27 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஜோதி பாசுவின் நினைவிடம் அமைப்பதில் இருக்கும் சிக்கல்!!

0
106
Jyoti-Basu-
Credit:rightlog.in

சுதந்திர இந்தியாவில் மிக நீண்டகாலமாக முதலமைச்சராக இருந்தவர் மற்றும் இந்தியாவின் ஆகப்பெரும் கம்யூனிஸ சித்தாந்த தலைவருமான திரு.ஜோதி பாசுவின் பிறந்த நாள் நேற்று அம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. 1977 ஆம் ஆண்டு முதல் 2௦௦௦ ஆண்டு வரை அம்மாநில முதலமைச்சராக இருந்தவர் திரு.ஜோதி பாஸு. மேலும் இந்திய மண்ணில் கம்யூனிச விதையை விதைத்தவர். இந்தியாவின் 10 வது பிரதமர் ஆகும் வாய்ப்பு கூட அவருக்கு கிட்டியது. ஆனால் சிறிதும் பதவி ஆசை இல்லாமல் அச்சலுகையை நிராகரித்தவர் திரு. ஜோதி பாஸு. வயது முதிர்வு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் காலமானார். இந்நிலையில் அவருக்கு ஆராய்ச்சி மற்றும் அருங்காட்சியகம் ஒன்றை கட்ட, அம்மாநிலத்தின் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் கடைசி மாதங்களின் ஆட்சியின்போது, ராஜர்ஹத் நகரில் ஐந்து ஏக்கர் பரப்பை சுமார் 4.15 கோடி ரூபாயில் அக்கட்சி வாங்கியிருந்தது.

Jyoti-Basu-
Credit:rightlog.in

“ஏற்கனவே இந்தியாவில் நில உச்சவரம்புச் சட்டத்தை  (1958) அமுல்படுத்திய கேராளாவின் முன்னாள் முதலமைச்சர் திரு.EMS. நம்பூதிரிபாட் அவர்களுக்கும் அம்மாநிலத்தில் அருங்காட்சியகம் மற்றும் நினைவேந்தல்கள் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியாரால் அமைக்கப்பட்டுள்ளன.”

வங்கதேசம் உருவான போது, அதிகரித்த அகதிகளால் அம்மாநிலத்தில் தொழில் மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. மேலும் சீனப் போரால் ஏற்பட்ட கம்யூனிசப் பிரிவினை, நக்சலைட்டுகள் மற்றும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகளின் உருவாக்கம் போன்றவை காரணமாக மேற்குவங்கம் துயருண்டபோது மாநிலத்தில் கல்விக்கும் விவசாயத்திற்கும் முக்கியத்துவம் தந்தவர். அதில் முன்னேற்றமும் கண்டவர்.   (நக்ஸல்பாரி – டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய கிராமம்- இங்கேதான் முதல் முதலாக பண்ணையார்களுக்கு எதிராக தோட்டக்கூலித் தொழிலாளர்களின் கலவரம் வெடித்தது. அதற்கு தலைமை ஏற்றவர் சாரு மஜூம்தார் எனும் தீவிர கம்யூனிஸ சித்தாந்தவாதி)

மம்தா பேனர்ஜீயின் ராஜ தந்திரம்

 வங்கத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த ஐந்து ஏக்கர் நிலமானது கம்யூனிஸ்ட்டுகளின் எதிரியாக திகழ்ந்த மற்றும் கம்யூனிஸ்டுகளே ‘இவர் ஒரு மாவோயிஸ்ட்’ என வர்ணித்த மமதா பானர்ஜி அம்மையாரின் கரங்களுள் உள்ளது.

jyoti basu che
Credit:India Today

ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில், அம்மாநில கம்யூனிஸ்ட் தலைமைகளான சுஜன் சக்ரபோர்த்தி, அசோக் பட்டாச்சார்யா மற்றும் ராபின் தேப் ஆகியோர் இந்நிலம் தொடர்பாக பேச, அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜீயை சந்தித்தனர். முதலமைச்சரும் நிலம் கையகப்படுத்துதலுக்கு ஒத்துக்கொண்டதாகவே தெரிகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே மத்தியில் பாஜக ஆட்சியமைத்தபோது இந்த அருங்காட்சியகம் குறித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு கம்யூனிஸ்டுகளை மம்தா பானர்ஜி கேட்டுகொண்டிருந்தார். தற்போது இரண்டாம் முறையாக பாஜக ஆட்சிக்கு வந்ததாலும் மாநிலத்தில் அதன் ஊடுருவலை தடுப்பதற்கும் கம்யூனிஸ்ட்களுடன் ஒத்துப்போக திரிணாமூல் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த நிலத்தை ஜூலை 8 ஆம் தேதிக்குள் கம்யூனிஸ்டுகளுக்கு வழங்க வாக்கு கொடுத்திருந்தார். ஆயினும் அதுகுறித்து எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் வருத்தம் கொண்டுள்ளனர்.  

SAFRICA-INDIA-JYOTI BASU
Credit: Firstpost

ஆனால் இந்த ஐந்து ஏக்கர் தனிப்பட்ட தரைவார்ப்பாக இல்லாமல், சட்டமன்றத்தில் வாயிலாக கொடுக்கப்படுவதே எதிர்ப்புகளை குறைக்கும் என திரிணாமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவில் இருந்து 16 நிமிட பயண தூரத்தில் உள்ள ராஜர்ஹத் நகரத்தை ஜோதி பாஸு நகராக பெயர் மாற்றம் செய்யவும் சிபிஐ(எம்) ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது