மனிதன் தன்னை எப்போதும் உளவியல் ரீதியாக தயார்படுத்திக் கொண்டே தான் இருந்திருக்கிறான். ஆதிகாலத்தில் குகையில் வாழ்ந்த போதும் சரி… தற்போது மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் சரி… மனிதனின் தற்சார்பு உளவியல் மிக முக்கியமான ஒரு ஆட்டத்தை அவனிடம் ஆடிக் கொண்டே இருக்கிறது. வெற்றிபெறவும், தோல்வியை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்ளவும், அடுத்த கட்ட நகர்வை பற்றி யோசிக்கவும் அவனது உளவியல் சிந்தனைகள் சரியாக கட்டமைக்கப்பட்டு இருக்கவேண்டும்.
அப்படி எளிதாக மனிதனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் 10 சரியான வழிகள் பற்றி நாம் தற்போது பேசுவோம்.
1சிறிய அர்ப்பணிப்பு.. பெரிய முன்னேற்றம்

வாழ்வில் உங்கள் இலக்கை அடைய சிறிதளவேனும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. அர்ப்பணிப்பு (Dedication) என்பது ஒன்றை இழந்து மற்றொன்றை பெறுவது மட்டுமே அல்ல; உங்களது நேரத்தை குறிப்பிட்ட இலக்கிற்காக செலவழிப்பது உயரிய அர்ப்பணிப்பு ஆகும். ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்து முடிக்கலாம் என்று எண்ணுவதை விட தினமும் சிறிது சிறிதாக செதுக்கி உங்களது இலக்கு என்னும் சிற்பத்தை வெளிக்கொணரலாம். வாழ்வில் உயரிய இடத்திற்கு சென்றவர்கள் பலர் ஒரே நாளில் எதையும் செய்து விடவில்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள். நேரத்தை அர்ப்பணிக்கத் தொடருங்கள்.
2அனுபவமே ஆசான்
இலக்கை துரத்தும் பொழுது எடுத்த எடுப்பிலேயே வெற்றி என்பது அனைவருக்கும் கிட்டிராது. தோல்வியுறும் பட்சத்தில் அதைக்கண்டு துவண்டுவிடாமல், அதிலிருந்து பெற்ற அனுபவத்தை அடுத்த முயற்சிக்கான மூலதனமாக பயன்படுத்தி மேன்மேலும் முன்னேற முயற்சிப்பதே சாதுர்யம். ஏனெனில் எவரை விடவும் அனுபவம் கற்றுத் தரும் பாடம் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் ஒன்று.
3ஆரோக்கியமான மனநிலையை பெற்றிடுங்கள்!

எந்த ஒரு இலக்கை அடைவதற்கும் மனநிலை என்பது மிக முக்கியமான பங்காற்றுகிறது. இலக்கு கடினமானதா? எளிதானதா? என்பது ஒருவரின் மனநிலை பொறுத்தே அமைகிறது. ஆதலால் மிகவும் ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கையில், உங்கள் இலக்கு நோக்கிய சிந்தனைகளையும் வேலைகளையும் தொடருங்கள். இலக்கு எளிதாக புலப்படும். கடினமான மனநிலை கொண்டிருக்கையில், சிறிது நேரம் ஓய்வு எடுப்பது தவறாகாது. சற்று பதுங்குவது அதிக தூரம் பாய்வதற்கே.
4எதிர்மறை சிந்தனைகளை எட்டத் துரத்துங்கள்!

