தவறாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் – தெலுங்கானாவில் பதற்றம்

0
76
suicide
Credit: The Hans India

2015 ஆம் ஆண்டு  நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிக்க அவர்களின் குடும்பத்தார்கள்  தேர்வு அறையின் ஜன்னல்,  கதவுகளை பிடித்தும் மாடிகளில் கட்டிய தோரணங்கள் போல தேர்வு நடைபெறும் கட்டிடங்களில் தொங்கிக்கொண்டும் பிட்டுகளை தேர்வறைக்குள் அள்ளி வீசினர். நாட்டையே சிரிப்பில் ஆழ்த்திய இந்த சிறப்பான பிட்டுத்தேர்வு பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு மிகவும் முக்கியமான தேர்வாக கருதப்படும்  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்முதல் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடான நிகழ்வுகள் இந்தியாவில் மட்டுமே நிகழக்கூடியன.

SSC-HSC-exams
Credit: Newsd

என்னதான் நடந்தது இந்த தேர்வுகளில்?

இங்கிலாந்து (GCSE) மற்றும் அமெரிக்காவின் (high school) இரண்டாண்டு கல்விக்கு ஒப்பாக இந்த பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளைச்  சொல்லலாம். தமிழகத்தை போலல்லாமல் தெலுங்கானா ஆந்திர மாநிலங்களின் பள்ளி பாடத்திட்டங்கள் சற்று கடினமானவை. அப்படிப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த 18 தேதி அறிவிக்கப்பட்டன. நம்மைப் போல இலவசத் தேர்வுகள் அங்கே நடைபெறுவது  இல்லை. அங்கே நடக்கும் பள்ளித் தேர்வுகளுக்கும், மறுகூட்டலுக்கும் மாணவர்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும். சுமார் ஒன்பது லட்சம் மாணாக்கர்கள் எழுதிய இந்த தேர்வுகளில்,  வழக்கம்போல இந்த ஆண்டும் பெண்கள்தான் அதிக மதிப்பெண்கள் மற்றும் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முன்னிலை வகித்தனர். இந்த வருடம் தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டுகளை விட சற்று குறைவாக இருந்தாலும் மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால் நவ்யா எனும் மாணவி தன்னுடைய மதிப்பெண் பட்டியலை சந்தேகிக்கும் வரையில் தான் இந்த கொண்டாட்டம் எல்லாம்.

தெலுங்கு மொழித் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் 99. ஆனால் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதாக  முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிக்கலின் விஸ்வரூபம் பின்னர்தான் தெரிய வந்தது. தேர்வு எழுதிய  ஒன்பது லட்சம்  மாணாக்கர்களில் மூன்று லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான  மாணாக்கர்கள் தாங்கள் பங்கேற்ற  தேர்வில் அவர்கள்  கலந்து கொள்ளவில்லை என்றும், பூஜ்ஜியம் மதிப்பெண் முதல் ஒற்றை மதிப்பெண் பெற்றவர்கள் என பல மாணவர்களின் உண்மையான மற்றும் முன்னாள் தேர்வு மதிப்பெண்களுக்கு முற்றிலும் புறம்பான தேர்வு முடிவுகளாக இந்த தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வில் கலந்து கொண்ட பலருக்கு அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆனாலும் அவர்கள் தேர்ச்சியடைந்ததாகவும், மதிப்பெண்கள் அறிவிக்கப்படாமலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பின்னர்தான் பல மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளது தெரியவந்தது.  எனவே தோல்வியடைந்த மாணவர்கள் உட்பட பெரும்பாலான மாணவர்கள் திருத்தப்பட்ட விடைத்தாள்களை கோரிவருகின்றனர்.

students_exam_cbse
Credit: news18

முதலமைச்சரின் தலையீடு

குழம்பிய பல மாணவர்கள் தமது பெற்றோருடன் தெலுங்கானா ஸ்டேட் போர்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதற்குள் ஆங்காங்கே சில மாணவர்கள் உயிரை மாய்த்து கொண்டதை அடுத்து பிரச்சினை பூதாகரம் அடைந்தது. எதிர்க்கட்சிகள் முதல் தன்னார்வலர்கள் என பலரும் மாணவர்களுடன் கைகோர்க்க, தெலுங்கானா முதலைமைச்சர் திரு சந்திரசேகர ராவ் இப்பிரச்சினையில் நேரடையாக தலையிட நேர்ந்தது. பள்ளிக் கல்வி துறை அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்திய மாணவர் மற்றும் பெற்றோரை சமாதானப்படுத்த மறுகூட்டலை இலவசமாக செய்துதர உத்தரவிட்டார் முதலமைச்சர். அதோடு மூன்று பேர் கொண்ட கமிட்டியை ஏற்படுத்தி விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

