கோடைகாலம் வந்துவிட்டாலே தமிழகம் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் திணறி தள்ளாடி விடும். அதுவும் சென்னையின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. சராசரியாக ஒரு நாளில் சென்னைக்கான குடிநீரின் அளவு சுமார் 18 கோடி லிட்டர்கள். அரசு மூலமாக 9 கோடி லிட்டர்களும், தனியார் குடிநீர் நிறுவனங்கள் மூலமாக 1 கோடி லிட்டர்களும் விநியோகிக்கப்படுகின்றன.

சென்னையின் நிலத்தடி நீரெல்லாம் எப்போதோ அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு சென்னைவாசிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுமாராக குடும்பத்திற்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் நீரானது தேவைப்படுகிறது. தனியார் நிறுவனங்களிடம் ஒரு கேன் 20 முதல் 40 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய வாட்டர் ஏடிஎம் மூலம் 20 லிட்டர் நீரை ஏழு ரூபாய்க்கு நம்மால் பெறமுடியும். சென்ற வருடமே இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தாம்பரம் செங்கல்பட்டு பூந்தமல்லி ஆகிய இடங்களில் 400 வாட்டர் ஏடிஎம் மையங்கள் சென்ற ஆண்டு மட்டும் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 800 மையங்களை அரசு திறக்க இருக்கிறது.
எப்படி செயல்படும் இந்த வாட்டர் ஏடிஎம் ?
சென்னை மாநகராட்சியிடமிருந்து தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்கின்றன. 250 சதுர அடி கொண்ட நிலத்தையும், மெட்ரோ குடிநீரையும் மின்சார வசதியும் வழங்கிவிடும். வழங்கப்பட்ட நீரிணை சுத்திகரிப்பு செய்து குடிநீராக மாற்றி ஏடிஎம் மையத்தில் நிரப்பி விட வேண்டும் இது தனியார் நிறுவனத்தின் பொறுப்பு. இதனைக் கண்காணிக்க ஒவ்வொரு மையத்திற்கும் அந்த பகுதியிலிருந்து இரண்டு பெண்கள் நியமிக்கப்படுவர்.
இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு ப்ரீபெய்டு கார்டு ஒன்றினை வழங்கிவிடுவார்கள். அதனை ரீசார்ஜ் செய்துகொண்டால் போதும். ஒவ்வொருமுறை தண்ணீர் பிடிக்கும்போதும் பணம் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு 20 லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் சென்னை மாநகராட்சிக்கு இதன் மூலம் வருவாயாகக் கிடைக்கும். சென்னை மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்தினால் சாதாரண மக்கள் மிக அதிக விலை கொடுத்து வாட்டர் கேன்களை வாங்கும் சிரமத்தில் இருந்து விடுபடுவர். ஆனாலும் குறைந்த விலையில் குடி நீரை வழங்குவது மக்களிடையே குடிநீர் தேவையை அதிகரித்துவிடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போதைய நிலையில் சென்னையில் மட்டுமே இந்த ஏற்பாடானது செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இத்திட்டம் தமிழகத்தின் பிரதான மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன