ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வேலையில்லாமல் தவிக்கும் பட்டதாரிகளுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தினை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு துவங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு முக்கிய மந்திரி யுவ நேஸ்தம் (Mukhyamantri Yuva Nestham) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கெனப் பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட வலைத்தளத்தை நேற்று முதலமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

10 லட்சம் இளைஞர்களுக்கு…
ஆந்திரப் பிரதேச அரசின் இத்திட்டத்தினால் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூபாய் 1000 உதவித்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்கென வருடத்திற்கு 1200 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. தகுதியுள்ள இளைஞர்கள் www.yuvanestham.ap. gov.inat என்னும் வலைதளத்தில் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2 – ஆம் தேதி வரையில் இப்பெயர் சேர்ப்புப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியக் கல்வி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பயணம் மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் திறன் மேம்பாட்டைக் கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். மேலும், புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி இளைஞர்கள் பயணிப்பதே வளமான எதிர்காலத்தைத் தரும் என்றார். கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியையும், வேலை வாய்ப்பையும் மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
4 மாநிலங்களில் தோல்வியடைந்த திட்டம்
வேலையில்லா மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் இத்திட்டம், இதற்கு முன் 10 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில பொருளாதாரக் காரணங்களால் 4 மாநிலங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. மற்றைய மாநிலங்கள் மாதம் ருபாய் 500 வழங்கும் நிலையில் ஆந்திர அரசு 1000 ருபாய் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய அம்மாநிலத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ், இத்திட்டத்தினைச் செயல்படுத்த 1200 கோடியை அரசு ஒதுக்கியுள்ளதாகவும், இது வருடாவருடம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கத் தொழில் நிறுவனங்களுடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.