இன்று நம் அனைவருக்கும் இந்தியாவை ஆளும் ஒரு கட்சியின் ‘ரகசிய நோக்கம்’ தெரிய வந்திருக்கும். இன்று, பா.ஜ.க வின் திரு.எச்.ராஜா அவர்கள் சமூக ஊடகத்தில் ஒரு கருத்தை பதிந்திருந்தார். அதை நீங்கள் கீழே காணலாம்.
இதன் பொருள் உங்களுக்குத் தெரியும். எச்.ராஜா வின் கருத்துக்கு பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களின் எதிர் கருத்தை நாம் பார்க்கலாம்.
ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
பெரியார் சிலையை சேதப்படுத்துவோரின் கை, கால்கள் துண்டு துண்டாக்கப்படும் – வைகோ
தந்தை பெரியாரை அவமதித்த எச்.ராஜாவை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்! – ராமதாஸ்
பெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது – திருமாவளவன்
முடிந்தால் பெரியார் சிலை மீது இன்றே கை வைத்துப்பாருங்கள் – சுப.வீரபாண்டியன்
இவர்கள் அனைவருக்கும் வயது 50 க்கும் மேல். இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் இவர்களில் பலரும் இவ்வளவு தீவிரமாக செயலாற்ற மாட்டார்கள். அப்போது யோசித்து பாருங்கள், தமிழகத்தின் நிலையை.
அதிமுக-விடம் இருந்து இதுவரை எந்த கண்டனமும் இல்லை.
மாற்று அரசியல் சக்தி என்று கூறிக்கொள்ளும் விஜயகாந்திடம் இருந்து இதுவரை கருத்து எதுவும் இல்லை. சீமான் எதிர்க்கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
ஏனைய பிற மாற்று சக்திகள் ‘தமிழர்களுக்கு ஒரு தலைவன் வேண்டும்’ என்று நேற்று கூறிய ரஜினிகாந்த் (வயது: 67) மற்றும் மய்யம் என்று கூறிக்கொண்டு வரும் கமல்ஹாசன் (வயது: 63). இவர்கள் இருவரும் இது பற்றி கருத்துக்கள் கூறமாட்டார்கள். ஏனெனில், இவர்கள் இருவரது ‘டிசைன்’ அப்படி. மக்களும் இவர்களிடம் எந்த கருத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பது வேறு. இவர்கள் பின்னால் நாம் ஓடினால் நம்மை கைவிட்டு விடுவார்கள் என்பது தெளிவு. மேலும், ரஜினி மற்றும் கமல் இருவருமே ஒரு தலைமுறையை நிச்சயம் மழுங்கடிக்கச் செய்யவே உருவாக்கப்பட்டவர்கள். தலைவனில்லா சூழல் என்று கூறி தலைவனில்லா தமிழகமாக அல்லது தலைவன் உருவாக முடியா தமிழகமாக இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் மாற்றுவது தான் இவர்கள் கொள்கை போல் தெரிகிறது. யோசித்தால் நமக்குத் தான் தலை சுற்றும்.
திருமுருகன் காந்தி இயக்க அரசியல் தான் பெரிது; தேர்தல் அரசியல் தனது நோக்கம் அல்ல என்கிறார்.
மக்கள் பெரிதும் நேசிக்கும் சகாயம் அரசியலுக்கு வருவார் என்பதெல்லாம் கனவு தான். இளைய தலைமுறை தலைவன் என உதயநிதியை நினைப்பதே கொடுமையாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பலரும் எச்.ராஜா கூறியது நடக்காது, பலிக்காது, சாத்தியமே இல்லை என்று கருத்துக்களை பதிவிட்டுவரும் வேளையில், கொஞ்சம் யோசித்து பாருங்கள் மக்களே! நாம் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்காமல், இவ்வளவு வலுவான பா.ஜ.க வை எதிர்கொள்வது என்பது எப்படி சாத்தியம்?
பா.ஜ.க வின் திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கிலானவை. ஏற்கனவே இங்கிருக்கும் அரசு அடிமை அரசாக மாறிவிட்டது. இன்னும் 10 வருடம் அல்லது 20 வருடம் கழித்து நடக்க இருப்பதை நினையுங்கள். கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இருந்தால் இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலையை நினைத்துப்பாருங்கள்.
இப்போது சொல்லுங்கள் எச்.ராஜா கூறியது சாத்தியமா இல்லையா என்று. நமக்கான வருங்கால தலைவனை எப்போது உருவாக்கப் போகிறோம்?
வாழ்க தமிழகம்!
வாழ்க வளமுடன்!!
அமைதி! அமைதி! அமைதி!