பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகள், வதந்திகளுக்குப் பிறகு ஒருவழியாக தாயகம் திரும்பியிருக்கிறார் அபிநந்தன். உலக நாடுகளின் அழுத்தம், எதிர்கால உள்நாட்டுப் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்தது. நேற்று மாலை வாகா எல்லைவழியாக அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். சினிமாக்களில், செய்திகளில் அடிக்கடி கேள்விப்படும் இந்த வாகா எல்லை எங்கிருக்கிறது? ஏன் அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? பார்க்கலாம்.

வாகா எல்லை
இந்திய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் ஆகிய இரண்டையும் பிரிக்கும் 435 மைல் எல்லையைத் தான் எல்லைக்கட்டுப்பட்டுப் பகுதி என்றழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் Line of Control. இந்த எல்லையில் அமைந்திருக்கும் கிராமமே வாகா. இது பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும், இந்தியாவின் அம்ரிஸ்தர் நகரத்தையும் பிரிக்கிறது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்கு செல்லும் Grand Trunk Road இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. பொதுவாகவே நாட்டின் எல்லையில் அந்நாட்டின் கொடியினைப் பறக்கவிடுவது இயல்பு. அதேபோல் சூரிய அஸ்தமனத்திற்கு முன் கொடியானது இறக்கப்பட்டுவிட வேண்டும். இந்திய மரபின்படி கடந்த 60 ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடந்துவருகிறது. பாகிஸ்தானிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கொடி இறக்குதல்
பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளும், இந்திய எல்லயோர காவல்துறை அதிகாரிகளும் தத்தம் கொடிகளை இறக்கும் நிகழ்ச்சி தினந்தோறும் மாலை 4 மணியளவில் நடைபெறும். அப்போது நட்பு நிமித்தமாக இருநாட்டு வீரர்களும் கைகுலுக்கி, வணக்கம் செய்துகொள்வர். இதனைக்காண ஏராளமான உள்நாட்டு/வெளிநாட்டு பயணிகள் தினமும் வாகாவிற்குப் பயணிக்கிறார்கள்.

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான 60 ஆண்டுகால வரலாற்றுச் சின்னமாக வாகா பார்க்கப்படுகிறது. அத்தோடு, உலகம் முழுவதும் பிரபலமான இந்த கிராமம் இருநாட்டு ராணுவ வீரர்களின் தினசரி நட்பு நடவடிக்கைகளால் இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் நட்பு மையமாவும் திகழ்கிறது.
2014 தாக்குதல்
பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் இருநாடுகள் சார்பாகவும் வாகாவில் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு, நட்பின் அடையாளச் சின்னம், மற்ற பாதைகளைக் காட்டிலும் சிறந்தது போன்ற காரணங்களினால் தான் அபிநந்தன் வாகாவின் வழியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். உலக நாடுகளுக்கு மத்தியில் பாகிஸ்தானின் இமேஜை தூக்கிப்பிடிக்கும் செயலாகவும் இது இருக்கும் என பாகிஸ்தான் நினைத்தது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிட்டத்தட்ட சரியாகவே நினைத்திருக்கிறது எனலாம்.