யார் இந்த முகிலன்? அவர் காணாமல் போனது எப்படி?

Date:

சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக அடிபடும் பெயர் முகிலன் எங்கே என்பதுதான். பலரும் யார் முகிலன் என்பதே தெரியாமல் அந்த செய்தியை சேர் செய்துவிட்டு போய்விடுகிறார்கள். சுதந்திர நாட்டில், இத்தனை தகவல் தொழில்நுட்ப, பாதுகாப்பு வசதிகள் வந்துவிட்ட காலத்தில் ஒருவரைக் கண்டுபிடிக்கமுடியாமல் காவல்துறை கைவிரிக்கிறதென்றால் என்ன காரணம்? அப்படி என்ன செய்தார் முகிலன்?

mugilan
Credit: The Lede

பிறப்பு

முகிலன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். செங்குந்தர் மேநிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் என்ஜினியரிங் படித்தார். தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் பணியில் இருந்தார். நான்கு ஆண்டுகள் பணியாற்றியபிறகு, தன் கண் முன்னால் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் கண்டு பொறுக்க முடியாமல் அரசுப் பணியைத் துறந்தார். சாயநீர் ஆற்றில் விடப்படுவது, மணல் கொள்ளை, கூடங்குளம், ஸ்டெர்லைட் என பல பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறார் முகிலன்.

போராட்டங்கள்

ஈரோட்டின் சாயப்பட்டறைகள் நொய்யல் நதியில் சாயக் கழிவுநீரைத் திறந்து விடுவதற்கு எதிரான போராட்டமாகத் துவங்கியது அவருடைய பொதுவாழ்க்கை. ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி, அரசின்மீது நிர்ப்பந்தம் செலுத்தி ஆலையை மூடச் செய்தார். அதன் பிறகு மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம்.

mugilan missing
Credit: Mumbai Mirror

உரிமம் பெறாமலே மணல் அள்ளுதல், அனுமதி பெற்ற பிறகு அனுமதித்த அளவுக்கும் மேலே திருடுதல் என மணல் கொள்ளையர்கள் பின்பற்றும் வழிகள் பலவிதமானவை. அரசின் பொதுத்துறை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இதில் உடந்தை. காவிரிப் படுகையில் மட்டும் ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வியாபாரம் இதில் நடக்கிறது.

ஆற்றில் மணல் அள்ளுவதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று விதிகள் உள்ளன. ஆனால் பிரம்மாண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது உலகறிந்த ரகசியம். நாளுக்கு சுமார் 6000 டிரக் மணல் அள்ளப்படுகிறது என்று கணக்குச் சொல்கிறது அரசு. ஆனால் உண்மையில் சுமார் ஒரு லட்சம் டிரக் மணல் அள்ளப்படுகிறது. சந்தை விலை 7000 – 8000 ரூபாய் எனச் சொல்கிறது பொதுப்பணித்துறை. ஆனால் உண்மை விலை 30 ஆயிரம் வரை போகிறது என்பது நமக்கும் தெரியும். நூறு ஆண்டுகளில் எடுத்திருக்க்க்கூடிய மணல் இப்போதே அள்ளப்பட்டு விட்டது.

நான் சிறுவனாக இருந்தபோது நொய்யல் ஆற்றங்கரையில் விளையாடியிருக்கிறேன். நொய்யல் நீரைக் குடித்திருக்கிறேன். ஆனால் என் மகனால் அது முடியாது. இப்போது இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எதிர்காலத்திலும் இன்னும் சிறிதேனும் மாற்ற முடிந்தால் போதும் – முகிலன்.

இப்படியே போனால் இன்னும் சில காலங்களில் காவிரி டெல்டா பகுதியே இருக்காது. தொடர்ந்த மணல் கொள்ளையின் காரணமாக தமிழகத்தின் அனைத்து நதிப்படுகைகளும் பத்து மீட்டர் கீழே போய்விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் கீழே போய்க்கொண்டே இருக்கிறது.

சிறைவாசம்

2014 ல் வைகுண்டராஜனின் தாது மணலுக்கு எதிராக ஒரு நூலை வெளியிட்டார் முகிலன். எதிரிகளின் பட்டியல் இன்னும் அதிகரித்து விட்டது. கூடங்குளத்துக்கு எதிரான போராட்டத்தின் காரணமாக, தேசத் துரோகச் சட்டத்தின்கீழ் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

“என்னுடைய போராட்டம் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிரானது மட்டுமல்ல. எதிர்காலத் தமிழக நலனுக்கானது. இப்படியே தொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் குடிப்பதற்கு தண்ணீர்கூட இருக்காது” என்கிறார் முகிலன்.

mugilan_
Credit: Toptamilnews

2008 நவம்பரில் முகிலனும் அவரது நண்பர்களும் 70 குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பல மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு மீண்டனர். 2016 டிசம்பர் 3ஆம் தேதி, அவரும் குழந்தைகளும் காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது ஒரு கும்பல் காரை மறித்து, அவரை வெளியே இழுத்து அடித்து உதைத்து மிரட்டியது. தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முகிலன் அன்று இரவே கலெக்டர் வீட்டின் முன்னால் மறியலில் அமர்ந்தார். உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது – முகிலனும் அவருடைய நண்பர்களும் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பக்கபலம்

முகிலன் இவ்வளவு உறுதியாக அவருடைய மனைவியின் உறுதுணையால்தான் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் முகிலன். அவருடைய உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை அவரும் அவரது மனைவியும் அறிந்தே இருக்கிறார்கள். இருந்தாலும், அடுத்த தலைமுறையின் நலனுக்காக நாட்டை இப்படியே விட்டுச்செல்ல முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நான் சிறுவனாக இருந்தபோது நொய்யல் ஆற்றங்கரையில் விளையாடியிருக்கிறேன். நொய்யல் நீரைக் குடித்திருக்கிறேன். ஆனால் என் மகனால் அது முடியாது. இப்போது இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எதிர்காலத்திலும் இன்னும் சிறிதேனும் மாற்ற முடிந்தால் போதும் என்கிறார் முகிலன்.

தூத்துக்குடியில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அங்கே கலவரம் செய்தவர்கள் பொது மக்கள் அல்ல, திட்டமிட்டு ஏவப்பட்ட குண்டர்கள்தான் என்பதை சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆதாரமாகக் காட்டி தெளிவாக விளக்கியிருந்தார் முகிலன். அதனால்தான் முகிலனைக் காணாமல் போகச்செய்திருக்கிறார்கள்.

முன்பே சொன்னதுபோல் தகவல் தொடர்புத்துறை, அதிநவீன அறிவியல் வளர்ச்சிகள் காவல்துறையில் வந்ததன் பின்னரும் ஒரு தனிநபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மக்கள் எதன்மீது சந்தேகம் கொள்வார்கள்? பேச்சு, எழுத்து சுதந்திரத்தின் மீது மாபெரும் ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது முகிலனின் விவகாரம். அரசு இதற்கான நடவடிக்கைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையெனில் பழைய வரலாறு மறுபடி ஒருமுறை படிக்கப்படும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!