வாழ்வின் உயரிய இலக்கை அடைவதற்கு சிறிதுகாலம் எடுக்கலாம். எதிர்மறையான சிந்தனைகளும் எதிர்மறையான மனிதர்களையும் இலக்கைத் துரத்துகையில் சந்திக்க நேரிடும். அதாவது, உரிய நேரத்தில் இதை நாம் செய்திட முடியுமா? இறுதிவரை நம்மால் கடைபிடித்து வெற்றி காண இயலுமா? நம்மால் முடியவில்லை என்றால் இந்த உலகம் நம்மை எவ்வாறு பார்க்கும்? என்கின்ற எண்ணங்கள் வருவது எதார்த்தம். ஆனால் உயரிய இலக்கை அடைய இதிலிருந்து தள்ளி நின்று அறவே ஒதுக்கி விடுங்கள்.
5கற்பனைகளுக்கு செவிசாயுங்கள்!
எதிர்மறையான சிந்தனைகள் நம்மை தாக்கும் பொழுது மனம் அங்கேயே தேங்கி விடும். ஆதலால் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளிவர சில கற்பனைகள் மனதிற்கு தேவைப்படுகிறது. நேர்மறையான சிந்தனைகளை கற்பனைகள் மூலமே நமக்குள் கொண்டுவர முடிகிறது. அந்நேரத்தில், நமக்கு “நாமே வெற்றியாளன்!” “நேர்மறையான சிந்தனைகள் நம்மை சுற்றி இருக்கின்றன!” என தொடர்ந்து கற்பனையாக சொல்லிக்கொண்டு இருத்தல் ஒரு நேர்மறையான ஆற்றலை நமக்கு இயல்பாகவே கொடுக்கிறது என உளவியல் ஆராய்ச்சிகள் பல தெரிவிக்கின்றன. ஆதலால் உங்களை சுற்றி தேவையான கற்பனைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்
6சமரசத்தை விட்டுத்தள்ளுங்கள்!
நம்மை வெற்றியடைய விடாமல் முதலில் தடுப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் சமரசம் மட்டுமே. இன்று திட்டமிட்டதை இன்றைக்கே முடிக்காமல் பகுதி வேலையை முடித்து விட்டு மீதத்தை நாளை செய்து கொள்ளலாம் என்பதும், இன்று ஒருநாள் இந்த கேலிக்கூத்துகளை ரசித்துவிட்டு நாளை நமது வேலையை பார்த்துக் கொள்ளலாம் எனகிற சமரசத்தை முதலில் விட்டுத்தள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இத்தனை மணிநேரம் இதற்காக செலவிட வேண்டும் என திட்டமிட்டுவிட்டால் அதிலிருந்து பின் வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதே வாழ்வில் வெற்றி பெறுவதற்கான தலையாய வழிமுறையாகும்.
7கவனக் குறைவுக்கு முற்றுப்புள்ளி.
இலக்குகளை நோக்கிச் செல்கையில் முழு கவனத்தைச் சிதையச் செய்யும் இடர்பாடுகளை கண்டறிந்து அதனை விரைவில் சரி செய்ய வேண்டும். வாழ்வின் பகுதி நேரத்தை வீணடிப்பது அதுபோன்ற செயல்களே. அத்தகைய கவனத்தை சிதறடிக்கும் செயல்களை கண்டறிவதும் அதை உடனடியாக சரி செய்வதும் வெற்றியை நோக்கி பயணிக்கும் ஒருவனுக்கு வெற்றியின் வாயிற்கதவை தட்ட உதவும்.
8உன் மீது நம்பிக்கை கொள்!

எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் முதலில், “என்னால் அதை செய்ய முடியும்!” என்ற நம்பிக்கையை நமக்குள் வேண்டும். இந்த வேலையை இவர்களை வைத்து முடித்துக் கொள்ளலாம்; இதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; என்பதை தவிர்த்து நமக்கான வேலையை போதுமானவரை நம்மைக்கொண்டே முடித்திட முயற்சித்தால் மற்றவர்களை சார்ந்திருக்கும் எண்ணம் வராது. உனக்குள் புது நம்பிக்கை பிறக்கும் அந்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திடும்.
9திட்டமிடல்
நமக்கான இலக்கை நிர்ணயித்த பிறகு அதை சென்றடைவதற்கான வழிமுறைகளையும் ஆதாயங்களையும் முறையான திட்டமிடல் படியே அணுக வேண்டும். திட்டமிடுதல் என்பது தேவை என்ன? அதை எப்படி செய்ய வேண்டும்? இலக்கின் நடுவே திட்டமிட்டபடி சரியாக அனைத்தும் நடக்கிறதா? என்பதை சரிபார்த்துக் கொள்ள உதவும் கருவி. இதனால் உங்களது நேரம் வீணாகாமல் இலக்கை உரிய நேரத்தில் அடைய இயலும்.
10விடாமுயற்சியை கடைபிடியுங்கள்

இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் நடுவே ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் எதிர்மறையான சிந்தனைகள் எளிதில் விட்டு கொடுக்கும் எண்ணத்தை எவர் மனதிலும் தோற்றுவிக்கும். ஆனால் எவன் ஒருவன் விடாமுயற்சியை கடைபிடிக்கிறானோ அவனால் மட்டுமே இலக்கை இறுதியாக அடைய முடிகிறது. இந்த விடாமுயற்சியை கடைபிடிக்க ஆரோக்கியமான மனநிலை முக்கியமானதாகிறது. ஆரோக்கியமான மனநிலை மேற்கொள்ள மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவை கடைபிடிப்பது அவசியம். மேலும் இதன்மூலம் நமக்குள் இருக்கும் சோம்பேறித்தனமும் விலகி ஆற்றல் மிக்கவனாக ஆகலாம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்! உங்களை நீங்களே வெற்றியாளனாக்குங்கள்!