(Globarena) குலோபரேனா குளறுபடி

விசாரணையில், தேர்வு முடிவுகளை கையாளும் உரிமை பெற்றிருந்த குலோபரேனா என்ற தனியார் நிறுவனத்தின் மென்பொருள்களில் சிக்கல் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையில் இந்த நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ டெண்டர் விடுக்கப்படவில்லை. பின்னர் முடிவுகளை  கையாள இந்நிறுவனம் அனுமதிக்கப்பட்டது எப்படி?  தேர்வுக் கட்டணம் வசூலிப்பதில் இருந்தே மென்பொருள் தனது வேலையைத் காட்டியுள்ளது. அப்போதிருந்தே மென்பொருளை சரிவர கண்காணிக்காததன் விளைவு,  இன்று 21 குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. மதிப்பெண்களை் உள்ளீடு செய்வதிலிருந்து அதனை வெளீயிடு செய்வது வரை மனித மற்றும் கணிணி வழித் தவறுகள் நடைபெற்றுள்ளது விசாரணையில் அம்பலமானது. கல்வி அதிகாரிகள் தவறை ஒத்துக் கொண்டாலும் மந்திரியானவர் ஒத்துக்கொண்டதாக தெரியவில்லை.

KCR-New-Houseமுக்கியமான பொதுத்தேர்வு

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் ஏழாம் வகுப்பு முதலே பொறியியல் மற்றும் மருத்துவ மேல்படிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த நுழைவுத் தேர்வுகளில் மாணவர் பெறும் மதிப்பெண்களில் 25 விழுக்காடு மதிப்பெண்களில்  இந்த பன்னிரண்டாம் வகுப்பு (Junior college system) பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு  முக்கியத்துவம் அளிக்கப்டும். ஆக 0.5 மதிப்பெண் கூட தரவரிசை பட்டியலில் 300 முதல் 500 இடங்களில் மாணவரை பின்னோக்கி இழுத்துவிடும்.  ஆக அதிகாரிகளின் மெத்தனமான நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட,  பெற்றோரையும் மாணவர்களையும் குண்டுக்காட்டாக தூக்கிகொண்டு போனது காவல்துறை.

ஆசிரியர் பற்றாக்குறை

போதுமான எண்ணிக்கையை காட்டிலும் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பல மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதில் மூத்த ஆசிரயர்கள் தேர்தல் பணிக்கும் போதிய அனுபவமில்லாத ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 30 விடைத்தாள் எனும் வழக்கத்தைக் காட்டிலும் குறுகிய காலத்தில் முடிவுகளை அறிவிக்க நாளொன்றுக்கு 60 விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த நேரிட்டுள்ளது.

அனைத்து திசைகளிலும் சிக்கல்கள் வேரூன்றி இருந்த காலத்தே அவைகளை  தீர்க்காத காரணத்தால் எதிர்கால தலைமுறைகளில் 21 தூண்களை நாம் இழந்துள்ளோம். அதிகாரிகளின் மெத்தனம் தான் எத்தனை விழுக்காடு? நாமக்கல்லில் காவிரி ஆற்றில் குழிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருடன் சேர்த்து ஆறு பேர் மூழ்கி இறந்ததற்கும் இதே போன்ற அதிகார மெத்தனமே காரணம். தமிழ்நாடு காகித ஆலைக்காக 20அடி ஆளும் அதே அளவு அகலமும் கொண்ட குழையை போட்டியும் எந்தவித அறிவிப்பு பலகையும் நிறுவப்படாததே அந்த ஆறு உயிர்களை உள்ளே இழுத்து கொன்றது.

எதிர்காலத்தில் பள்ளித்தேர்வு முடிவுகளை கையாளுவதை தெலுங்கானாவிடம் இருந்தும்,  சிறப்பாக கையாள்வதற்கு தமிழகத்திடம் இருந்தும் பிற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.