இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவையில் 75 சதவிகிதம் நிலக்கரி மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. நிலக்கரி பயன்பாடு காற்று மாசுபாட்டை தருகிறது என்பதற்கு முன்னால் நிலக்கரி உற்பத்தியே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. லேசான கரித்துகள்கள் காற்றில் கலப்பது அந்த பிராந்தியத்தையே பாதிக்கிறது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் இருக்கும் சிங்க்ரவுலி மாவட்டத்தில் மட்டும் 7 மிகப்பெரிய நிலக்கரி அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 16 லட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதியை கொடுக்க முடிகிறது. ஆனால் இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் புகையினால் கடும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அதிக காற்று மாசுபாடு உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியாவின் 7 நகரங்கள் உள்ளன. பட்டியலில் சிங்க்ரவுலிக்கு 22 ஆம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்கள் தவிர்த்து டீசல்/பெட்ரோல் புகை, வேளாண்மை நிலங்கள் எரித்தல் ஆகியவையும் இந்த பிராந்திய காற்று மாசுபாட்டில் கணிசமான பங்கினை வகிக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு Health Effects Institute என்னும் அமைப்பு நடத்திய ஆய்வின்படி அந்த ஆண்டு மட்டும் 12 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
நிலக்கரியை வெட்டி எடுக்கும்போதும் துகள்கள் காற்றில் கலந்து அருகிலிருக்கும் நீர்நிலைகளில் படிகின்றன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே நிலக்கரியை வெட்டி எடுக்கும்போது அதன்மீது தண்ணீரைத் தெளிக்க வேண்டும்மேலும் பழைய நிலையங்களை கைவிட்டு நவீன இயந்திரங்களை நிறுவ வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தில் மிக முக்கிய பங்காற்றும் கார்பன் டை ஆக்சைடு இந்த பிராந்தியத்தில் அதிகளவு உற்பத்தியாவது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்திருக்கிறது. பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அத்தோடு வெப்பமயமாதல் வெப்ப அலைகளை அதிக அளவில் தோற்றுவிக்கிறது.
வெப்ப அலைகள்
ஒரு நகரத்தின் சராசரி வெப்பநிலையை விட 4 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் அவை வெப்ப அலை எனப்படும். மத்திய இந்தியாவில் 2010 ஆம் ஆண்டு வீசிய வெப்ப அலைகளின் எண்ணிக்கை 21. ஆனால் கடந்த ஆண்டு (2018) 484 வெப்ப அலைகள் வீசியதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 5000 மக்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால திட்டங்கள்
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஆற்றல் தேவை தற்போதைய நிலையை விட இருமடங்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நிலக்கரியை உபயோகப்படுத்துவது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம். சரி, வேறு என்னதான் வழி இருக்கிறது நம்மிடம்?. இருக்கிறது. முதலாவதாக சூரிய ஆற்றல் மூலமாக தயாரிக்கப்பட்டுவந்த 4 ஜிகா வாட்ஸ் மின்சாரத்தை 2015 ஆண்டிலேயே 30 ஜிகாவாட் அளவு தயாரிக்கும் நிலைக்கு அத்துறையில் முயற்சிகள் எடுக்கப்பட்டது. உண்மையிலேயே இது மிகமுக்கிய சாதனையாகும். இதன்மூலம் 8 சதவிகித மின்சார தேவையை தீர்க்கலாம்.
வரும் 2022 க்குள் இந்தியாவில் மரபுசாரா ஆற்றலைப் பயன்படுத்தி 175 ஜிகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 100 GW சூரிய ஒளி மூலமாகவும், 60 GW காற்றின் மூலமாகவும், 10 GW மாற்று எரிபொருள் மூலமாகவும் மீதமுள்ள 5 GW நீரியக்க சக்தி மூலமாகவும் பெறப்பட இருப்பதாக இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.