சரித்திரம் இதுவரை சந்தித்திராத பெரும்புரட்சி ஒன்று நம் பார்வைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றும் மத்தியக்கிழக்கு நாடான சிரியாவில் நடந்துகொண்டிருக்கிறது. சர்வாதிகார அரசை எதிர்த்து கிளர்ச்சியில் இறங்கிய பொதுமக்களின் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இப்போராட்டத்தில் ஆளும் பஷார் அல் அசாத் மற்றும் அவரது அரசினை ஆதரித்து ரஷியா களத்தில் இருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று மக்கள் வசித்துவரும் பகுதியில் ரஷிய வான்வெளிப்படை ரசாயனத் தாக்குதலை நடத்தியது. இதனால் சிறிது காலம் ஓய்ந்திருந்த போர் மறுபடி தன் கோர முகத்தைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டது.
ரசாயனத் தாக்குதல்
சென்ற ஆண்டில் சிரியாவின் உள்நாட்டுப்போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயம் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாண்டுபோகினர். பல்லாயிரக்கணக்கானோர் சுவாச மற்றும் தோல் பிரச்சினைகளினால் கடும் பாதிப்பிற்கு உள்ளானார்கள். தற்போது நடத்தப்பட்டிட்டிருக்கும் கொலைவெறித் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் சுவசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலை நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷியா என்ன சொல்கிறது ?
தாக்குதல் குறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் , தீவிரவாதிகள் இருக்கும் இடங்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறையும் இதையே தான் ரஷியா சொன்னது. எப்படிப்பார்த்தாலும் பாதிப்பு என்னவோ அப்பாவி பொதுமக்களுக்குத்தான்.

மதத்தின் பெயரால் ..
பெரும்பான்மை சன்னி இன மக்கள் வசிக்கும் சிரியாவை ஷியா பிரிவைச் சேர்ந்த அசாத் ஆண்டு வருவதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனாலேயே ஷியா மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான ஈரான், லெபனான் போன்ற நாடுகள் சிரிய அரசை ஆதரித்து வருகின்றன. சன்னி இன மக்களுக்காக பெரும்பான்மை முஸ்லீம் நாடுகள் குரல் கொடுப்பதால் அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்கள் இன்னும் உத்வேகத்துடன் இயங்கிவருகின்றன. இவைபோக ஹிஸ்புல்லா, ஐஸ்ஐஸ் ஆகிய தீவிரவாத இயங்கங்களும் இதில் களமிறங்கி இருப்பதால் பிரச்சனை அந்தம் இல்லாத பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் கடைசி மனிதனுக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு உரிய இடமும் உணவும், உரிமையும் கிடைக்கும் வரை மனிதநேயம், அன்பு , சகோதரத்துவம் ஆகியவை வெறும் வெற்றுச் சொற்களாகவே இருக்கும்