[சட்டம் தெளிவோம்]: அத்தியாயம் 5 – சொத்துகளை வாங்கும் முன்பு நாம் கவனிக்க வேண்டியவை – பகுதி 1

Date:

சொந்த வீடு என்பது பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. ஏனெனில் அது அந்தஸ்த்தின் குறியீடாகவும், தங்களின் அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்க ஆசைப்படும் சொத்தாகவும் கருதப்படுகிறது. சொத்து வாங்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால், அவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே, சொத்து வாங்கும் முன் நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய, நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களை இங்கே இரண்டு பகுதிகளாகக் காண்போம்.

1514160017bசொத்து வாங்கும் முன்பு, அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக மக்களுக்கு, நிலம்/வீடு வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்களை சரி பார்க்க வேண்டும், மற்றும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்தத் துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.நிலம் வாங்குவதற்கு முன், அவற்றைப் பற்றிய முழு விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும், பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர். நிலம் தொடர்பான விவரங்கள் இரு துறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை.

2. வருவாய்த்துறை.

அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

1. பதிவுத்துறை :

நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

ba58456ebff2cbdd3bc15785c726faef603b765a2. வருவாய்த்துறை :

இந்தத் துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேடுகளில் இருக்கும்.

 • பட்டா (Patta).
 • சிட்டா (Chitta).
 • அடங்கல் (Adangal).
 • அ’ பதிவேடு (‘A’ Register).
 • நிலத்திற்கான வரைபட எல்லை (FMB).

பட்டா (Patta) :

நிலத்தின் உரிமை நமக்குத் தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துத் தான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும்:-

1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்,

2. பட்டா எண்,

3. உரிமையாளர் பெயர்,

4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision),

5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்ற விவரங்கள்,

6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை,

சிட்டா (Chitta) :

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

‘அ’ பதிவேடு (‘A’ Register) :

இப்பதிவேட்டில்,

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision),

2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),

3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,

4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,

5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) : நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

27912546 1298731980270683 5239445903549724534 o e1534833239331கிரயப் பத்திரம் (Sale Deed):

நீங்கள் சொத்து வாங்கும் முன் உங்கள் விற்பளையாளரின் கிரயப் பத்திரம் அசல் பத்திரம்தானா என்று உறுதி செய்யப் பட வேண்டும். ஏனெனில் போலிப் பத்திரங்கள் மூலம் ஏமாறும் நபர்கள் ஏராளம். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி,

2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி,

3. எவ்வளவு அளவு,

4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது,

5. சொத்து விவரம்,

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும். அவையாவன,

 • பதிவு எண் மற்றும் வருடம்,
 • சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி,
 • சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி,
 • புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்,
 • பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை,
 • இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி,
 • மொத்தம் எத்தனை பக்கங்கள்,
 • மொத்தம் எத்தனை தாள்கள்,
 • தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்,
 • சொத்து ஆவணங்கள்.
அறிந்து தெளிக!!
01.07.2006 முதல் தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும், சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்றும் ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.2009 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

முத்திரைத்தாள் என்றால் என்ன? சொத்து வாங்க முத்திரைத்தாள் அவசியமா? முத்திரைத்தாள் வாங்கும் வழிமுறைகள் என்னென்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

1 COMMENT

Comments are closed.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!