மீன்பிடித்தொழில் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான ஆதாரம் ஆகும். அதே சமயத்தில் சவால்களும், ஆபத்துகளும் இத்தொழிலில் ஏராளம்.
கொந்தளிப்பான கடலிலும், உப்புத் தண்ணீரிலும் தங்கள் முழு வாழ்வையும் கரைக்கின்றனர் மீனவர்கள். ஆனால், உலகம் மீன்களை விரும்புகிறது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), உலகில் 3 பில்லியன் மக்கள் தொடர்ந்து மீன் சாப்பிடுவதாகக் கூறுகிறது. உலகின் பல பிராந்தியங்கள், அவற்றின் வளர்ச்சி, அங்கு வாழும் சமூகங்கள் அனைத்தும் வாழ்வியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மீன் பிடித்தல் தொழிலைச் சார்ந்துள்ளன. ஆனால், மீனவர்களுக்கான பாதுகாப்பு என்பது சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில், மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம்.
- எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதால் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.
- கடலுக்குள் சென்ற பின்பு, தொழில்நுட்ப வசதிகள் குறைபாட்டால் சரியான நேரத்தில் புயல் குறித்த எச்சரிக்கைகள் அவர்களை சென்றடைவதில்லை.
- கடலுக்குள் சென்று சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்க போதிய நடவடிக்கைகள் எடுக்க இயலாமல் ஒக்கி புயலின் போது பல மீனவர்கள் மாண்ட செய்தியும் நாம் அறிவோம்.
இதற்கெல்லாம் தீர்வளிக்கும் விதமாகத் தான், ஆழ்கடலுக்குள் செல்லும் படகுகளில் ட்ரான்ஸ்பாண்டர் என்றழைக்கப்படும் கருவியைப் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடி படகுகள் உள்ளிட்ட அனைத்து மீன்பிடிக் கைத்தொழில்களும் வரும் நாட்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (ISRO) உருவாக்கிய கண்காணிப்பு சாதனங்களுடன் பொருத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பாண்டர்கள் எவ்வாறு செயல்படும் ?
ட்ரான்ஸ்பாண்டர்கள் நேரடியாக செயற்கைக் கோள்களோடு இணைக்கப் பட்டிருக்கும். நாம் மீனவர்களுக்கு அனுப்ப விரும்பும் செய்தியை அலைக்கற்றை மூலமாக செயற்கைக்கோளுக்கு அனுப்பி விட்டால், அது அத்தகவலை ட்ரான்ஸ்பாண்டர்களுக்கு அனுப்பும் பணியைச் செய்யும். பின், அதைபெற்றுக் கொண்டு ட்ரான்ஸ்பாண்டர்கள் அனுப்பும் பதில் தகவலை மீண்டும் செயற்கைகோள் பெற்று நமக்கு அனுப்பும்.

- எதிர்பாரா விதமாக மீனவர்கள் கடலுக்குச் சென்ற பின் புயலோ, மழையோ உருவானால் அதைப்பற்றி மீனவர்களுக்கு ட்ரான்ஸ்பாண்டர்கள் மூலமாக தகவல்கள் அனுப்பலாம்.
- ட்ரான்ஸ்பாண்டர்களைப் பயன்படுத்தி, மீனவர்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடலாம்.
- நாட்டின் அனைத்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கும் ட்ரான்ஸ்பாண்டர்களைப் பொருத்தி விட்டால், கடல்வழி நடக்கும் அந்நிய ஊடுருவல்களை சுலபமாகக் கண்டறியலாம்.
இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், மீனவர்களும் சற்று பாதுகாப்பாக கடலுக்குள் செல்லுதல் நலம் பயக்கும். உயிர் காக்கும் உடைகளை (Life Jackets) படகில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அரசு தரப்பில் அறிவிக்கப்படும் புயல் மற்றும் சூறாவளி எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு கடலுக்குள் செல்லும் திட்டத்தை மாற்றியமைக்கலாம். மனிதனின் உயிர் அனைத்தையும் விட இன்றியமையாதது அல்லவா?