சட்டம் தெளிவோம் ! – அத்தியாயம் 6 – சொத்துகள் வாங்க முத்திரைத்தாள் முக்கியமா ? – பகுதி 2

1
157
Sattam_Thelivom_Series

சென்ற வாரம் ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்பு நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்த்தோம். இந்த வாரம் முத்திரைத்தாள் என்றால் என்ன? சொத்து வாங்க அது அவசியமா என்பது பற்றிப் பார்ப்போம்.

  • முத்திரைத் தாள்கள் என்பது, சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை எழுதி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யக் கொடுக்க வேண்டும்.
  • இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம் 1899 என்ற சட்டம், மேற்படி முத்திரைத் தாள்கள் மற்றும் அதன் நடவடிக்கைகளை வரையறுத்தது.
  • முத்திரைத் தாள்கள் & முத்திரை ஸ்டாம்புகள் மூலமாக அரசு தங்களுடைய வரியை வசூலிக்கின்றன.

முத்திரைத்தாள் அவசியம்

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்குப் பெயர் Guide line value.

நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்தப் பெயர் Guide line value-க்கு, 8% தொகைக்கு  முத்திரைத் தாள்களாக வாங்கி, அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்களைத் தட்டச்சு செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் வரைவோலையாகச் (Demand Draft) செலுத்த வேண்டும்.

இதற்கு, 41 என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் வரைவோலையாகச் (Demand Draft) செலுத்த வேண்டும். வரைவோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து 1%  தொகை மற்றும் கணினிக் கட்டணம் ரூபாய் 100 ஆகியவற்றைப் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் வரைவோலையாகவும் செலுத்த வேண்டும்.

பத்திரப்பதிவு

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்களைத் தட்டச்சு செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காகத் தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.