கோடைகால தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வழக்கம் தான் என்றாலும் இந்த ஆண்டு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இருக்கும் பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவித்துவருகின்றன. உணவகங்களில் கைகழுவ தண்ணீர் இல்லாததால் பல உணவகங்கள் மதிய வேளை உணவு விற்பனையை நிறுத்தியிருக்கின்றன. சென்னை முழுவதும் உள்ள பெரும்பாலான மேன்சன்கள் இப்போதே இழுத்து மூடப்பட்டுவிட்டன. இப்படியான இக்கட்டான சூழலில் தான் தமிழகம் இருக்கிறது. அதிலும் சென்னைவாசிகளின் கஷ்டம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.

மாணவர்களுக்கான தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் சென்னை மற்றும் காஞ்சிபுர மாவட்டத்தைச் சேர்ந்த பல தனியார் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.டி நிறுவனங்கள் அதிகமிருக்கும் ஓ.எம்.ஆர் பகுதியில் நிலைமை இன்னும் மோசம். இத்தனை நெருக்கடிக்கு என்ன காரணம்? மக்கள் முன்னாள்/இந்நாள் ஆளும் கட்சிகளை குறை சொல்கிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தது. ஆனால் அதற்கடுத்த இரண்டு வருடங்களிலேயே தண்ணீர் பற்றாக்குறை வந்துவிட்டது. சென்னையின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், போரூர், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளை அரசு தூர்வாரியிருந்தாலே குறைந்தபட்சம் 100 டி.எம்.சி தண்ணீரை தேக்கியிருக்க முடியும். மழையை நம்ப முடியாது எனத் துல்லியமாக தெரிந்த பின்னரும் மாற்றுவழி நோக்கி நகர முற்பட்டே ஆகவேண்டும். தமிழகம் முழுவதும் 40,000 ஏரிகள் மற்றும் பெரும் குளங்கள் இருக்கின்றன. இவற்றில் 95% ஆழப்படுத்தப்படாமல் இருப்பதால் தண்ணீர் சேமிப்பு என்பதே முடியாமல் போகின்றது.
நீர் வழித்தடங்களை புனரமைப்பு செய்தாலே வெள்ளம் வரும் காலத்தில் ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்றிவிடலாம். மழைநீர் மற்றும் நீர் மேலாண்மை விஷயத்தின் தமிழக அரசாங்கம் மெத்தனமாக இருந்துவிட்டத்தையே தற்போதைய தண்ணீர் பஞ்சம் கன்னத்தில் அறைந்தாற்போல் சுட்டிக்காட்டுகிறது. சரி, மக்கள் என்னதான் செய்தார்கள்? என்ற கேள்விக்கும் உருப்படியாய் பதில் சொல்ல முடியவில்லை. காவிரி திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது என்று கவலைப்பட்ட எவரும் அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள விழையவில்லை.

கிராம பஞ்சாயத்து அளவில் அந்தந்த குளங்களை ஆழப்படுத்தியிருந்தாலே பிரச்சினையை சமாளித்திருக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நகரில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் நீரை அரசு வழங்கவேண்டும். கிராம புறத்தில் என்றாள் தலை ஒன்றுக்கு 40 லிட்டர் வழங்கப்பட வேண்டும். அரசிடம் நீர் இல்லை என்னும் நிலை வரும்போது குறை சொல்வதைத்தவிர வேறுவழி மக்களுக்கு இருக்காது.
பொதுமக்களுக்கு அன்றாடம் நீரை எப்படி உபயோகிக்க வேண்டும் என விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அதே சமயத்தில் பிரச்சினை தீர்ந்தவுடன் தாராளமாக மாறிவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
என்ன செய்யலாம் ??
நிலத்தடி நீரினைப் பொறுத்தவரை மழைப்பொழிவு மிக முக்கிய காரணியாகும். அடுத்து தண்ணீர் உட்புகும் நிலத்தினைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக ஆற்றுப்பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக நிலத்திற்குள் உட்புகுந்து நிலத்தடி நீருடன் கலந்துவிடும். தண்ணீர் அதிகப்பரப்பில் பரவி நிற்கும்போது ஊடுருவல் எளிதாக நடக்கும். ஆனால் சென்னை போன்ற இடங்களில் அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

நீர் மறுசுழற்சியை நோக்கி நகரவேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது. ஏனெனில் தனிநபர் அதிகளவில் நீர் வீணாக்கும் நகரங்களில் சென்னை முன்னணியில் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரினைப் பயன்படுத்துவது நகரத்தின் ஒட்டுமொத்த நீர் தேவையினை 30% வரை குறைக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆனாலும் நிலத்தடி நீரினைப் பெருக்குவதே நிரந்தர தீர்வாகும். சென்னையைச் சுற்றியுள்ள குளம் மற்றும் ஏரிகளைத் தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீரினைச் செறிவூட்ட முடியும். அதனைத் தவிர நமக்கு வேறு வழியும் இல்லை. இதை அப்படியே விட்டால் இன்னும் பத்தாண்டுகளில் நாம் மிகப்பெரிய புரட்சி ஒன்றினை சந்திக்க வேண்டியிருக்கும். காரணம் தண்ணீராய் இருக்கும்.