Home அரசியல் & சமூகம் காஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது?

காஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது?

காஷ்மீர் பிரச்சினை. இந்தியா முழுவதும் உள்ள தொலைக்காட்சி விவாத மேடைகள் தோறும் அனல்பறக்க பேசப்படும் தலைப்புகளுள் இதுவும் ஒன்று. இன்று நேற்றல்ல, பல வருடங்களாக இதே கதைதான். குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு, கலவரம் என எப்போதும் காஷ்மீர் கலங்கடிக்கப்படுகிறது. சாதாரண எளிய மக்களின் ஓலங்கள் எப்போதும் கேட்கும் தேசமாக காஷ்மீர் மாறியதற்கு யார் காரணம்? இந்தக் கேள்விக்கான விடை இந்தியாவின் சுதந்திர பிரகடனத்தில் இருக்கிறது.

nehru
Credit: DNA India

பிரிவினை

இந்தியா தனது சுதந்திர காற்றை சுவாசிக்கத் துவங்கும் முன்பே பிரிவினையின் ரத்தக்கறை தோய்ந்த புயலினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முகமது அலி ஜின்னாவின் கடுமையான முடிவுகளால் உந்தப்பட்டு பாகிஸ்தான் என்னும் தனி நாடு உருவாக்கப்பட்டது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்தியா என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இருநாடுகளுக்கும் உட்படாத சில குட்டி குட்டி சமஸ்தானங்கள் இருநாட்டு எல்லைகளுக்குள்ளும் இருந்தன. பிரிட்டிஷார் சமஸ்தானங்களின் மன்னர் வழியே அந்த நிலப்பரப்பை ஆண்டு வந்தார்கள். இப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதும் 540 சமஸ்தானங்கள் இருந்தன.

அறிந்து தெளிக!!
1947 ஜூலை 25 ஆம் தேதி இந்தியாவின் கவர்னராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு இந்த 540 சமஸ்தான மன்னர்களுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில், இந்தியா – பாகிஸ்தான் பிரிவு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். எனவே சமஸ்தானத்தினைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார காரணங்களுக்காக சமஸ்தான இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டது. சமஸ்தானங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் என தாங்கள் விரும்பிய நாட்டுடன் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார் மவுண்ட்பேட்டன். எல்லா சமஸ்தானங்களும் உடனடியாக இந்த நாடுகளுடன் தங்களை இணைத்துக்கொண்டன.

இரண்டே இரண்டு சமஸ்தானங்கள் மட்டும் இதில் மறுப்பு தெரிவித்தன. ஒன்று ஹைதராபாத் மற்றொன்று காஷ்மீர். அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த படேலின் அதிரடி முயற்சிகள் மூலம் இந்தியாவின் வசமானது ஹைதராபாத். ஆனால் காஷ்மீரின் மன்னர் ராஜா ஹரிசிங் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. காஷ்மீர் என்னுடைய மூதாதையரின் நிலம் என்று கறார் காட்டிவிட்டார் ஹரிசிங்.

காஷ்மீர் பெரும்பான்மை முஸ்லீம்கள் வசிக்கும் சமஸ்தானம். மன்னர் ஹரி சிங் ஒரு இந்து. இதையே ஒரு காரணமாகக் காட்டி களத்தில் இறங்கியது பாகிஸ்தான். முஸ்லீம்கள் பாகிஸ்தானோடு இருக்கவேண்டும் எனவே விரும்புகின்றனர் என அறிக்கைகள் பாகிஸ்தான் சார்பில் வெளிவரத்தொடங்கியது.

முதல் முதலாக

ஹரி சிங்குடன் இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியே பரிசாகப் பெற்றன. ஒரு கட்டத்தில் தாக்குதலின் மூலம் பாகிஸ்தான்-காஷ்மீர் இணைப்பு சாத்தியமிக்க நினைத்து அதற்கான வேலையைத் துவங்கியது. வரலாற்றில் மிகப்பெரிய மோசமான முடிவு அது என்பதை சில ஆண்டுகளுக்குள்ளாகவே புரிந்துகொண்டது பாகிஸ்தான்.

