும் தென்படுகிறீர்கள்.
7. “மற்றும்” – (ஆங்கிலத்தில் ‘And’)
ஒருவரின் மீது விமர்சனங்களோ அல்லது கேள்விகளோ வைக்க முற்படும்பொழுது, சரியில்லை அல்லது ஏன் என்பதுடன் நிறுத்திட கூடாது. சரியில்லை என்று கூறும்பொழுது எதற்காக சரியில்லை ‘மற்றும்’ அதனை வேறு எப்படி செய்திருக்க வேண்டும் ‘மற்றும்’ அதனால் ஆகும் அதீத பலன் என்ன என்பனவற்றை சிந்தித்து விமர்சனம் முன் வைக்கவேண்டும். அப்பொழுது மற்றவர்களிடம் இருந்து மாறுபடுவீர்கள்.
அதேபோல, ஏன் என்கிற கேள்விக்கு கிடைக்கும் பதிலுக்கு சரி என உங்களுக்கு படும்வரை தொடர்ந்து மற்றும் கொண்டு அடுத்த கேள்வியை எழுப்புங்கள். உங்களுக்கு இல்லை என்றாலும் கேட்க தயங்கும் பலருக்கும் இது பயன்படலாம். வித்தியாசப்படுவீர்கள்.
8. ஏனெனில்/காரணத்திற்காக – (ஆங்கிலத்தில் ‘Because’)

ஒருவரிடம் நீங்கள் உதவியையோ அல்லது பதிலையே எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அவர்களிடம் கேள்விகளை மட்டுமே முன் வைக்காமல், இந்த காரணத்திற்காக எனக்கு பதில் வேண்டும் என்பதையும் கூறினால் தயக்கம் இன்றி எதிரே உள்ளவர் பதிலளிக்க முற்படுவர். உங்களது காரியத்தை புத்திசாலித்தனமாக சாதித்துக்கொள்வீர்.
அதேபோல உதவிகள் கூறும்பொழுது, ஏன் தனக்கு உதவிட வேண்டும் என்பதை எடுத்துக்கூறினால், 65 சதவீதம் நிச்சயம் உதவி கிட்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, “எனக்கு கொஞ்சம் பேப்பர் கொடுக்க முடியுமா?” என வெறுமனே கேள்வி மட்டுமே எழுப்பினால் எதிரே உள்ளவர் சற்று தயங்குவார். அதேநேரம், “எனக்கு கொஞ்சம் பேப்பர் கொடுக்க முடியுமா? ஏனெனில் எனது பேப்பர் முடிந்துவிட்டது!” என்றால் உதவிகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதல்லவா?.
ஆம், காரியத்தை வார்த்தைகளை பயன்படுத்தி புத்திசாலித்தனமாக சாதித்துக்கொள்ளலாம்.
9. “ஒருவரின் பெயர்” – பெயரை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருவரை ஒருமுறை சந்தித்தால், அவரின் பெயரை மறவாமல் நினைவில் கொள்ளவேண்டும். அடுத்தமுறை அதே நபரை சந்திக்கையில், பெயருடன் குறிப்பிடுகையில், அவருடனான நெருக்கம் கிட்டத்தட்ட 70 சதவீதம் வரை அதிகரிப்பதாக லூசியானா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்படுகிறது.
உதாரணமாக, ஒருவரை நீங்கள் முதல்முறையாக சந்திக்கிறீர்கள். அதே நபர் அடுத்தமுறை பார்க்கையில், திடீரென உங்களது பெயரை அழைத்து கூப்பிட்டால், உங்களுக்குள் ஒருவித பூரிப்பு உணர்வு வருமல்லவா? அந்த உணர்வு அவருடன் நெருக்கமாக வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மற்றவர்களை விட, அவர் உங்களுக்கு வித்தியாசமாகவும் தெரியப்படுத்துகிறது.
10. “விருப்பம்” – (ஆங்கிலத்தில் ‘Willing’)
மற்றவரிடமிருந்து வேலை வாங்கும்பொழுது அவரிடம் “செய்ய முடியுமா?” என்று கேட்டால், முடியாது என்கிற பதில் கூட வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் “செய்ய முடியும் தானே?” என கேட்கையில் முடியாது என கூறுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு.
காரணம், முடியும் தானே? என கேட்கும்பொழுது அவர் மீது நீங்கள் அதிக நம்பிக்கை கொண்டுளீர்கள் என்கிற உணர்வு தோன்றும். ஆதலால், அதை உடைத்திடும் எண்ணம் வராது. முடியும் என ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இந்த சிறிய வார்த்தையினால், நீங்கள் நினைத்த காரியத்தை புத்திசாலித்தனமாக முடித்திடலாம்.