அமெரிக்காவின் அச்சுறுத்தல் – தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் காட்டும் முனைப்பு !!

0
78

“அவர்கள் மாறவில்லை என்றால் நான் உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுவேன்” என ப்ளூம்பெர்க் (Bloomberg) ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்துக்கான விதிமுறைகளை வகுக்கவும், நாடுகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை தீர்க்கவும் உலக வர்த்தக அமைப்பு (WTO) நிறுவப்பட்டது.

உள்ளூர் தொழில் அமைப்புகளை வெளிநாட்டு சந்தையிடமிருந்து பாதுகாக்கப் பல வரிகளை விதித்து வரும் டிரம்ப், உலக வர்த்தக அமைப்பால் அமெரிக்கா நியாயமாக நடத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Credits : Financial Review

டிரம்பின் இந்த அச்சுறுத்தல், அவரின் வர்த்தகக் கொள்கைகளுக்கும் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் வெளிப்படையான வர்த்தக முறைக்கும் உள்ள முரண்பாட்டைக் கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவின் இறையாண்மையில் தலையிடுவதாக அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதியான ராபர்ட் லிதிசைர் (Robert Lighthizer) குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிரம்பின் குற்றச்சாட்டுகள் என்ன?

இது இன்று நேற்று நடப்பதல்ல. தான் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னில் இருந்து உலக வர்த்தக நிறுவனம் நியாயமற்றதாக நடந்து கொள்வதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“உலக வர்த்தக நிறுவனம், அனைவருக்கும் பயன் அளிக்கிறது ஆனால் அமெரிக்காவுக்கு இல்லை நாங்கள் பெரும்பாலான வழக்குகளில் தோற்றுப் போகிறோம் ” என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கடந்த வருடம் அவர் தெரிவித்தார்.

சமீப காலங்களில் பழிவாங்கும் விதத்தில் பல வர்த்தகப் போர்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கது சீனாவுடனான வர்த்தக சண்டை. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்துள்ளார்.

Credit : SkyNews

அடுத்த வாரத்தில் மூன்றாம் கட்டமாக சீனப் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர்கள் வரை வரி விதிப்பது குறித்து அறிவிக்கப்படும் என ப்ளூம்பெர்க் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து நேர்காணலில் கேட்டபோது, அது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது என டிரம்ப் தெரிவித்தார்.

இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கு அதே மதிப்பில் சீனா வரி விதித்தது. மேலும், உலக வர்த்தக அமைப்பில் புகாரும் தெரிவித்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை அமெரிக்கா மீறுவதாக தெளிவாகத் தெரிகிறது என சீனாவின் வணிகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிற ஒப்பந்தங்கள் குறித்தான டிரம்பின் அச்சுறுத்தல்கள் என்ன?

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ, வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைச் (NAFTA ) சீரமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், அது ஒரு நல்ல ஒப்பந்தம் என்றும் இரண்டு நாடுகளுக்கும் சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.

எந்த நிலையிலும் தன் வல்லரசு நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வருவதை அமெரிக்கா விரும்புவதில்லை.

1994-ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த ஒப்பந்தம் தொடர்பான மறுபேச்சுவார்த்தைக்கு பலமுறைகள் வலியுறுத்திய டிரம்ப், அமெரிக்காவில் உற்பத்தி ரீதியிலான பணிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக வாகன உற்பத்தி துறையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1 ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருடாந்திர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடா, இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக உள்ளது. இறுதியாக இந்த ஒப்பந்தம் கனடாவின் சம்மதம் மற்றும் கையெழுத்துடன் முழுமை பெறும்.

உலக நாடுகளின் பெரியண்ணா

அமெரிக்கா எப்போதும் உலக நாடுகள் அனைத்திற்கும் பெரியண்ணாவாக இருக்க விரும்புகிறது. தான் வைத்தது தான் அனைத்து நாடுகளுக்கும் சட்டமாக இருக்க வேண்டும்  என்பது அமெரிக்காவின் விருப்பமாக இருக்கிறது. இதற்குப் பிற நாடுகள் மீது அமெரிக்கா விதித்த, விதித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரத் தடைகளே எடுத்துக்காட்டு.

எந்த நிலையிலும் தன் வல்லரசு நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வருவதை அமெரிக்கா விரும்புவதில்லை. அதிலும் டிரம்ப் போன்ற ஒரு அதிபர் இருக்கும் அமெரிக்கா ஒரு போதும் அதை விரும்பாது. இப்போது உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக அச்சுறுத்துவதும் தன் பெரியண்ணா பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாக இருக்கலாம்.