ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி – கெடுவைத் தளர்த்தியது அமெரிக்கா

0
157
Credit : Nikkei Asian Review

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது நவம்பர் 5 – ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என கெடு விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது சற்று பின் வாங்கியிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடன் முந்தைய அரசு செய்துகொண்ட அணு சக்தி ஒப்பந்தம் பைத்தியக்காரத் தனமானது. அந்த ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று அறிவித்தார். சொன்னது போலவே  ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

Credit : DC

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5 – ஆம் தேதிக்குப் பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இந்தியாவின் பெருகி வரும் எரிபொருள் தேவைக்கு ஈரானில் இருந்து தான் பெரும அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டிருக்கும் நிலையில், நவம்பர் 5 – ஆம் தேதிக்குப் பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்தியாவிற்கு இந்தக் கெடுவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஈரானிடம் இருந்து 8 நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கத் தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்திருக்கிறோம்.

இந்த நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்குத் தற்காலிகமாக அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இதனை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ”ஈரான் ஈட்டும் பணத்தை பயங்கரவாதத்துக்குச் செலவிடுகிறது. ஆகவே, அந்த நாடு நிதி குவிப்பதைத் தடுக்க முயன்று வருகிறோம். ஈரானிடம் இருந்து நவம்பர் 5 – ஆம் தேதிக்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தோம்.

ஆனாலும், சர்வதேசச் சூழலை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து 8 நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கத் தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்திருக்கிறோம். விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளும் விரைவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு இதனைத் தொடர முடியாது” என தெரிவித்துள்ளார்கள்.

ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிகமாக விலக்கு அளித்துள்ள போதிலும், சீனாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இது குறித்து சீனாவுடன், அமெரிக்கா தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.