தேச ஒற்றுமையையும் ராணுவ வலிமையையும் உலகறிய பறைசாற்றும் வகையில் கோலாகலமாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டாலும் ஒரு மாநிலம் மட்டும் குடியரசு தினத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏழு சகோதரிகள் என செல்லமாக அழைக்கப்படும் அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா , மிசோரம், நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அஸ்ஸாம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் குடியரசு தின நன்னாள் அவ்வளவு இனிப்பு மிக்கதாய் இல்லை. இரண்டு சகோதரிகளும் கண்ணீர் விட பொதுவான காரணம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட “குடியுரிமை மசோதா” தான். அதுபற்றி விரிவாகக் காண்போம்.

அஸ்ஸாம் ஒப்பந்தம்
இந்தியா-பாக்கிஸ்தான் போரின்போதும் (1965) பாக்கிஸ்தான் இரண்டாக பிரிக்கப்பட்ட போதும் (1971) இரு நாட்டிலிருந்தும் இருந்து அகதிகளாக வந்த லட்சக்கணக்கான மக்களை இந்தியா நேசக்கரம் நீட்டி ஏற்றுக்கொண்டது. அவர்களுள் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் நமது ஏழு சகோதரிகள் வீட்டில் அகதிகளாக குடியேறினர். அதில் பெரும்பான்மை அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தேர்தல் சிக்கல்
1970 ன் இறுதியில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மங்கல்தோய் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எண்ணிக்கையானது அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு முற்றிலும் வேறுபட்டிருந்தது. அந்தத்தொகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அகதிகள் மிகுந்த பகுதிகளாகும். வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட அகதிகள் பெயரை நீக்கவும் அவர்களை இந்தியாவின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள கூடாது எனவும் அஸ்ஸாம் மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முக்கியமானது “ஆசு” எனப்படும் அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் கூட்டமைப்பு (All Assam Students Union).

அஸ்ஸாம் ஒப்பந்தம்
அதிகப்படியான அகதிகள் வருகையால் உள்மாநில பூர்வகுடி மக்கள் எண்ணிக்கையால் சிறுபான்மையாக மாறினர். அங்குள்ள பாரக் பள்ளத்தாக்கில் அதிகப்படியான பெங்கால் மொழி பேசும் இந்து, முஸ்லிம் அகதிகள் அதிகரிப்பால் அங்கு பெங்கால் மொழி அதிகாரப்பூர்வமாக மொழியாக அறிவிக்கப்பட்டது. இது அஸ்ஸாம் மக்களின் மனவெறுப்பைத் தூண்டியது. மனக்கசப்பைத் தொடர்ந்த கைகலப்பில் 3000 பேர் மாண்டு போயினர். உச்சக்கட்டமாக ஆறு ஆண்டுகள்(1979 -1985) நடைபெற்ற இத்தொடர் வன்முறை கலந்த போராட்டம் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையில் அரசாங்கத்திற்கும் போராட்டக்குழுவினர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் (ஆகஸ்டு 15 1985) சுமூகமானது.
ஒப்பந்தப்படி, 1966 ஆம் ஆண்டுக்கு முன்பு அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைந்த அகதிகள் இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். 1966 முதல் மார்ச் 24 1971 க்கு இடைப்பட்ட காலத்தில் அஸ்ஸாமில் அகதிகளாக வந்தவர்கள் பத்தாண்டு காலத்திற்கு வாக்குரிமை இன்றி இந்தியாவில் இருக்கும்பட்சத்தில் அதன்பிறகு அவர்கள் இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவர். மார்ச் 25, 1971 க்கு பிறகு அஸ்ஸாமிற்குள் யார் வந்திருந்தாலும் அவர்கள் வெளிநாட்டவராகவே கருதப்படுவர். அதுவே “கட் ஆஃப் டேட்” (cut off date) எனப்படுகிறது.
NRC (National Register of Citizens)
1971 கட் ஆஃப் டேட்டிற்குப் பிறகும் அகதிகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆகவே இது இயல்பான அஸ்ஸாம் மக்கள்தொகையை விட பெங்கால் பேசும் மக்கள் தொகை கணிசமாக அதிகரிப்பில் வந்து நின்றது. அதே காலகட்டத்தில் வங்கதேசத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை குறிப்பிட வேண்டிய அளவு அதிகரிக்கவில்லை. இது வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகளின் சட்டவிரோத வருகையை உறுதிசெய்தது. இவ்விரும்பா வருகை பூர்வகுடி மக்களின் மொழி, கலாச்சாரம் வாழ்வு முறை என அனைத்திலும் இதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு ஏற்படுகின்ற உள்நாட்டு பிரச்சினை காரணமாகவே ரோகிங்கிய மக்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவில்லை என ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