பதான்கள் எனப்படும் பூர்வகுடி முஸ்லிம்களை காஷ்மீர் மீது தாக்குதல் நடத்துமாறு தூண்டிவிட்டது பாக். இதற்கென அரசு உயர்மட்ட அதிகாரிகள் பல உதவிகளை செய்தார்கள். பெரும்பணம் அந்த அரசின் சார்பில் பதான்களுக்கு அளிக்கப்பட்டது. கோர தாக்குதல் ஒன்றினை காஷ்மீர் எதிர்கொண்டது. கொலை, வன்புணர்வு என மனிதநேயத்தின் மரணங்கள் கடுமையாக இருந்தன. தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்திருந்த ஹரி சிங்கிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. காஷ்மீரைக் காப்பாற்ற இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டார் மன்னர். அடுத்த வினாடி இந்திய ராணுவம் காஷ்மீர் எல்லைப்பகுதிக்கு விரைந்தது.

jeyish i muhamad
Credit: Patrika

மலைமுகடுகள் பீரங்கியின் வெடிச்சத்தத்தால் அதிர்ந்தன. பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்களை துவம்சம் செய்தது இந்திய ராணுவம். இப்பிரச்சினை சர்வதேச நாடுகளின் காதுகளை எட்டியது. ஐ. நா கூட்டத்தில் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி அவர்கள் விரும்பும் நாட்டுடன் அவர்களை இணைக்க ஒப்புதல் அளிப்பதாக இந்தியா அறிவித்தது. ஆனால் அவ்வப்போது கலவரங்கள் கால்பதிக்கும் பூமியாக காஷ்மீர் இருந்ததினால் ஓட்டெடுப்பு நடத்தப்படவே இல்லை. அப்பகுதிகளில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிறுவிவந்த இந்தியா, 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் காஷ்மீர் மாநிலத்திற்கென சிறப்பு சட்டத்தை நிறைவேற்றியது. இதன்மூலம் காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என உலகத்திற்கு மறைமுகமாக அறிவித்தது இந்தியா. இது பாகிஸ்தானின் பொறாமைத்தீயில் டன் கணக்கில் பெட்ரோலை ஊற்றியது.

அறிந்து தெளிக!!
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 370 ஆவது பிரிவு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்கிறது. இதன்மூலம் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவுத்துறை விவகாரம் ஆகியவை மட்டுமே காஷ்மீருக்கு பொருந்தும். மற்றைய துறைகளில் கொண்டுவரப்படும் சட்டங்களை காஷ்மீர் சட்டமன்றம் மறுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.

கிளர்ச்சியாளர்கள்

பாகிஸ்தான் இணைப்பினை விரும்பிய இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பொருளாதார, ராணுவ உதவிகள் செய்துவந்தது. இதனைத் தடுக்கும் விதத்தில் காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ராணுவம் யாரையும் கைது செய்யலாம். தேவைப்படின் தாக்குதல் நடத்தலாம். தீவிரவாத தாக்குதலால் பாகிஸ்தானை வெறுத்துவந்த காஷ்மீர் மக்கள், இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மேலும் எரிச்சலுற்றனர்.

A Kashmiri protester throws a stone towards Indian police during a protest in Srinagar
Credit: Voice of OBC

பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் இருக்கும் சில காஷ்மீரிய மாவட்டங்களை தீவிரவாத குழுக்கள் குறிவைத்து மூளைச்சலவையில் ஈடுபடுகின்றனர். அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதனால் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. காஷ்மீரை மையமாக வைத்து நடைபெற்ற போர்களில் எல்லாம் இந்தியாதான் வெற்றிவாகை சூடியிருக்கிறது. இதனால் நேரிடி யுத்தத்தை விடுத்து மறைமுக தாக்குதல்களை பாகிஸ்தான் ஏவிவருகிறது. மூன்றாம் நாட்டின் தலையீட்டால் தங்களுக்கு சாதகமான முடிவைப் பெற அமெரிக்காவை நாடிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையாக பதிலடி தந்தது. இந்தியா என்பது காஷ்மீரோடு இணைந்தே இதுவரை அடையாளம் காட்டப்படுகிறது. இதற்காக இந்தியா எந்த விலையையும் கொடுக்க எப்போதும் தயங்கியதில்லை. தற்போது நடைபெற்றிருக்கும் தாக்குதலுக்கும் நிச்சயம் இந்தியா பதிலளிக்கும்.

அதே நேரத்தில் அங்குள்ள மக்களின் மனவோட்டம் எப்படி இருக்கிறது என்பதையும் இந்திய அரசு கணக்கில் கொள்ளவேண்டும். அமைதியையும் வலுக்கட்டாயமாக இன்னொருவர் மீது திணிக்க இயலாது. பேச்சுவார்த்தைகள் மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி.

- Advertisment -

Must Read

- Advertisment -