பிளாஸ்டிக் இல்லாத் தமிழகம் சாத்தியமா?

0
107

தமிழகத்தில் முற்றிலும் பிளாஸ்டிக்கைத் தடை செய்யும் அறிவிப்பைக் கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 பிறப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இன்னும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்ததாகவோ, அல்லது அது குறித்த விழிப்புணர்வு விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவோ தெரியவில்லை.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன? நம் முன் நிற்கும் சவால்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்

முற்றிலுமாகப் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டாலும், ஒரு சில உபயோகங்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை,

  • வனத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் நாற்றாங்காலுக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்.
  • ஏற்றுமதிக்காக மட்டுமே சிறப்பாகத் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
  • பால் மற்றும் பால் பொருட்களான தயிர், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உறைகள்
  • இந்தியத் தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மக்கி உரமாகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள்
  • உற்பத்தித் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள்

தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள்

மேற்கண்டவை தவிர பிற பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பாரபட்சமின்றித் தடை செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே.

  • தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள்,
  • பிளாஸ்டிக் பைகள்,
  • பிளாஸ்டிக் குவளைகள்,
  • பிளாஸ்டிக் தட்டுகள்,
  • தண்ணீர் பாக்கெட்டுகள்,
  • பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா),
  • பிளாஸ்டிக் கைப்பைகள்

உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடையின் அவசியம்

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.

அறிந்து தெளிக !!
2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவுகள் மனித இனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக உயிரினங்களுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் நிலத்தில் மாசுபாட்டை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீர் நிலைகளிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, டாக்டர் சந்தோஷ் பாபு மற்றும் ராஜேந்திர ரத்னூ ஆகிய மூன்று பேரும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கூறும் மாற்று வழி 

தற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி,

  • வாழையிலை,
  • பாக்குமட்டை,
  • காகித சுருள்,
  • தாமரை இலை,
  • கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள்,
  • மரப்பொருட்கள்,
  • காகித குழல்கள்,
  • துணி மற்றும் காகிதப் பைகள்

உள்ளிட்டவை அடங்கிய பாரம்பரியப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன் நிற்கும் சவால்கள்

குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் அரசு பல்வேறு சவால்களைச் சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கூறப்படும் பொருட்களுக்கான உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தி வருகிறதா?

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு முறையான விழிப்புணர்வு அளிக்கப்பட்டதா?

முழுமையான செயல்வடிவத்தில் அரசு இறங்குமா? அல்லது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது போல இதுவும் இருக்குமா?

பிளாஸ்டிக் தடையால் பாதிக்கப்படுவோருக்கான மாற்று வழிகள் என்ன?

போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இத்தனை சவால்களும் அரசின் முன் நிற்கின்றன. இவற்றையெல்லாம் விட பெரிய சவால், பிளாஸ்டிக்கிற்குப் பழக்கப்பட்ட மக்கள் தான். தற்போதைய சௌகரியத்திற்காக நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், அடுத்த தலைமுறைக்கான வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன என்பதை மக்கள் உணர வேண்டும். அரசு தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது. மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே, இப்போதிருந்தே சிறிது சிறிதாக பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கத் தொடங்குங்கள்.

இயற்கையும் பூமியும் அனைவருக்குமானது. நீடூழி வாழ்க.