எனவேதான் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அஸ்ஸாம் மக்கள் தனது வம்சாவளியை 1971 ஆம் ஆண்டுக்கு முந்தைய மக்கள்தொகை மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள மூதாதையர் பெயரிலிருந்து ஒப்பிட்டு அஸ்ஸாம் ஒப்பந்தப்படி இந்தியர் என நிரூபிக்க வேண்டும் .
குடியுரிமை மசோதா
அரசியலமைப்பு சட்டத்தில் சிக்கலை ஏற்படுத்திய இம்மசோதா பற்றி நமது எழுத்தாணியில் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருந்தோம். அதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்த இந்து, ஜெயின், கிருஸ்துவம், சீக்கிய, பார்சி மற்றும் புத்த மதங்களை சேர்ந்த மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
இவ்வாறு அஸ்ஸாம் வாசிகள் தத்தம் குடியுரிமையை நிருபிக்கவும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றவும் போராடும் சூழலில் இம்மசோதாவானது அச்சட்ட விரோத வெளிநாட்டவர் எளிமையாக குடியுரிமை பெற வழி செய்கிறது. இம்மசோதாவானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 14 ற்கும் முரண்படுகிறது. அதாவது இந்திய மக்களுக்கு நீதி எந்தவித காரணத்தினாலும் பாரபட்சம் காட்டி மறுக்கப்படாது. அதில் மதமும் ஒன்றாகும்.
“பெங்கால் பேசும் இந்துக்கள் மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அஸ்ஸாமில் கணிசமானவர்கள். இந்த மூன்று மாநிலங்களும் 58 நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது”
மிசோரம்
பூர்வகுடி மிசோர மக்களும் இந்த மசோதாவை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றனர். இதனால்தான் அம்மாநிலத்தில் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ், பிஜேபி போன்ற பெரியகட்சிகளாலும் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. இம்மசோதா அங்குள்ள “சக்மாஸ் (புத்தம்), ஹஜோங் (இந்து) மற்றும் கிறித்துவ மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. அங்குள்ள மிசோரம் போராட்ட குழுவினர் ( “மிசோ சிர்லாய் பால் (Mizo Zirlai Paul), யங் மிசோ அசோசியேஷன் (Young Mizo Association) போன்றவை) நிர்வாணப் போராட்டம், பிஜேபி அலுவலகம் தாக்கம் எனபோய் இறுதியாக “Hello china Hai, bye india” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகை கொண்டு இழிசெயல் புரிகின்றனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்கு, தீர்த்தாலொழிய பிரச்சினை தீரும் என கருதும் சீனாவை உள்பூசலுக்கு இழுப்பது அறிவிலிச் செயலே.

அந்த குழுக்களைச் சேர்ந்த மக்களோ “எங்கள் கருத்தை ஒன்றிய அரசு கேக்காவிடில் நாங்கள் சீன ஆதரவை விரும்புவோம். மேலும் அவர்களும் எங்களைப்போன்ற மங்கலோய்டு இனத்தை ஒத்துள்ளனர்” என அரசை மிரட்டவும் செய்கின்றனர்.
பிற நாடுகளில் சிறுபான்மையினராக கஷ்டப்படும் மக்கள் யாரும் தன் இன மக்கள் அதிகம் வாழ்கின்ற நாட்டில் சேர்ந்து வாழவே விரும்புவர். அதற்காக உள்நாட்டு (எ.கா அஸ்ஸாம்) மக்கள் தாங்கள் சிறுபான்மையினராக மாறுவதையும் விரும்பமாட்டார்கள். இது கலாச்சாரம் மற்றும் இட ஒதுக்கீடு சார்ந்தது. மேலும் அந்தந்த நாட்டிலேயே சிறுபான்மை இனத்திற்கென அமைச்சகமும் உள்ளது. மக்கள் அரசை மதிக்கவேண்டும். அரசியல்வாதிகள் அரசியலமைப்பை மதிக்கவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.