உதவி செய்யப்போன எழுத்தாளரை கைது செய்த காவல்துறை

0
112

தமிழகத்தின் மிக முக்கிய எழுத்தாளர்களில் பிரான்சிஸ் கிருபாவும் ஒருவர். அவருடைய பல படைப்புகள் மனிதத்தை இந்த மண்ணிற்கு கொண்டுவரும் வேட்கையின் அடிப்படையில் அமைந்தவை. அவருடைய “கன்னி” நாவல் வாசகர்களைத்தாண்டி இலக்கிய விமர்சகர்களையே அசைத்துப் பார்த்த படைப்பு. இத்தனை பெரிய ஆளுமையை, தமிழின் மகோன்னதத்தை எழுதிக்குவித்த கையில் நேற்று தமிழக காவல்துறை விலங்கு மாட்டியிருக்கிறது.

நேற்று கோயம்பேடு பகுதிக்கு சென்ற கிருபா, மனநலம் குன்றியவர் ஒருவர் வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். உடனே ஓடிச்சென்று அவரை தனது மடியில் கிடத்தி சகஜ நிலைக்குத் திரும்ப உதவி செய்திருக்கிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த மனநலம் குன்றியவர் இறந்துபோகவே அருகிலிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருபாவை கைது செய்து கோயம்பேடு காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றிருக்கிரார்கள்.

தகவல் கேள்விப்பட்ட எழுத்தாளர்கள் பலரும் காவல்நிலையத்திற்கு விரைந்துள்ளனர். “கேஸ் போடல, சந்தேகத்தின் அடிப்படையில் தான் புடிச்சிருக்கோம். சிசிடிவி வீடியோ மற்றும் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ட பார்த்துட்டு அனுப்பிடுவோம்” என்றிருக்கிறார் போலிஸ் அதிகாரி. நினைத்தபடியே பிணகூராய்வு அறிக்கை இயற்கை மரணம்தான் என உறுதி செய்தவுடன் கிருபாவை விடுதலை செய்திருக்கிறார்கள்.

விஷயம் முடிந்தது. ஆனால் வன்மனும், சுயநல வெறியும் கொண்ட இந்த மக்களுக்கு இடையே அதிசயமாய் கிருபா போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. நேற்று கிருபா சம்பவ இடத்திற்கு வரும்போது குடித்திருந்திக்கிறார். நீண்ட தாடி, சீவப்பட்டாத தலை என இருந்தவரை அங்கிருந்தவர்கள் கொலையாளி என போலீசாரிடம் அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.

Kiruba Francis

அழுக்காய், குடிப்பழக்கம் கொண்டவராய் கருப்பாய் இருந்ததற்காக கிருபா அவர்களது கண்களுக்கு கொலையாளியாக தெரிந்திருந்தால் பிழை நிச்சயம் அவர்களுடையது. ஆனால் அங்கே அத்தனை பேர் இருந்தும் ஏன் ஒருவர் கூட அந்த முதியவருக்கு உதவ முன்வரவில்லை? சமூகத்தில் புரையோடிப்போன சுயநலம் தான் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு தண்ணீர் தர மறுத்திருக்கிறது, யாரென்றே தெரியாதவரை மடியில் ஏந்தி அவரை குணப்படுத்த நினைத்தவரை சற்றும் மனசாட்சி இல்லாமல் கொலையாளி என கைகாட்ட வைத்திருக்கிறது.

உருவத்தை மட்டும் வைத்து மனிதர்களை எடைபோடும் சமூகம் உள்ளவரை இங்கு எதுவும் மாறிவிடப்போவதில்லை.